ஒருமுறை உரோமைப் படையின் நூற்றுவர் தலைவன் ஒருவனுடைய பையன் முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தபோது இயேசுவிடம் வந்து, “ஐயா, என் பையன் முடக்குவாதத்தால் மிகுந்த வேதனையுடன் படுத்துக் கிடக்கிறான்” என்றார். இயேசு அவரிடம், “நான் வந்து அவனைக் குணமாக்குவேன்” என்றார். நூற்றுவர் தலைவர் மறுமொழியாக, “ஐயா, நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். ஆனால், ஒரு வார்த்தை மட்டும் சொல்லும். என் பையன் நலமடைவான். நான் அதிகாரத்துக்கு உட்பட்டவன். என் அதிகாரத்துக்கு உட்பட்ட படைவீரரும் உள்ளனர். நான் அவர்களுள் ஒருவரிடம் ‘செல்க’ என்றால் அவர் செல்கிறார். வேறு ஒருவரிடம் ‘வருக’ என்றால் அவர் வருகிறார். என் பணியாளரைப் பார்த்து ‘இதைச் செய்க’ என்றால் அவர் செய்கிறார்” என்றார். இதைக் கேட்டு இயேசு வியந்து, தம்மைப் பின்தொடர்ந்து வந்தவர்களை நோக்கி, “உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; இஸ்ரயேலர் யாரிடமும் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை” என்றார். பின்னர், இயேசு நூற்றுவர் தலைவரை நோக்கி, “நீர் போகலாம், நீர் நம்பியவண்ணமே உமக்கு நிகழும்” என்றார். அந்நேரமே பையன் குணமடைந்தான் (மத்தேயு 8:5-10).
இங்கே நூற்றுவர் தலைவர் இயேசுவிடம், “நீர் என் வீட்டுக்குள் அடியெடுத்துவைக்க நான் தகுதியற்றவன்” என்று ஏன் சொல்கிறார்? யூத இனத்தில் பிறந்த இயேசு கிறிஸ்து அந்த உரோமை படைத்த தலைவனுடைய வீட்டுக்குள் நுழைந்தால் இயேசு கிறிஸ்து தீட்டாகிவிடுவாரா? இதை நுட்பமாக ஆய்வு செய்யவேண்டும்.
யூதர் அல்லாதவர்களோடு யூதர்கள் மண உறவு வைத்துக் கொண்டால், யூதர் அல்லாதவர்கள் யூதர்களை நிஜமான கடவுளை வணங்கும் ஆன்மீக ஒழுக்கத்திலிருந்து விலக்கி, பொய்யான ஆன்மீகத்துக்கு கொண்டு சென்றுவிடுவார்கள் என்ற ஒற்றைக் காரணத்துக்காகத்தான் யூதர் அல்லாதவர்களோடு யூதர்கள் திருமண ஒப்பந்தம் செய்யக்கூடாது என்று கடவுள் சொன்னார். ஆனால், யூதர்கள் அதைத் தவறாகப் புரிந்துகொண்டு யூதர் அல்லாதவரை, யூதர்களுடைய வீடுகளில் அனுமதிப்பதுமில்லை; யூதர் அல்லாதவரின் வீடுகளுக்குள் யூதர்கள் நுழைவதுமில்லை. அப்படி செய்வது தீட்டு என யூதர்கள் நினைத்தனர். அன்று யூதர்கள் எப்படி யூதரல்லாதவர்களை அநியாயமாக புறக்கணித்தார்களோ, அதேபோல இன்று கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவை இரட்சகர் என்று நம்பும் சக கிறிஸ்தவர்களை கீழ்சாதி, புறசாதி என்று புறக்கணிக்கிறார்கள். அதுதான் கொடிய தலைவலியாக இருக்கிறது.
“யூதர்கள் இயேசுவை கைதுசெய்தபின், அவர்கள் கய்பாவிடமிருந்து ஆளுநர் (உரோமை) மாளிகைக்கு இயேசுவைக் கொண்டு சென்றார்கள். அப்போது விடியற்காலம். பாஸ்கா உணவை உண்ணுமுன் தீட்டுப்படாமலிருக்க ஆளுநர் மாளிகையில் அவர்கள் நுழையவில்லை” (யோவா. 18:28) என்று திருத்தூதர் யோவான் பதிவு செய்கிறார். ஆனால், அப்படி நுழைவது தீட்டு என்று கடவுள் சொல்லவில்லை என்பதை நாம் நுட்பமாகப் புரிந்துகொள்ளவேண்டும். கடவுள் தன்னோடு உடன்படிக்கைச் செய்துகொண்ட மக்கள் தன்னை விட்டு போலிகளிடம் சிக்கிக் கொள்ளக்கூடாது என்னும் ஆதங்கத்தில், அவிசுவாசிகளை திருமணம் செய்யக்கூடாது என்று சொன்னாரேதவிர கடவுளிடம் இனவெறி, சாதிவெறி, மொழிவெறி எதுவும் இல்லை.
யூத இனத்தில் பிறந்த திருத்தூதர் பேதுரு என்பவர் கொர்நெலியு என்ற உரோமை நூற்றுவர் தலைவருடைய வீட்டிலுள்ளோருக்கு ஊழியம் செய்ய கடவுள் சித்தம் கொண்டார். ஆனால், யூதர்கள் புறவினத்தாருடைய வீட்டுக்கு போக்குவரத்து இல்லாமல் இருந்ததால், கடவுள் திருத்தூதர் பேதுருவுக்கு ஒரு திருக்காட்சியை காண்பித்து அவரைப் பக்குவப்படுத்தினார். அதன்பின், அவர் கொர்நெலியுவின் வீட்டுக்குச் சென்றார். (வாசிக்கவும்: தி.ப. 10:1-48)
கிறிஸ்துவுக்குமுன் யூதனென்றும் புறவினத்தார் என்றும் வேறுபாடு இல்லை. அதனால்தான் இயேசு கிறிஸ்து நூற்றுவர் தலைவருடைய வீட்டுக்கு வந்து நோய்வாய்ப்பட்ட பையனை நேரில் சந்தித்து குணப்படுத்துவதாக கூறினார். “நான் அதிகாரத்துக்கு உட்பட்டவன்; என் அதிகாரத்துக்கு உட்பட்ட படைவீரரும் உள்ளனர். நான் அவர்களுள் ஒருவரிடம், ‘செல்க’ என்றால் அவர் செல்கிறார். வேறு ஒருவரிடம், ‘வருக’ என்றால் அவர் வருகிறார். என் பணியாளரைப் பார்த்து, ‘இதைச் செய்க’ என்றால் அவர் செய்கிறார்” என்று நூற்றுவர் தலைவர் ஏன் சொல்கிறார்? இயேசு நூற்றுவர் தலைவருடைய வீட்டுக்கு வராமலேயே அவர் நின்றுகொண்டிருந்த இடத்தில் நின்று சொன்னாலே அவருடைய வார்த்தையின் வலிமையால் தன் பையன் குணமடைவான் என்று நூற்றுவர் தலைவர் நம்பியதால் அப்படி சொன்னார். இயேசு அந்த முதிர்ந்த நம்பிக்கையை பார்த்து அந்த பையனை குணப்படுத்தினார். இங்கு இயேசு இனப்பாகுபாடு காட்டாமல், இஸ்ரயேலர் வழிபட்ட கடவுள் அனைத்து மக்களுக்கும் பொதுவான கடவுள் என்று நிரூபிக்கிறார்.
மேற்கண்ட வசனங்களிலிருந்து, இயேசுவின் சீடர்கள் பிற இனத்தவரிடம் (இஸ்ரயேலர் அல்லாதவர்களிடம்) சான்று பகர்ந்து, அவர்களும் தன் மீட்பைப் பெற்றுக்கொள்ள இயேசு விரும்புவதை அறிகிறோம்.
இன்று இந்தியாவில் இந்துத்துவாவின் ஆதிக்கசாதியினர் பிறரை ஒடுக்குவதை பார்க்கிறோம். இதுபோலவே, இயேசு மனித வடிவில் இம்மண்ணில் வாழ்ந்தபோது புறவினத்தார் ஒடுக்கியுள்ளனர். அந்த நாட்களில் இயேசு தன்னை பின்பற்றியவர்களை பார்த்து, “பிற இனத்தவரின் தலைவர்கள் மக்களை அடக்கி ஆளுகிறார்கள். பெரியவர்கள் அவர்கள்மீது தங்கள் அதிகாரத்தை கடினமாய்க் காட்டுகிறார்கள்; இதை நீங்கள் அறிவீர்கள். உங்களிடையே அப்படி இருக்கக்கூடாது. உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும். உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர் உங்களுக்குப் பணியாளராக இருக்கட்டும்” (மத். 20:25-27) என்று அறிவுறுத்தினார். ஒருவர் மற்றவரோடு மனத்தாழ்மையாக இருக்க வேண்டும் என்பதன் அடையாளமாக அகிலத்தைப் படைத்த இறைவன் மனித வடிவில் வந்து, தன்னுடைய சீடர்களின் கால்களைக் கழுவினார். தன்னுடைய சீடர்களும் அதைப் பின்பற்றவேண்டும்; என்று அறிவுறுத்தினார் (வாசிக்கவும்: யோவா. 13:3-15).
“இக்கொட்டிலைச் சேரா வேறு ஆடுகளும் எனக்கு உள்ளன. நான் அவற்றையும் நடத்திச் செல்லவேண்டும். அவையும் எனது குரலுக்குச் செவி சாய்க்கும். அப்போது ‘ஒரே மந்தையும் ஓரே ஆயரும்’ என்னும் நிலை ஏற்படும்” (யோவா. 10:16) என்று இயேசு கிறிஸ்து வெளிப்படுத்துகிறார். ‘வேறு ஆடுகள்’ என்று இஸ்ரயேலர் அல்லாதவர்களை இயேசு கிறிஸ்து குறிப்பிடுகிறார். ஆக கிறிஸ்து தன்னை ஏற்றுக்கொண்ட அனைவரையும் ஒரே உடலாகப் பார்க்கிறார் என்று அறிகிறோம் (எபே. 2:14-16).