பதில்: சாதி என்னும் நச்சுச் செடியை வைத்து ஆதிக்கப் பிழைப்பு நடத்தி சம்பாதிக்கவேண்டும் என்று பல சமூக விரோதிகள் நினைத்தார்கள். ஆனால், சாதியம் ஒரு சமூகவிரோத கொள்கை என்று பகுத்தறிவுடைய மக்கள் காலப்போக்கில் புரிந்துகொண்டனர். எனவே, ‘சாதி’ என்ற வார்த்தையை பயன்படுத்தினால் பகுத்தறிவுடைய மக்களுடைய வெறுப்பை சம்பாதிக்க நேரிடும் என்று புரிந்துகொண்டு ‘சாதி’ என்ற அதே நச்சு செடிக்கு தங்க முலாம் பூசி, ‘குடி’ என்ற புதிய பெயர் கொடுத்துள்ளார்கள் சில அரசியல்வாதிகள்.
‘விஷம்’ என்பது வடமொழி வார்த்தையாதலால், அதை ‘நச்சு’ என்று மொழி மாற்றிச் சொல்வதால் அது தேனாகிவிடுமா அல்லது ‘விஷச்செடிக்கு’ பெயர் மாற்றி ‘மூலிகைச் செடி’ என்று வைப்பதால் அது மூலிகை ஆகிவிடுமா மக்களே? ‘பாலிடால்’ என்ற விஷத்துக்குப் ‘பால்’ என்று பெயர்மாற்றம் செய்துவிட்டால் அது பாலாகிவிடுமா? அதாவது ‘பறையர் சாதி’ என்ற சொல்லாடலை எடுத்துவிட்டு ‘பறையர் குடி’ என்றும் மாற்றிவிடுவதால் ‘நாடார் குடியினர்’ இவர்களை திருமணம் செய்வார்களா?
‘சாதி ஆணவக் கொலை’ என்பதை ‘குடிப் பெருமைக் கொலை’ என்று மாற்றி சொன்னால் இழந்த உயிரை திரும்ப பெறமுடியுமா?