018) இயேசு கிறிஸ்துவின் பன்னிரெண்டு திருத்தூதர்களில் யாருமே யூதர் அல்லாதவர் இல்லையே! ஆக, கிறிஸ்துவும் இன உணர்வு உடையவர்தானே!

பதில்: திருத்தூதர் பன்னிருவரின் பெயர் பின்வருமாறு: முதலாவது பேதுரு என்னும் சீமோன், அடுத்து அவருடைய சகோதரர் அந்திரேயா, செபதேயுவின் மகன் யாக்கோப்பு, அவருடைய சகோதரர் யோவான், பிலிப்பு, பர்த்தலமேயு, தோமா, வரி தண்டினவராகிய மத்தேயு, அல்பேயுவின் மகன் யாக்கோப்பு, ததேயு, தீவிரவாதியாய் இருந்த சீமோன், இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாசு இஸ்காரியோத்து (மத். 10:2-4).
இயேசுவோடு இணைந்திருந்த 12 திருத்தூதர்களும் யூத பின்னணியைச் சார்ந்தவர்கள். தன் பன்னிரெண்டு திருத்தூதர்களில் யாருமே யூதர் அல்லாதவர் இல்லையே என்று நாம் சிந்திக்கலாம். ‘மெசியா’ என்பவர் யூதர்களுக்கு மட்டுமே உடையவர் என்று யூதர்கள் நினைத்தனர். எருசலேமில் சிமியோன் என்பவர் இருந்தார். அவர் நேர்மையானவர்; இறைப்பற்றுக் கொண்டவர்; இஸ்ரயேலுக்கு வாக்களிக்கப்பட்ட ஆறுதலை (கிறிஸ்துவை) எதிர்பார்த்திருந்தவர்; தூய ஆவியை அவர் பெற்றிருந்தார் (லூக். 2:25) என்று மறைநூல் கூறுகிறது. ஆகவே, இயேசு கிறிஸ்து தன்னோடு யூதர் அல்லாதவர்களை திருத்தூதர்களாக இணைத்திருந்தால், இன வைராக்கியமுடைய யூதர்கள் கிறிஸ்துவை இன்னும் அதிகமாக புறக்கணித்திருப்பார்கள். அவரை இவ்வளவுகூட ஏற்றுக்கொண்டிருக்கமாட்டார்கள். இயேசு கிறிஸ்து ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் பிறந்த குழந்தையல்ல. அவர் தன் தாய் மரியாளின் வயிற்றில் தூய ஆவியாரின் வலிமையால் குழந்தையாக உற்பவித்தார். ஆனால், இயேசுவையும், மரியாளையும் பாதுகாப்பதற்காக யோசேப்பு என்பவரை கடவுள் மரியாளுக்கு கணவராகவும், இயேசுவுக்கு வளர்ப்புத் தந்தையாகவும் உலகினரின் பார்வையில் நியமித்தார். அப்படி நியமிக்காமல் இருந்திருந்தால், மரியாள் தவறான முறையில் இயேசுவைப் பெற்றார் என்று சொல்லி, திருச்சட்டப்படி யூத மதவாதிகள் அவரை கல்லால் எறிந்து கொன்றிருப்பார்கள். அதுபோலத்தான் தன் திருத்தூதர்கள் 12 பேரையும் யூத குலத்திலிருந்தே கிறிஸ்து தேர்வு செய்தார் என்றே நாம் நிதானிக்கவேண்டும். ஆனால், அவர் தன் சீடர்களை நோக்கி, “உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள் (மாற். 16:15) என்று சொன்னார்.
சாதி உணர்வை விட்டுவிட மறுக்கும் சில கிறிஸ்தவர்கள், “இயேசு கிறிஸ்து யூதவம்சம் என்ற சாதியில் பிறந்தவர்தானே!” என்று சாக்குப்போக்கு சொல்கிறார்கள். சாதி ஒழியவேண்டும் என்பதற்காகவே தன் வாழ்நாள் முழுவதையும் அற்பணித்துக்கொண்ட ஈ.வே. ராமசாமி பெரியார் என்பவர் உலக வழக்கப்படி நாயக்கர் என்ற சாதியில் பிறந்தவர் என்பதால் அவர் சாதியத்தை எதிர்த்து பேசக்கூடாது என்று சொல்லமுடியாது. இந்துத்துவப்படி பிராமணர் என்ற சாதியில் பிறந்ததால் தேசியகவி சுப்பிரமணிய பாரதியார் சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடியதை தவறு என்று சொல்லமுடியுமா? இவ்வுலகம் சாதி, இன பேதங்களால் பாதிக்கப்படுகிறது என்று உணரும் எவரும் அவற்றை எதிர்க்கலாம். அதேபோல உலகைப்படைத்த கிறிஸ்து, மனித வடிவில் ஒரு தாயின் வயிற்றில் பிறக்கவேண்டியிருந்ததால் ஒரு இனத்தில் வந்து பிறந்தார். அப்படி பிறந்ததால் அவர் இனவாதத்தை ஆதரிக்கிறார் என்று தவறாக புரிந்துகொள்ளக்கூடாது.