பதில்:
நகைச்சுவை: பொதுவாக கிறிஸ்தவர் என்றாலே, சோகமாகத்தான் இருக்கவேண்டும் என்று பல திருச்சபைகளில் கற்றுக்கொடுக்கப்படுகிறது. ஆனால்,
ஒரு கிறிஸ்தவர் நகைச்சுவையாகப் பேசக்கூடாது, முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு, முறைத்துக்கொண்டே பேசவேண்டும் என்று புதிய உடன்படிக்கையில் ஏதாவது கட்டளைகள் உண்டா? சிரிப்பது மனிதனுக்கு மட்டுமே இறைவன் கொடுத்த பரிசு. உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும் என்று கிறிஸ்து சொன்ன உறுதிமொழியைக்கூட துக்கமுகத்தோடுதான் சொல்கிறோம். சந்தோஷம் பொங்குதே! என்ற பாடலையே முறைத்துக்கொண்டே பாடிப் பழகிப்போன கிறிஸ்தவர்கள் பலருக்கு சிரிப்பதே ஒரு பாவச்செயலாகத் தோன்றுகிறது. கேட்டால் முகதுக்கத்தினாலே இருதயம் சீர்ப்படும் (பிர. 7:3) என்ற நியாயப் பிரமாணத்தை சொல்வார்கள். கிறிஸ்து நம் துக்கங்களை சுமந்தபின்பும் நாம் ஏன் துக்கமாக இருக்கவேண்டும்? திருத்தூதர் பவுல் ரோமைச் சிறைச்சாலையில் துன்பங்களை அனுபவிக்கும்போது, “சந்தோஷமாயிருங்கள் (பிலி. 4:4) என்று பிலிப்பி சபைக்கு ஆலோசனை கூறுகிறார்.
ஒருவர் நகைச்சுவை கலந்து பேசும்போது அவர் சொல்லவரும் கருத்துக்கள் மக்களின் கவனத்தை எளிதில் கவர்ந்து மக்களை எளிதில் சென்றடைகின்றன. எந்த கிறிஸ்தவ பேச்சாளர்களுடைய பேச்சுகளைக் கேட்க விருப்பம் இல்லாதவரும் நகைச்சுவையோடு பேசுபவருடைய உரையை ஆர்வமாக கேட்கிறார்கள் என்பதை நடைமுறையில் பார்க்கிறோம். சில பேச்சாளர்களுடைய பேச்சை கேட்க தொடங்கிய உடனேயே பார்வையாளர்கள் தூங்கிவிடுகிறார்கள். ஒரு பேச்சாளருடைய பேச்சை கேட்டு மக்கள் தூங்குகிறார்களென்றால், சிறிது நகைச்சுவையை சேர்த்து பேசுவது நல்லது. கடுமையான கோபத்தோடு, பலத்த சத்தத்தோடு கத்தி போதித்தால்கூட சாதிக்கமுடியாததை நகைச்சுவை மூலம் சாதிக்கமுடிகிறது என்று உளவியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள். பேச்சாளரின் பேச்சைக் கேட்பவர்கள் முதிர்ச்சி அடையாத குழந்தைகளானால் அதட்டி, பயமுறுத்தி பேசலாம். ஆனால், முதிர்ந்து பக்குவப்பட்டவர்களை அப்படி அதட்டத் தேவையில்லை. சாதாரணமாக சொன்னாலே போதும்.
மிமிக்ரி:
மிமிக்ரி செய்வது என்பது, வேறு ஒருவரைப்போல பேசுவது. அதில் என்ன தவறு இருக்கிறது? டாக்டர் DGS தினகரன் அவர்களைப் போல பேசுகின்ற, பாடுகின்ற பலரை நமக்குத் தெரியும். அதன்மூலம் மக்கள் பயனடைகிறார்களென்றால் அப்படி பேசக்கூடாது, பாடக்கூடாது என்று சொல்ல நாம் யார்? ஒரு பிரசித்திபெற்ற ஒரு நபர் பேசுவதுபோல ஒருவர் பேசும்போது மக்கள் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து கூர்ந்து கவனிக்கிறார்கள் என்றால் அதை ஏன் கண்டனம் செய்யவேண்டும்? விருத்தசேதனத்தில் நம்பிக்கை உள்ளவர்களை கிறிஸ்துவிடம் திருப்ப திமொத்தேயு என்ற ஊழியருக்கு விருத்தசேதனம் செய்தார் திருத்தூதர் பவுல். பிறருக்கும் படைத்த கடவுளுக்கும் தீங்கு இழைக்காமல் யாரையும் நாம் எதையும் செய்யலாம்.