பதில்: _”உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக. உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக” (லூக். 10:27)_ என்று இயேசு கிறிஸ்து கூறினார். அதை இணை. 6:5 மற்றும் லேவி. 19:18 என்ற பழைய ஏற்பாட்டு வசனங்களை சேர்த்து அப்படி கூறினார். _”அன்பாயிரு”_ என்று மட்டும் சொன்னால் போதுமென்றால் கடவுள் மோசேயிடம் *10 கற்பனைகளைக்* கொடுக்கவேண்டிய தேவையே இல்லையே!
_”உன்மீது நீ அன்புகூர்வது போல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்புகூர்வாயாக” என்னும் இந்த ஒரே கட்டளையில் திருச்சட்டம் முழுவதும் நிறைவு பெறுகிறது (கலா. 5:14)_ என்றும், _”விபசாரம் செய்யாதே, கொலை செய்யாதே, களவு செய்யாதே, பிறருக்குரியதைக் கவர்ந்திட விரும்பாதே” என்னும் கட்டளைகளும், பிற கட்டளைகளும், “உன் மீது அன்பு கூர்வது போல், உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக” என்னும் கட்டளையில் அடங்கியுள்ளன (உரோ. 13:9)_ என்றும் திருத்தூதர் பவுல் கூறுகிறார்.
அப்படியானால், அன்புக்குள் எல்லா கட்டளைகளும் அடங்கியிருக்கிறது என்று அறிந்த திருத்தூதர் பவுல், _கெட்ட வார்த்தைகள் ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்படலாகாது (எபே. 4:29), யாவரோடும் சமாதானமாயிருங்கள் (ரோமர் 12:18), கிறிஸ்து உங்களை ஏற்றுக்கொண்டது போல, நீங்களும் ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்ளுங்கள். அப்போது கடவுளைப் பெருமைப்படுத்துவீர்கள் (உரோ. 15:7), ஒருவரை ஒருவர் பொறுத்துக்கொள்ளுங்கள். பழி வாங்காதீர்கள்; எதிரி பசியாயிருந்தால் அவர்களுக்கு உணவு கொடுங்கள் (ரோம. 12:19,20), ஒருவரைப்பற்றி ஒருவருக்கு ஏதாவது முறையீடு இருந்தால் மன்னியுங்கள். ஆண்டவர் உங்களை மன்னித்ததுபோல நீங்களும் மன்னியுங்கள் (கொலோ. 3:13)_ என்றெல்லாம் போதித்திருக்கவேண்டிய தேவை இல்லையே! “அன்பாயிருங்கள்” என்று மட்டுமே போதித்திருக்கலாமே!
இயேசு கிறிஸ்து, _”உங்கள் வலக்கண் உங்களைப் பாவத்தில் விழச்செய்தால் அதைப் *பிடுங்கி எறிந்து விடுங்கள்.* உங்கள் உடல் முழுவதும் நரகத்தில் எறியப்படுவதைவிட உங்கள் உறுப்புகளில் ஒன்றை நீங்கள் இழப்பதே நல்லது. உங்கள் வலக்கை உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதையும் *உங்களிடமிருந்து வெட்டி எறிந்து விடுங்கள்.* உங்கள் உடல் முழுவதும் நரகத்திற்குச் செல்வதைவிட உங்கள் உறுப்புகளில் ஒன்றை நீங்கள் இழப்பதே நல்லது (மத். 5:29,30)_ என்று தன் சீடருக்கு ஏன் போதிக்கவேண்டும்?
_தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம். மாறாக, உங்களை வலக் கன்னத்தில் அறைபவருக்கு மறுகன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள். ஒருவர் உங்களுக்கு எதிராக வழக்குத் தொடுத்து, உங்கள் அங்கியை எடுத்துக்கொள்ள விரும்பினால் உங்கள் மேலுடையையும் அவர் எடுத்துக் கொள்ள விட்டுவிடுங்கள். எவராவது உங்களை ஒரு கல் தொலை வரக் கட்டாயப்படுத்தினால் அவரோடு இரு கல் தொலை செல்லுங்கள். உங்களிடம் கேட்கிறவருக்குக் கொடுங்கள்; கடன் வாங்க விரும்புகிறவருக்கு முகம் கோணாதீர்கள் (மத். 5:39-42)_ என்று ஏன் போதிக்கவேண்டும்?
_யாரையும் தீட்டுள்ளவர் என்றோ, தூய்மையற்றவர் என்றோ சொல்லக்கூடாது” எனக் கடவுள் எனக்குக் காட்டினார் (தி.ப. 10:28)_ என்று திருத்தூதர் பேதுரு கொர்நேலியுவின் வீட்டில் கூறவேண்டிய தேவை இல்லையே! பேதுரு புறவினத்தாரையும் கிறிஸ்துவுக்குள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற கொள்கையை வலியுறுத்த அவருக்கு துப்பட்டி தரிசனம் காட்டவேண்டிய தேவை இல்லையே! _”அன்பு செய்யுங்கள்”_ என்ற கொள்கையை மட்டும் சொன்னாலே போதுமே!
*தசம பாகம், காணிக்கை* என்ற பெயரில் விசுவாசிகளின் பணத்தை வாங்குவதற்காக பாஸ்டர்கள் பல மணிநேர வேதபாட வகுப்புகள் நடத்தவேண்டிய தேவை இல்லையே! _”அன்பாயிரு”_ என்று மட்டும் போதித்தால் போதுமே! அன்புள்ளவன் தானாகவே கொடுப்பானே! _கொடுங்கள்; உங்களுக்குக் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து உங்கள் மடியில் போடுவார்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும் (லூக். 6:38)_ என்று இயேசு கிறிஸ்து போதிக்கவேண்டிய தேவை இல்லையே!