பதில்: “இலவசமாக பெற்றீர்கள்; இலவசமாக கொடுங்கள்” (மத். 10:8) என்ற வசனத்தின்படி நாங்கள் கடவுளிடமிருந்து இலவசமாக பெற்ற ஆன்மீக அறிவை மக்களுக்கு இலவசமாகத்தான் கொடுக்கிறோம். சாதியத்துக்கு எதிராக, “அன்புள்ளவர்கள் பிறரை சாதி அடிப்படையில் புறக்கணிக்கமுடியுமா?” என்ற தலைப்பில் அண்மையில் நாங்கள் வெளியிட்ட புத்தகத்தையும் எல்லோருக்கும் இலவசமாகவே கொடுக்கவே விரும்புகிறோம். ஆனால், எந்த அச்சகத்தாரும் அதை எங்களுக்கு இலவசமாக அச்சிட்டு கொடுக்கவில்லை. ஆகவே, நாங்கள் அதை விலை கொடுத்து வாங்குகிறோம். அதனால்தான் அதை விலைக்குக் கொடுக்கிறோம். ஆக, இலவசமாகப் பெற்றதை இலவசமாகவும், விலைக்கு வாங்கியதை விலைக்கும் கொடுக்கிறோம். நம் இயக்க அலுவலகத்தில் பணி செய்பவர்களுக்கு சம்பளம் கொடுக்கவேண்டும். அலுவலகத்துக்கு வாடகை கொடுக்கவேண்டும். தபால், கொரியர் செலவுக்கு பணம் வேண்டும். பொருட்கள் தீர்ந்துவிட்டால், மேற்படி உற்பத்தி செய்யவேண்டும். இப்படி பல செலவுகள் இருப்பதால் நாங்கள் விநியோகிக்கும் பொருட்களுக்கு விலை நிர்ணயித்துள்ளோம். நாங்கள் எதையும் கொடுக்காமல் பணம் கேட்கவில்லை. ஒரு பொருளை அதை மனதார விரும்பும் நபர்களுக்கு மட்டும் கொடுக்கிறோம். அவர்களும் மனமுவந்து அதற்காக நிர்ணயிக்கப்பட்ட விலையைக் கொடுத்து வாங்குகிறார்கள்.
நாங்கள் பணம் சம்பாதிக்கத்தான் இந்த புத்தகத்தை வெளியிட்டோம் என்று கூறும் விமர்சகர்களுக்கு ஒரு நற்செய்தி. இந்த புத்தகத்தை யாராவது இலவசமாக அச்சிட்டு எங்களிடம் கொடுத்தால், நாங்கள் எல்லோருக்கும் தங்குதடையின்றி இலவசமாக வழங்க தயாராக இருக்கிறோம். நாங்கள் அதற்கான பதிப்புரிமையையே (Copy Right) இலவசமாக கொடுக்கத் தயாராக இருக்கிறோம். புத்தகத்தை மட்டுமல்ல, நாங்கள் வெளியிட்டுள்ள BAGS, T-SHIRTS, DVDs போன்ற எல்லா வெளீயீடுகளையும் இலவசமாக மக்களிடம் கொண்டு சேர்க்க விரும்புவோருக்கு பதிப்புரிமைகளை இலவசமாக கொடுக்க தயாராக இருக்கிறோம். இன்னும் பல மொழிகளில் நமது வெளியீடுகள் வரவிருக்கின்றன. அவற்றின் பதிப்புரிமைகளையும் கொடுத்துவிடுகிறோம்.
நாங்கள், “இந்து சகோதரர்களின் 100 கேள்விகளுக்கு பதில்கள்” என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டோம். எங்கள் ஆண்டவராகிய இயேசுவைப் புகழ்ந்து பாடல் ஒலித்தட்டுகளை வெளியிட்டோம். எல்லா ஊழியர்களும் செய்வதுபோல பல்லாயிரக்கணக்கான பிரதிகளை விலைக்கு விநியோகம் செய்தபோது அதை வியாபாரம் என்று நீங்கள் விமர்சிக்கவில்லை. ஏனென்றால், எப்படியாவது இந்துக்களை கிறிஸ்தவத்துக்கு மதமாற்றம் செய்துவிடவேண்டும் என்ற மதமாற்ற வெறி உங்களுக்குள் இருக்கிறது. ஆனால், சாதி உணர்வு என்னும் தீய மனநோய்க்கு அடிமைப்பட்ட கிறிஸ்தவர்களை குணப்படுத்தும், “அன்புள்ளவர்கள் பிறரை சாதி அடிப்படையில் புறக்கணிக்கமுடியுமா?” என்ற, மருந்து போன்ற இந்த நூலை நாங்கள் வெளியிட்டபோது அந்த முயற்சியை கொச்சைப்படுத்தி, இழிவுபடுத்தி விமர்சிக்கும் உங்கள் உள்நோக்கம் என்ன? கேவலமான சாதி வக்கிர புத்தி உங்களிடம் இருக்கிறது என்பதை அல்லவா அது காட்டுகிறது! உங்களுக்குள் இருக்கும் அந்த கொடிய வெறியை நாங்கள் உலகுக்கு வெளிப்படுத்துவதால் உங்களுக்கு வலிக்கிறது. இவ்வளவு காலமாக நீங்கள் பின்பற்றிக்கொண்டிருந்த சாதி என்ற நாசகரமான பாவத்தைவிட்டு மனம் திரும்ப உங்களுக்கு மனம் இல்லை. மாறாக, இந்த பரப்புரையை தடுக்க அவதூறு பரப்புகிறீர்கள்.
வேதாகம சங்கத்தார் இறைவனுடைய வார்த்தையாகிய பைபிளையே அச்சிட்டு விலைக்கு விற்கிறார்கள். பலர் வசன ஸ்டிக்கர்கள், வேத வசனபோடுகளை செய்து விற்கிறார்கள். பல ஊழியர்கள் ஆவிக்குரிய புத்தகங்கள், பாட்டு புத்தகங்கள், செய்தி மற்றும் பாடல் CD-க்கள், DVD-க்கள் போன்றவற்றை உற்பத்தி செய்து விலைக்கு விற்கிறார்கள். இவையெல்லாம் பணம் சம்பாதிக்கும் வியாபாரம் என்று சாதிவெறி கிறிஸ்தவர்கள் விமர்சனம் செய்வதில்லையே ஏன்? ஏனென்றால் அவற்றால், இவர்களுடைய சாதி வக்கிர புத்திக்கு எந்த சேதமும் வரப்போவதில்லை. வேதாகம சங்கத்தார் பைபிளை அச்சிட்டு விற்பனை செய்வது பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் அல்லவென்றால் நாங்கள் செய்வதும் பணம் சம்பாதிக்கும் நோக்கத்திலல்ல. அவர்கள் செய்வது வியாபாரமானால், நாங்கள் செய்வதும் வியாபாரமே.
முக்கியமான வேறொரு விஷயம் என்னவென்றால், நிஜமான ஏழைகளுக்கு எங்கள் வெளியீடுகளை இலவசமாக கொடுக்கிறோம். அதை எங்களிடம் பெற்றுக்கொண்டவர்களுக்குத் தெரியும். நாங்கள் இலவசமாகக் கொடுப்பதை விளம்பரம் செய்ததில்லை. ஆனாலும், இலவசமாக ஒரு பொருளை கொடுக்கும்போது அதை வாங்குவோர் அந்த பொருளின் மதிப்பை உணர்வதில்லை என்னும் கசப்பான பாடத்தையும் நாங்கள் நடைமுறையில் கற்றிருக்கிறோம். எதையும் ஒரு விலை கொடுத்து வாங்கினால்தான் அதன் அருமை தெரிந்து பயன்படுத்தமுடிகிறது.