பதில்: ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும், “சிறைப்பட்டோர் விடுதலை அடைவர்; பார்வையற்றோர் பார்வைபெறுவர்” என முழக்கமிடவும், *ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும்* (லூக்கா 4:18) கிறிஸ்து வந்தார் என்று மறைநூல் நம்மை கற்பிக்கிறது. இங்கே கிறிஸ்து சமூக விடுதலையைப் பற்றிப் பேசுகிறார். ஆனால், பெரும்பான்மையான அவிசுவாசிகளுக்கு, கிறிஸ்து சாதியத்திற்கு எதிரானவர் என்று தெரியாது. ஏனென்றால், பெரும்பாலும் எல்லா கிறிஸ்தவர்களும் சாதி உணர்வாளர்களாகத்தான் இருக்கிறார்கள். கிறிஸ்தவத்தில் சாதியம் அதிகாரபூர்வமாக பின்பற்றப்படும் வாழ்வியல் தத்துவம் என்றே பெரும்பான்மையான பொதுவெளியிவர் நினைத்துக்கொண்டிருக்கின்றனர். ஏனென்றால், கிறிஸ்தவர்களில் பெரும்பாலானவர்களுக்கு சாதியம் ஒரு தவறான தத்துவம் என்று தெரியாது. காரணம், போதகர்களே சாதி உணர்வாளர்களாகத்தான் இருக்கிறார்கள். சாதி உணர்வுடைய போதகர்கள் சாதியத்திற்கு எதிராக எப்படி பேசுவார்கள்? கிறிஸ்தவ போதகர்கள் சாதியத்தை எதிர்க்காததால், கிறிஸ்தவமும் இந்துத்துவத்தைப் போன்று சாதி பேதத்தை கடைபிடிக்கும் ஒரு சராசரி பாகுபாட்டு மதம்தான் என்று பிறமக்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அப்படியிருக்க சாதித் தாழ்வு, உயர்வு மனப்பான்மை உடையவர்களை இயேசு கிறிஸ்துவால் விடுவிக்கமுடியும் என்று எப்படி நாம் நிரூபிக்கமுடியும்? அவிசுவாசிகளுக்கு, சாதி பேதம் ஒரு பாவம் என்று உணர்த்துவது முக்கியமல்லவா! அதற்காகவும்தான் சாதி உணர்வு ஒரு பெரும்பாவம் என்று பொதுவெளியில் பேசுகிறோம். எனது உரையைக் கேட்டு பல கிறிஸ்தவர்கள் திருந்தியதுபோல பல இந்துக்களும் திருந்தியிருக்கிறார்கள்.
நான் இயேசுவை புகழ்ந்து பேசி, பாடும்போது எல்லா கிறிஸ்தவர்களும் அகமகிழ்ந்தனர். என்னுடைய நகைச்சுவையை, எவரும் புரிந்துகொள்ளும் எளிய நடையை பலர் பாராட்டினர். ஆனால், கிறிஸ்தவர்களுக்குள் இருக்கும் சாதிப் பாகுபாடுகளே கிறிஸ்தவத்தின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடையாக இருக்கிறது என்பதை நான் ஆய்வுசெய்து கண்டுணர்ந்தபின், சபைகளுக்குள் கிறிஸ்தவர்களிடம் சாதி மறுப்பை பற்றி மறைநூல் அடிப்படையில் பேசினேன். என்னுடைய உரைகள் அறிவுப் பசியோடிருந்த பலருடைய சிந்தனைகளைத் தூண்டின. கடவுள் எனக்கு கொடுத்த அருளால் அடியான் எழுதிய புத்தகங்கள் பலருக்கு பயனுள்ளவைகளாகத் தெரிகின்றன. பலர் சாதியத்தின் கோரப் பிடியிலிருந்து வெளியேறினர். ஆனால், பைபிள் காலேஜ் படித்தும் சாதி உணர்விலிருந்து விடுதலை அடையாத சாதி வெறியுடைய மற்றும் வயிற்றுப் பிழைப்பு பாஸ்டர்கள் என்னை எதிர்க்கத் தொடங்கினர். உண்மையைச் சொல்லப்போனால், பல பாஸ்டர்கள் எனக்கு எதிராக கொலைமிரட்டல் விடுத்தனர். *’பாஸ்டர்கள்’* என்று அழைக்கப்படுபவர்கள் பார்க்க சாந்தமூர்த்திகளைப்போல தோற்றமளித்தாலும் அவர்கள் எவ்வளவு கொடிய சாதி வெறியர்கள் மட்டுமல்ல, கொலைவெறியர்கள் என்பதை அப்போதுதான் நான் உணர்ந்தேன்.
அந்த நிலையில், சாதி மறுப்பைப் பற்றி பேசுவதற்காக ஒரு Youtube Channel ஆரம்பித்தேன். அதை பெரிய அளவில் கிறிஸ்தவர்கள் யாரும் பிறருக்கு அறிமுகம் செய்யவில்லை. ஏனென்றால், கிறிஸ்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் சாதி உணர்வாளர்களே! பலர் ஆங்கிலத்தில் பெயர் வைத்திருந்தாலும், “நான் மீட்கப்பட்டவன்; அபிஷேகிக்கப்பட்டவன்” என்று தங்களை அறிமுகம் செய்தாலும், கிராமங்கள்தோறும் கைப்பிரதிளைக் கொடுத்து மதப் பிரச்சாரம் செய்தாலும், எழுப்புதல் பெருவிழா பிரசங்கியார்களாக இருந்தாலும், நீண்ட அங்கியோடும் லுங்கியோடும் வலம் வந்தாலும், அவர்கள் இந்துத்துவ சாதி உணர்வாளர்களாகத்தான் நடைமுறையில் வாழ்கிறார்கள். ஏனெனில், அது தவறு என்று தெரிந்த போதகர்கள்கூட யாரும் போதிப்பதில்லை. ஏனெனில், அப்படி போதித்தால் சபையிலுள்ள சாதி உணர்வுடைய விசுவாசிகள் சபையைவிட்டு வெளியேறி தன் வருமானம் குறைந்துவிடுமல்லவா!
நான் எழுதிய, “அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?” என்ற புத்தகத்தை, “யாரும் வாங்கக் கூடாது” என்று சாதி உணர்வுப் பாஸ்டர்கள் பலர் வெளியரங்கமாய் அறிவித்தார்கள். ஊழியத்தில் என்னை அழைத்து பயன்படுத்தக்கூடாது என்று சாதி உணர்வுடைய ஊழியர்கள் பகிரங்கமாக அறிவித்தார்கள்.
முறைகேடான பாலுறவு எயிட்ஸ் நோயை வரவழைக்கும் என்ற உண்மையை வெளியே சொல்ல வெட்கமாகத்தான் இருக்கிறது. ஆனால், அந்த நோயிலிருந்து மக்களை காக்கவேண்டும் என்று நாம் விரும்பினால் வெட்கப்படாமல் உண்மையை சொல்லியாக வேண்டுமே! அதேபோல, உலகளாவிய திருச்சபைகளில் இருக்கும் சாதியம் என்ற உயிர்கொல்லி நோயை குணப்படுத்த வெட்கத்தை விட்டு பொதுவெளியில் பேசித்தான் ஆக வேண்டியிருக்கிறது.
நான் சாதி மறுப்பைப் பற்றி கிறிஸ்தவ ஊடகங்களில் பேச எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. எடுத்துக்காட்டு: சத்தியம் காஸ்பல். ஏனெனில், பெரும்பான்மையான கிறிஸ்தவ ஊடகங்களும் சாதிச் சேற்றில் காலூன்றி நிற்பவைதான். அதனால்தான் தற்போது வேறு வழியில்லாமல் பொதுவெளியில் இப்படி சமய சார்பற்ற ஊடகங்களில் பேசுகிறேன். அறிவார்ந்த கிறிஸ்தவர்கள் பலர் இந்த அபூர்வ ஆன்மீகப் பணிகளை வரவேற்கிறார்கள். சாதி உணர்வாளர்கள் எதிர்க்கிறார்கள்.
எனவே, நான் தனிப்பட்ட விதத்தில் கிறிஸ்தவர்களுக்கு மட்டும் பேசவேண்டும் என்று விரும்பும் நீங்கள் பல கிறிஸ்தவ ஊடகங்களில் பேச வாய்ப்பு வாங்கித் தாருங்கள். சமய சார்பற்ற ஊடகங்களில் பேசுவதை நிறுத்திவிடுகிறேன்.