பதில்: உங்கள் கூற்று எப்படி இருக்கிறது என்றால், “நான் இயேசுவால் மீட்கப்பட்டவன்; ஆதலால், இனி யாரும் யாருக்கும் மீட்பின் நற்செய்தியைப் பறைசாற்றவேண்டிய தேவை இல்லை” என்று சொல்வதுபோல உள்ளது.
ஒருவர் கடவுளுக்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்து, கடவுளின் வழிகாட்டுதலுக்கு தன்னை ஒப்படைத்தால், யாரைத் திருமணம் செய்யவேண்டும் என்று கடவுள் சுட்டிக்காட்டுவாரோ அவரைத் திருமணம் செய்யும் முதிர்ச்சிக்கு நகர்ந்துவிடுவார். அப்படி வளர்ந்த ஒருவர் ஜாதி, பணம், அழகு, சொத்து என்ற எந்த கவர்ச்சிகளுக்கும் மசியமாட்டார். சக கிறிஸ்தவர்களும் அவருடைய முதிர்ச்சிக்கு வளரவேண்டும் என்று விரும்புவார். நீங்கள் நிஜமாகவே சாதி ஒழியவேண்டும் என்ற நோக்கத்தோடு, சாதி மறுப்புத் திருமணம் செய்தவரானால், சாதி மறுப்பைப் பரப்புவதற்கு தடையாக நிற்கமாட்டீர்கள். ஏதோ ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையில் சாதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல், அழகு, பணம், வருமானம் போன்ற வேறொன்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து திருமணம் செய்துவிட்டீர்கள். அதனால்தான் இப்படி சொல்கிறீர்கள்.
சினிமா நடிகர் கருணாஸ் என்பவர் சாதிமறுப்புத் திருமணம் செய்தவர் என்று கேள்விப்பட்டேன். ஆனால், அவர் முக்குலத்தோர் என்ற சாதி சங்கத் தலைவராக இருக்கிறார். ஜான் பாண்டியன் என்பவர் சாதிமறுப்புத் திருமணம் செய்தவர் என்று சொல்கிறார்கள். ஆனால், அவர் தேவேந்திரகுல வேளாளர் சாதி சங்கத் தலைவராக இருக்கிறார். நடிகர் கார்த்திக் முத்து ராமன் சாதிமறுப்புத் திருமணம் செய்தவராம். ஆனால், அவர் தேவர் சாதி சங்கத் தலைவராக உள்ளார். வன்னியர் சாதி சங்க நிர்வாகிகளாக இருக்கும் டாக்டர் ராமதாஸ், காடுவெட்டிக் குரு போன்றோரின் பெற்றோர் சாதிமறுப்புத் திருமணம் செய்தவர்கள் என்று சொல்கிறார்கள். இவர்களெல்லாரும் சாதிமறுப்புத் திருமணம் செய்தவர்கள் என்பதால் இவர்கள் சாதி மறுப்பாளர்கள் என்று கருதிவிட முடியுமா? அதேபோல கிறிஸ்தவர்களிலும் சாதிமறுப்புத் திருமணம் செய்தவர்கள் என்று பலருண்டு. ஆனால், அவர்கள் எல்லோருமே சாதியத்தை வெறுத்து சாதிமறுப்பு திருமணம் செய்வர்களல்ல.
ஒரு அழகான பெண்ணை திருமணம் செய்ய விரும்பும், சாதி உணர்வுள்ள ஓர் இளைஞர் தன் சாதியில் அந்த அழகான பெண் கிடைக்காததாலும், வேறு சாதியில் கிடைத்ததாலும் திருமணம் செய்கிறார். அதற்காக, அவர் நிஜமாகவே சாதிமறுப்பு கொள்கை உடையவர் என்று சொல்லிவிடமுடியாது. சாதியைவிட அழகுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததால் சாதிக்கு அவர் அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அவ்வளவுதான்.
சாதி உணர்வுள்ள ஓர் இளைஞர், ஒரு பணக்கார வீட்டுப் பெண்ணைத் திருமணம் செய்தால் வரதட்சணை அதிகமாகப் பெற்றுக்கொள்ளலாம் என்னும் நோக்கத்தில் பெண் தேடுகிறார். ஆனால், தன் சாதியில் அப்படி ஒரு பணக்காரப் பெண் கிடைக்காததாலும், வேறு சாதியில் கிடைத்ததாலும், மணப்பெண்ணின் சாதிக்கு பெரிய முக்கியத்துவம் கொடுக்காமல், பணத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து திருமணம் செய்கிறார். அதற்காக மணமகன் சாதி உணர்வற்றவர் என்று கூறிவிடமுடியுமா? சாதியைவிட பணத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததால் சாதியை அவர் பொருட்படுத்தவில்லை. அவ்வளவுதான்.
38 வயதுவரை தன் சாதியில் வரன் தேடியும் கிடைக்காததால், ஒரு பெண் வேறொரு சாதி மணமகனைத் திருமணம் செய்தார். இதனால் அந்த மணமகள் நிஜமாகவே முழு இதயத்தோடு சாதிமறுப்பாளராக மாறிவிட்டார் என்று சொல்லிவிடமுடியாது.
ஒரு இளைஞன் பெற்றோருக்கு கீழ்படியாமல், வேலை செய்யாமல், ஊதாரியாக ஊர் சுற்றும்போது அவனுடைய சாதியில் பெண் கிடைக்காமல் இருக்கும்போது எந்த சாதியானாலும் பரவாயில்லை என்று சொல்வார்கள். அவரை நிஜமாகவே சாதி மறுப்பாளர் என்று சொல்லிவிடமுடியுமா?
சாதி உணர்வுடைய ஒரு பெண் தன் கணவன் அதிக சம்பளம் வாங்குபவராக இருக்கவேண்டும், சொத்து உடையவராக இருக்கவேண்டும் என்பதற்காக பிறசாதி மணமகனைத் திருமணம் செய்ய ஒத்துக்கொள்கிறார். அதற்காக அவர் நிஜமாகவே சாதிமறுப்பாளர் என்று சொல்லமுடியுமா?
அதேபோல நீங்களும் சாதி பார்க்காமல் திருமணம் செய்ததால்மட்டும் சாதிமறுப்பாளர் என்று எங்களால் ஒத்துக் கொள்ளமுடியாது. சாதியத்துக்கும் கிறிஸ்துவின் அன்பு பிரமாணத்துக்கும் சம்பந்தம் இல்லை என்ற உண்மையை உணர்ந்து, கிறிஸ்துவின் மனநிலையோடு தன் வாழ்க்கைத் துணையாக ஏற்றுக்கொண்டு சாதிமறுப்பு திருமணம் செய்பவரே நிஜமான சாதிமறுப்பாளர். நாம் எதைச் செய்தாலும் எதற்காகச் செய்தோம் என்பதே முக்கியம்.
கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தை எதிர்ப்பதற்காக பலர் சாதி மறுப்பாளருடைய வேடத்தில் உலா வருகிறார்கள். அதில் ஒருவராக நீங்கள் இருக்கலாம். அதனால்தான் சாதிமறுப்பைப் பேசாதீர்கள் என்று சொல்கிறீர்கள். ஆகவே, நீங்கள் கலப்புத் திருமணம் செய்தீர்கள் என்பதற்காக மட்டும் உங்களை சாதிமறுப்பாளர் என்று ஒத்துக்கொள்ளமுடியாது என்று வருத்தத்தோடு தெரிவிக்கிறோம்.
சபையில் எல்லா தலைப்பிலும் போதிக்கலாம். கடவுளை மட்டுமே வணங்கவேண்டிய காரணம்; ஜெபம் செய்யும் முறை, அதிகாலை ஜெபத்தின் முக்கியத்துவம், உபவாசத்தின் முக்கியத்துவம், முழங்கால் படியிடுவதன் முக்கியத்துவம், மறைநூல் வாசிப்பின் முக்கியத்துவம், அதை வாசிக்கும் முறைகள், சுவிசேஷ ஊழியம் எப்படி செய்வது? விசுவாசம், காணிக்கை, தசமபாகம, ஒற்றுமை, விட்டுக்கொடுப்பது, அன்பு, மகிழ்ச்சி, சமாதானம், திரித்துவம், பரிசுத்தம், கற்பு, வெண் ஆடை, அணிகலன்கள், பொட்டு, பூ, எந்த நாமத்தில் ஞானஸ்நானம், மூழ்கி ஞானஸ்நானமா? தெளிப்பு ஞானஸ்நானமா? ஆவியின் அபிஷேகம், அந்நிய பாஷை, கர்த்தருடைய பந்தி, பாதம் கழுவுதல், கடவுளை எப்படி துதிக்கவேண்டும்? எப்படி ஆராதனை செய்யவேண்டும்? முக்காடு அணிவது, செருப்பை வெளியே விடுவது, வாராந்திர சபை ஆராதனை, திடப்படுத்தலின் செய்தி, விக்கிரக ஆராதனை, மரியாள் வணக்கம், புனிதர் வணக்கம், வானதூதர் வணக்கம், மதுபானம், விருத்தசேதனம், விபச்சாரம், மன்னிப்பு கேட்பது, பிறரை மன்னிப்பது, கெட்ட வார்த்தை பேசுவது, சினிமா, பீடி, சிகரெட், வெற்றிலை பாக்கு, புகையிலை, மயக்க மருந்து, களவு, கொலை, பொய் என்ற எல்லாவற்றைப் பற்றியும் சபையில் பேசலாம். ஆனால், சாதி பாகுபாட்டை கடைபிடிப்பது தவறு என்று மட்டும் பேசக்கூடாது என்பது எந்த வகையில் நியாயம்? சாதி மறுப்பைப் பற்றி பேசக்கூடாது என்று நீங்கள் சொல்வதால் *உங்களுக்குள் சாதி உணர்வு இருக்கிறது என்று அப்பட்டமாக புரிந்துகொள்ளமுடிகிறது.* காவல்துறையினரைப் பார்த்தவுடன் திருடனுக்கு பயமாகத்தான் இருக்கும். திருடுவது பாவம் என்று ஒரு திருடர் ஒப்புக்கொள்வது கடினமே. அதுபோல சாதியம் தவறு என்று ஒத்துக்கொள்வது ஒரு சாதி உணர்வாளருக்கு கடினம்தான். ஆனால், அதற்காக *”சாதி பார்ப்பது தவறு என்று போதிக்கவே கூடாது”* என்று யாரும் எங்களைத் தடை செய்யமுடியாது. உங்கள் கஷ்டம் புரிகிறது.
நுரையீரல் நோய்க்கு காரணமான புகைப் பிடிப்பதை விட்டுவிடவேண்டும் என்று நுரையீரல் நோயாளிகளுக்கு கற்பிக்காமல், நுரையீரலுக்கு சிகிச்சை மட்டும் கொடுத்து, பணவசூல் செய்வது அந்த மருத்துவர் நோயாளிக்கு செய்யும் பச்சைத் துரோகமல்லவா! நோயாளியின்மீது அடிப்படை அக்கரை இருந்தால் அப்படி செய்யமுடியாதே! புகைப் பிடிப்பது உடல்நலத்துக்கு தீங்கானது என்று அரசு விளம்பரப்படுத்துவதை விரும்பாத மருத்துவர்கள்கூட இருப்பார்கள்.
அதுபோல, ஒடுக்கப்பட்ட இந்துக்கள் இயேசுவிடம் வருவதற்கு கிறிஸ்தவர்களின் சாதியம் தடையாக இருக்கிறது என்று தெளிவாகத் தெரிந்தபின்பும், அந்த தடையை அகற்ற முயற்சி செய்யாமல், _”கலங்காதே! திகையாதே! காணிக்கை போடு!”_ என்று நயவஞ்சகமாகப் பேசி, “கர்த்தருக்கு கொடுத்தல்” என்ற பெயரில் பணவசூல் செய்யும் வயிற்றுப்பிழைப்பு வியாபாரிகளுடைய சுயநல திட்டங்களை நாங்கள் கண்டுபிடித்துவிட்டோமே! எல்லா போதகர்களும் போதகர்களல்ல. பலர் போதகர்களுடைய போர்வையை அணிந்த சுயநலப் *பாதகர்கள்* என்று கண்டுபிடித்துவிட்டோமே! அதனால்தான் கிறிஸ்துவின் சிந்தையோடு சாதியம் என்ற கோரப்பிசாசின் சதித் திட்டத்தை உணர்ந்து உள்ளன்போடு எதிர்க்கிறோம்.
தாங்கள் இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிப்பதற்காக இந்து மக்கள் அதிகமாக இருக்கும் ஒரு ஊருக்குப் போகும்போது, “இந்த ஊரில் கிறிஸ்தவர்கள் யாருமில்லை; தயவு செய்து எங்கள் கிராமத்துக்கு வராதீர்கள்” என்று அங்குள்ள ஒருவர் சொன்னால், நீங்கள் என்ன செய்வீர்கள்? இனிமேல் இந்துக்களுடைய ஊர்களுக்கு போகவேகூடாது என்று தீர்மானித்து விடுவீர்களா? இல்லை. இயேசு கிறிஸ்துவின் நற்செய்தி உலகெங்கும் பரப்புரை செய்யப்படவேண்டும் (மாற். 16:15) என்ற லட்சியத்தோடு அதே கிராமத்திலுள்ள அடுத்தவரிடம் போய் பேசுவீர்கள்.
அதேபோல, கடவுள் எங்களிடம் கொடுத்துள்ள இந்த போதிக்கும் பணியை எல்லா கிறிஸ்தவர்களிடையேயும் செய்கிறோம். இது இறைவனிடமிருந்து நாங்கள் பெற்ற ஊழியம். சாதி மறுப்பு, இந்தியாவின் கடைக்கோடி கிறிஸ்தவர்களையும் சென்றடைவதுவரை நாங்கள் இந்த ஊழியத்தை நிறைவேற்றியாகவேண்டும்.
என் வீடு தீப்பிடித்து எரியும்போது நான் தீயை அணைக்க முயற்சிசெய்ய வேண்டுமல்லவா! நான் தீயை அணைக்க முயற்சி செய்யும்போது என்னை யாராவது தடுத்தால் எனக்கு எப்படியிருக்கும்?
அதுபோல கிறிஸ்துவின் சபையாகிய வீடு சாதித் தீப்பிடித்து எரிகிறது. சபையின்மீதுள்ள அக்கரையுள்ள சிலராகிய நாங்கள் *கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கம்* என்ற பெயரில் அந்த சாதித் தீயை அணைக்க முயற்சிக்கிறோம். முடிந்தால் எங்களோடு இணைந்து நின்று சாதித் தீயை அணைக்க முயற்சி செய்யுங்கள். எப்படி அணைப்பது என்று நாங்கள் உங்களுக்கு சொல்லித்தருகிறோம். அந்த பாரம் இல்லாவிட்டால் மெளனமாக நின்று வேடிக்கை பாருங்கள். உங்களுக்கு சாதி மறுப்புக் கொள்கை பிடிக்கவில்லை என்பதற்காக தயவு செய்து எங்கள் ஊழியத்தைத் தடை செய்யாதீர்கள். பரிசுத்த ஆவியானவருக்கு எதிர்த்து நிற்காதீர்கள் (தி.ப. 7:51). தலைமுறை சாபத்தை சம்பாதிக்காதீர்கள்.
கடவுளின் சித்தத்தை தெரியாமல் யூதர்கள் இயேசுவையும், திருத்தூதர்களையும் எதிர்த்ததுபோல நீங்கள் எங்களை எதிர்க்கிறீர்கள். உங்களுக்கு கிறிஸ்துவின் இதய ஏக்கம் தெரியவில்லை. உங்கள் மனக்கண்கள் திறக்கப்பட்டால்தான் நாங்கள் யாரென்று உங்களுக்குத் தெரியும். எங்களுக்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்தால், கடவுள் எங்களைப் பற்றி உங்களிடம் பேசுவார். நீங்கள் ஆவியால் நடத்தப்பட்டால், நாங்கள் செய்யும் இறைப்பணியின் அவசரத் தேவை உங்களுக்குத் தெரியும். ஊனியல்புக் கிறிஸ்தவர்களால் எங்களை புரிந்துகொள்ளமுடியாது. உங்கள்மேலுள்ள அக்கரையில் நாங்கள் சகோதரத்துவ அன்போடு இதைச் சொல்கிறோம். தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள். காலம் பதில் சொல்லும்.
கிறிஸ்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் மதுபானம் அருந்துபவராக இருப்பதால் மதுபானத்துக்கு எதிராக யாரும் விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடாது என்று சொல்வது ஏற்புடைய கருத்தல்ல. அதேபோல, கிறிஸ்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் சாதிவெறி உடையவர்களாக இருப்பதால் சாதியத்துக்கு எதிரான விழிப்புணர்வை யாரும் உருவாக்கக்கூடாது என்று சொல்வதும் ஏற்புடைய கருத்தல்ல. இயேசுவைப் பற்றி தங்களிடம் போதிக்கக்கூடாது என்று யூதர்கள் எச்சரித்தபோது, பேதுருவும் திருத்தூதரும், “மனிதர்களுக்குக் கீழ்ப்படிவதைவிட கடவுளுக்கு அல்லவா கீழ்ப்படிய வேண்டும்? (தி.ப. 5:29) என்றனர். அதேபோல உங்களுடைய சதி ஆலோசனைக்கு நாங்கள் கீழ்படிய முடியாது. “ஆண்டவரே, இவர் பார்க்கும்படி இவர் கண்களைத் திறந்தருளும்!” (2அர. 6:17).* என்று கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறோம்.