முழுநேரமும் இறைவனைப் பற்றி போதிப்பதிலும், பிறருக்காகப் பிரார்த்தனை செய்வதிலும் தங்கள் வாழ்நாட்களை அர்ப்பணித்திருக்கும் அருட்பணியாளருக்கு நம்மைப் போல வயிற்றுப்பசி வருவது இயல்புதானே. நாம் நம் பிழைப்பைத் தேடி எட்டு மணி நேரம் வேலை செய்கிறோம். ஆனால், நமக்கு கடவுளைப்பற்றி போதிக்க, நமக்காக இறைவனிடம் மன்றாட முழுநேரமும் தன்னை அர்ப்பணித்திருக்கும் போதகருக்கு ஊக்கமளிக்க ஒரு தொகையை கொடுப்பது தவறில்லையே! அருட்பணியாளருடைய செலவுகள் எல்லாவற்றையும் சபையாரே பொறுப்பேற்க வேண்டுமென்று வேதம் அறிவுறுத்துகிறது.
இறை வார்த்தையைக் கற்றுக்கொள்வோர், அதைக் கற்றுக்கொடுப்போருக்கு தமக்குள்ள நலன்கள் அனைத்திலும் பங்களிக்க வேண்டும் (கலா.6:6).
யாராவது எப்போதாவது ஊதியமின்றி படைவீரராக பணியாற்றுவாரா? திராட்சைத் தோட்டம் போட்ட யாராவது அதன் பழங்களை உண்ணாதிருப்பாரா? மந்தையை மேய்க்கும் ஆயன் அதன் பாலை அருந்தாதிருப்பாரா? (1கொரி.9:7).
சபைகளை நன்முறையில் நடத்தும் மூப்பர்கள் சிறப்பாக இறைவார்த்தையை அறிவிப்பதிலும், கற்பிப்பதிலும் ஈடுபட்டு உழைப்பவர்கள், இருமடங்கு ஊதியத்திற்கு உரியவர்களாக கருதப்பட வேண்டும். ஏனென்றால், போர் அடிக்கும் மாட்டின் வாயைக் கட்டாதே என்றும், வேலையாள் தம் கூலிக்கு உரிமை உடையவரே (1திமொ. 5:17) என்றும் பவுல் அடிகளார் சபைக்கு அறிவுறுத்துகிறார். நாம் நம் மூளை அறிவை, உடல் பெலத்தை பயன்படுத்தித் தான் சம்பாதிக்கிறோம். ஆனால், கடவுளின் அருளில்லாவிட்டால் அது வாய்க்காது என்பதுதான் தெய்வீகத் தத்துவம். எத்தனையோ மூளை அறிஞர்கள் பலர், எல்லாம் இருந்தாலும் எதுவுமே இல்லாததுபோல் விரக்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நம்மை பொருளாதாரத்தில் உயர்த்திய கடவுளுக்கு நன்றி செலுத்த அவர் நமக்கு கொடுத்ததிலிருந்து ஒரு பாகத்தை அவருக்கு முழுமனதோடு கொடுப்பது மகிழ்ச்சி அல்லவா?
ஒரு தகப்பனார் தன் குழந்தையின் கையில் ஒரு பெட்டி சாக்லேட் வாங்கி கொடுத்துவிட்டு அந்த குழந்தையிடம் ஒரு சாக்லேட் கேட்கிறார். அது தவறு என்று கூறமுடியுமா? அவர் நினைத்தால் அதுபோல வேறொரு பெட்டி சாக்லேட் வாங்கி சாப்பிடமுடியும். ஆனால் தன் குழந்தையின் கையிலிருந்து வாங்கி சாப்பிடுவது தனிசுவை தானே! இறைவனுக்கு கொடுக்காமல் கஞ்சத்தனம் செய்த பழைய ஏற்பாட்டு மக்களைப் பார்த்து கடவுள் என்ன சொல்கிறார் என்று கவனியுங்கள். “மனிதர் கடவுளைக் கொள்ளையடிக்க முடியுமா? நீங்கள் என்னை கொள்ளையடிக்கிறீர்கள். எவ்வாறு நாங்கள் உம்மைக் கொள்ளையடிக்கிறோம் என்று கேட்கிறீர்கள். நீங்கள் தரவேண்டிய பத்திலொரு பங்கிலும் காணிக்கையிலும் தான். நீங்களும் உங்கள் இனத்தார் அனைவரும் என்னைக் கொள்ளையடித்ததால் சாபத்துக்கு உள்ளானீர்கள். என் இல்லத்தில் உணவு இருக்கும் பொருட்டு, பத்திலொரு பங்கு முழுவதையும் கொண்டு வந்து அங்கே களஞ்சியத்தில் சேருங்கள், அதன்பிறகு நான் வானத்தின் வாசல்களைத் திறந்து உங்கள்மேல் ததும்பி வழியுமாறு ஆசி வழங்குகிறேனா இல்லையா எனப் பாருங்கள்” என்கிறார் ஆண்டவர் (மல். 3:8-10).
‘பத்திலொரு பங்கு’ என்னும் பழைய ஏற்பாட்டுக் கட்டாயக் கொள்கைப்படி இன்று கடவுளுக்கு கொடுக்க வேண்டிய தேவை இல்லாவிட்டாலும், கடவுளுக்கு கொடுத்தால் கடவுள் நிச்சயமாக பல மடங்காக திரும்பத் தருவார் என்பதே இன்றும் நிதர்சனமான உண்மை. கொடுங்கள், உங்களுக்கு கொடுக்கப்படும். அமுக்கிக் குலுக்கி, சரிந்து விழும்படி நன்றாய் அளந்து உங்கள் மடியில் போடுவார்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ, அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும் (லூக். 6:38). ஈகைக் குணமுள்ளோர் வளம்பட வாழ்வர் குடிநீர் கொடுப்போர் குடிநீர் பெறுவர் (நீதி. 11:25). கடவுள் திரும்ப தருவார் என்னும் இலாப நோக்கில் கடவுளுக்கு கொடுப்பதைவிட, அவர் நம்மேல் அன்பு வைத்து நமக்காகப் பட்ட பாடுகளை நினைத்து நன்றியுணர்வோடு கொடுப்பதே அர்த்தமுள்ளது. ஒரு ஊழியரிடம் கொடுத்தாலும் சரி, அல்லது காணிக்கைப் பெட்டியில் இட்டாலும் சரி, அதைக் கடவுளுக்குத்தான் கொடுக்கிறோம்.
இயேசுவை தங்கள் இரட்சகராக ஏற்றுக்கொண்ட மக்கள் கடவுளை ஆராதிக்க எதிர்பார்க்கப்படுகிறார்கள். அப்படி இயேசுவை ஏற்றுக்கொண்ட எல்லாரும் ஓரிடத்தில் கூடி ஆராதிக்க ஒரு ஜெபவீடு தேவை. அதை கட்ட பணம் தேவையல்லவா! அதற்கு பணம் எங்கிருந்து வரும்? லட்சக்கணக்கில் பணத்தை வங்கியில் வைத்திருக்கும் ஒரு பணக்கார விசுவாசி, “எனக்கென்று எதுவும் இல்லை, இப்பூமி சொந்தம் இல்லை” என்று இசை நயத்தோடு பாடுவதில் என்ன அர்த்தமிருக்கிறது? ஆஸ்பத்திரிக்கு கொடுக்க வேண்டுமானால் அவசர அவசரமாக கடன் வாங்கிக் கூட பணத்தை செலுத்தி விடுகிறோம். ஆனால், நமக்காக உயிரையே தந்த கடவுளுக்குக் கொடுக்க நாம் ஏன் கஞ்சத்தனமாக இருக்கவேண்டும்? சமுதாயப் பணியாற்றிய தியாகிகள் பலர் சாகும்போது தங்களுக்கென்று எதையும் வைத்துச் செல்லவில்லை. பலர் திருமணம் கூட செய்யாமல் மக்களுக்கு பணியாற்றினார்கள். இதெல்லாம் நான் சொன்னாலும் கட்டாயப்படுத்தி நிதிதிரட்டவோ, நிர்பந்தத்தின் பேரில் கொடுக்கவோ கூடாது. திருப்பதி விக்கிரகத்தை பார்க்க கட்டணம் செலுத்துவதுபோல, நீங்கள் கண்டிப்பாக, கட்டாய கட்டணம் செலுத்தவேண்டும் என்று சொல்லவில்லை. ஒவ்வொருவரும் தம்முள் தீர்மானித்தபடியே கொடுக்கட்டும். மனவருத்தத்தோடோ, கட்டாயத்தினாலோ கொடுக்க வேண்டாம். முகமலர்ச்சியோடு கொடுப்பவரே கடவுளின் அன்புக்குரியவர் (2கொரி. 9:7).
மற்றவர்களின் சுமையைத் தணிப்பதற்காக நீங்கள் துன்புற வேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை. மாறாக, எல்லோரும் சமநிலையில் இருக்கவேண்டுமென்றே சொல்லுகிறோம். இப்போது உங்களிடம் மிகுதியாய் இருக்கிறது. அவர்களுடைய குறையை நீக்குங்கள். அவ்வாறே அவர்களிடம் மிகுதியாக இருக்கும்போது உங்கள் குறையை நீக்குவார்கள். இவ்வாறு உங்களிடையே சமநிலை ஏற்படும் (2கொரி. 8:13,14) என்று வேதம் அறிவுறுத்துகிறது. குறைவாக விதைப்பவர் குறைவாக அறுவடை செய்வார். நிறைவாக விதைப்பவர் நிறைவாக அறுவடை செய்வார் (2கொரி. 9:6). இதை தயவு செய்து ஞாபகத்தில் வைத்து கொள்ளுங்கள்.