பதில்: ஒருமுறை ஒருவர் தன் பக்கத்துவீட்டுக்காரரை அடித்து அவருடைய உடலை படுகாயமடையச் செய்துவிட்டார். பாதிக்கப்பட்டவரை அருகில் இருந்தவர்கள் அவர்களுடைய வாகனத்தில் ஏற்றி அரசு மருத்துவமனையில் சேர்த்தார்கள். அங்கே அவருக்கு இலவசமாக மருத்துவம் செய்யப்பட்டது. உணவும் கொடுக்கப்பட்டது. அதன் பின்பு அவரை காயப்படுத்தியவர் காயப்பட்டவரை பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு வந்து, “நான் உங்களை அடித்து உங்களுடைய உடல் முழுவதும் காயப்படுத்தியதால்தான் உங்களுக்கு இலவசமாக வாகன பயணம், இலவச மருந்து, இலவச உணவு எல்லாம் கிடைத்தது; ஆக, நான் உங்களை அடித்து உங்களை காயப்படுத்தியது நல்லது தானே!” என்று கூறிச் சென்றார். அதுபோலத்தான் சாதி இருந்தால்தான், அதிக சலுகை கிடைக்கும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் பாதுகாப்பு கிடைக்கும்” என்று சாதி வெறியர்கள் சாதியால் பாதிக்கப்பட்டவர்களை உசுப்பிவிடுவார்கள். இன்று இந்த சலுகை கொடுக்கப்படும் காரணமே அன்று சாதிவெறியர்கள் சாதி அடிப்படையில் இவர்களை ஒடுக்கியதுதான் என்பதை ஒடுக்கப்பட்டவர்கள் சிந்திக்கவேண்டும்.
சாதியால் எத்தனை கோடி மக்கள் இழிவுபடுத்தப்பட்டாலும், ஒடுக்கப்பட்டாலும், படுகொலை செய்யப்பட்டாலும் அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை; கிறிஸ்தவர்களுக்குள் புரையோடிப்போயிருக்கும் சாதியத்தின் பொருட்டு பிறர் கிறிஸ்துவைப் புறக்கணித்தாலும் எனக்கு பிரச்சனை இல்லை; கிறிஸ்தவர்களின் சாதி உணர்வால் எத்தனை கோடிபேர் நரகத்துக்குப் போனாலும் எனக்கு கொஞ்சமும் வருத்தம் இல்லை; என் பொருளாதார வளர்ச்சியும், சாதிப் பெருமையும்தான் எனக்கு முக்கியம் என்று சொல்லும் சாதி உணர்வுக் கிறிஸ்தவர்கள்தான் இப்படி பேசுவார்கள்.
ஒருமுறை கிறிஸ்தவ கூட்டம் ஒன்றில் நான் பேசிக்கொண்டிருக்கும்போது கூட்டத்திலிருந்த ஒரு பெண்மணியைப் பார்த்து, _”உங்கள் கணவர் என்ன வேலை செய்கிறார்?”_ என்று கேட்டேன். அதற்கு அவர், _”என் கணவர் காவல்துறை அதிகாரி”_ என்றார். உடனே நான், _”மக்கள் குற்றம் செய்வதுவரைதான் காவல்துறை இருக்கும். மக்கள் குற்றம் செய்வதை நிறுத்திவிட்டால் காவல் துறையே இருக்காது. காவல்துறை இல்லாவிட்டால் உங்கள் கணவர் காவல்துறையில் வேலை செய்யமுடியாது. இப்போது சொல்லுங்கள், மக்கள் குற்றம் செய்யவேண்டுமா? செய்யக்கூடாதா?”_ என்று கேட்டேன். உடனே, _”மக்கள் குற்றம் செய்யவேண்டும்”_ என்று பதிலளித்தார் அந்த பெண்மணி. “யார் எத்தனை குற்றம் செய்தாலும், தண்டனை பெற்றுச் செத்தாலும் எனக்கு பிரச்சனை இல்லை. என் கணவருடைய பதவியும் சம்பாத்தியமும்தான் முக்கியம்” என்று அவர் சொல்ல வருகிறார். எவ்வளவு குறுகிய மனப்பான்மை பாருங்கள்! இப்படிதான் இருக்கிறார்கள் பெரும்பான்மையான சுயநலவாத மக்கள்.
_”மக்கள் குற்றம் செய்யக்கூடாது. ஆனால், மக்கள் குற்றம் செய்வதுவரை என் கணவர் அந்த வேலையை செய்யட்டும். அதன்பின் கடவுள் வேறு வேலை தருவார்”_ என்று அந்த பெண்மணி இறை நம்பிக்கையோடு, சமூக அக்கரையோடு சொல்லியிருந்தால் அது ஏற்புடைய கருத்தாக இருந்திருக்கும். ஆனால், எத்தனை பேர் குற்றங்களால் அழிந்துபோனாலும் எனக்குக் கவலையில்லை. எனக்குப் பணம்தான் முக்கியம் என்று சொல்வது எப்படி கிறிஸ்தவமாகும்?
சாதி அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சாதி அடிப்படையில் இழப்பீடு கொடுப்பதுதான் சமூக நீதி. அது விவாதங்களுக்கு அப்பாற்பட்டு ஒத்துக்கொள்ளப்படவேண்டிய நியாயமாகும். எந்த சாதியின் அடிப்படையில் ஒடுக்கப்பட்டார்களோ, அந்த சாதியின் அடிப்படையிலேயே இழப்பீடு கொடுப்பதுதான் நீதியாகும். ஆனால், சாதி ஒழிந்தபின் நீங்கள் விரும்பும் கல்வியை எளிதில் கற்கலாம். நீங்கள் விரும்பும் வேலையை எளிதில் செய்யலாம். நீங்கள் விரும்பும் நபரை திருமணம் செய்யலாம். சாதி ஒழிந்தபின் இடஒதுக்கீடு தேவைப்படாதே!
*சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு வாங்கிக்கொண்டிருப்பது வரை சாதி ஒழியாது* என்பதும் அனைவரும் அறியவேண்டிய பேருண்மையல்லவா! சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு வாங்குவோரில் *சாதி மறுப்பாளர்களும், சாதி உணர்வாளர்களும்* உள்ளனர். அவர்களில் சாதி உணர்வாளர்கள் சாதி ஒழியக்கூடாது என்று விரும்புகிறார்கள். குறிப்பாக ஒடுக்கப்பட்டோரில்கூட பெரும்பான்மையானோர் (எ.கா: பள்ளர்கள், பறையர்கள்) தங்கள் சாதி அடையாளத்தை விட்டுவிட விரும்பவில்லை. அண்மையில், *”சிவபெருமானின் சாதி பறையன்; எனவே நாம் சாதியை விடவேண்டிய தேவை இல்லை”* என்று சாதி அரசியல்வாதி ஒருவர் கொம்பு சீவிவிட்டதால் பல ஒடுக்கப்பட்டோர் தற்போது சாதி வைராக்கியவாதிகளாக மாறியிருக்கின்றனர்.
சாதி மறுப்பாளர்கள் பலர் சாதி ஒழியவேண்டும் என்றும் விரும்புகிறார்கள். நிஜமான ஒரு சாதிமறுப்பாளரிடம், “நீங்கள் என்ன சாதி?” என்று கேட்பதே தவறாகும். அவர்கள் சொல்லவிரும்பாத சாதி பெயர்களை சொல்லவைப்பது மிகப்பெரும் கொடுமையாகும். எந்த சிறையிலிருந்து விடுதலை அடைய விரும்புகிறார்களோ அந்த சிறையிலேயே திரும்பவும் அவர்களைத் தள்ளுவதற்கு சமமாகும்.
எனவே, சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு வாங்குவோரில், சாதி ஒழிக்கப்படவேண்டும் என்று விரும்பும் சாதி மறுப்பாளர்கள் அனைவருக்கும் அரசு *சாதியற்றோர் (Non Caste-NC)* என்று சான்றிதழ் கொடுத்து, அந்த பிரிவினருக்கு தனி இடஒதுக்கீடு கொடுக்கவேண்டும். தங்களை சாதி மறுப்பாளர் என்று சுய அறிவிப்பு செய்வோர் அனைவரையும் அரசு சாதி மறுப்பாளர்களாக ஏற்றுக்கொள்ளவேண்டும். தங்களை சாதியற்றோர் என்று சொல்வோர் திருமணம் ஆகாதவரென்றால், அவரது பெற்றோருடைய அனுமதி பெற்று அச்சான்றிதழைக் கொடுக்கவேண்டும். இதுவே சாதியை ஒழிப்பதற்கான அறிவார்ந்த வழியாகும். சாதியை மறுக்கும் யாரானாலும் இந்த பிரிவில் இணையலாம். எனக்கு இட ஒதுக்கீடே தேவை இல்லை என்பவர்களையும், சாதி மறுப்புக் கொள்கையுடைய செல்வந்தர்களையும் *சாதியற்ற பொதுப் பிரிவினராக (Non Caste Open Category- NCOC)* அரசாங்கம் பகுக்கவேண்டும்.
இன்று *சாதியற்றோர்* என்ற சான்றிதழ் வேண்டி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு போனால், அதிகாரிகள் நம்மிடம் ஆயிரம் கேள்விகளைக் கேட்டு அவமானப்படுத்துகிறார்கள். நாம் கொடுக்கும் விண்ணப்பத்தை அவர்கள் *கண்டுகொள்வதே இல்லை.* சாதிமறுப்பை ஊக்கப்படுத்தவேண்டிய அதிகாரிகளே நம்மை அதைரியப்படுத்துகிறார்கள். எனவே ஒரு பெருங்கூட்டமாக சென்று *சாதி மறுப்புச் சான்றிதழ்* கேட்டு அரசிடம் நம் கோரிக்கையை முன்வைக்கவேண்டும். அப்போதுதான் அரசு நமது கோரிக்கையை பரிசீலனை செய்யும்.
அரசாங்கத்திடம் சென்று சாதியற்றோருக்கான இடஒதுக்கீடு வாங்க தயாராக இருக்கும் ஒரு பெருங்கூட்டம் மக்களை *கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தின்* மூலம் மிக விரைவாகத் திரட்டவேண்டும். அந்த பேரணியில் நீங்களும் அங்கமாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன். நீங்கள் நமது இயக்கத்தில் உறுப்பினராக இணைந்து உங்கள் ஆதரவை வெளிப்படுத்துங்கள்.
அரசு, படிப்பிலும், வேலைவாய்ப்பிலும் *’சாதியற்றோர்’* என்று ஒரு பிரிவை உருவாக்கினால், சாதியின் வீரியம் குறையத் தொடங்கும். அரசினரே சாதிமறுப்புத் திருமணத் தகவல் மையத்தை நடத்தினால், சாதி மறுப்பு திருமணம் செய்ய விரும்பி மணமக்களை தேடி கண்டுபிடிப்பது பொதுமக்களுக்கு மிக எளிதாகிவிடும். *சாதி ஆணவப் படுகொலைகளும் தடுத்து நிறுத்தப்படும்.* சாதி மறுப்பாளர்கள் சாதி வெறியுடையவரின் வீட்டு மணமக்களை திருமணம் செய்ய முயற்சிசெய்து, தங்கள் இன்னுயிரை இழக்கவேண்டிய தேவையில்லை. சாதி மறுப்பாளர்கள் சக சாதி மறுப்பாளரை எளிதில் கண்டுபிடித்து திருமணம் செய்து ஆபத்தில்லாமல் நிம்மதியாக வாழலாம். தங்கள் சாதியில்தான் திருமணம் செய்யவேண்டுமென்று விரும்பும் சாதி உணர்வாளருடைய வீட்டுக்குள் புகுந்து *’கலப்புத் திருமணம்’* என்ற பெயரில் வலுக்கட்டாயமாக அவர்கள் வீட்டு பெண்ணை இழுத்துச் சென்று, அவர்கள் விரும்பாத திருமணம் செய்ய முயற்சி செய்வது பெரும் பாவமாகும். 23 ஆண்டுகள் தங்கள் பிள்ளையை பத்திரமாக வளர்த்ததுவிட்டு இப்படி ஒரு அசம்பாவிதத்தை பார்க்க யாருமே விரும்பமாட்டார்கள். 18 வயது ஆகிவிட்டால் பெற்றோருக்கு கீழ்படியாமல் ஓடிவிடலாம் என்பது கிறிஸ்தவ வாழ்க்கை அல்ல. அது ஒரு அது கீழ்த்தரமான வாழ்வியல். ஒருவரை கட்டாயப்படுத்தி அவருடைய சாதியை துறக்க வைப்பது சாத்தியமற்றது. அது கட்டாய மதமாற்றம் செய்யும் கொடிய செயல் போன்றதாகும்.
*எதை செய்தாலும் அன்போடு செய்யவேண்டும் (1கொரி.16:14)* என்று விவிலியம் கூறுகிறதே!