பதில்: _கானானியப் பெண் ஒருவர் அவரிடம் வந்து, “ஐயா, தாவிதின் மகனே, எனக்கு இரங்கும்; என் மகள் பேய்பிடித்துக் கொடுமைக்கு உள்ளாகி இருக்கிறாள்” எனக் கதறினார். ஆனால், இயேசு அவரிடம் ஒரு வார்த்தைகூட மறுமொழியாகச் சொல்லவில்லை. சீடர்கள் அவரை அணுகி, “நமக்குப் பின்னால் கத்திக்கொண்டு வருகிறாரே, இவரை அனுப்பிவிடும்” என வேண்டினர். அவரோ மறுமொழியாக, “இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற்போன ஆடுகளாய் இருப்போரிடமே நான் அனுப்பப்பட்டேன்” என்றார். ஆனால் அப்பெண் அவர்முன் வந்து பணிந்து, “ஐயா, எனக்கு உதவியருளும்” என்றார். அவர் மறுமொழியாக, “பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல” என்றார். உடனே அப்பெண், “ஆம் ஐயா, ஆனாலும் தங்கள் உரிமையாளரின் மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே” என்றார். இயேசு மறுமொழியாக, “அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும்” என்று அவரிடம் கூறினார். அந்நேரமே அவர் மகளின் பிணி நீங்கியது (மத். 15:22-28)._
இங்கே, _”பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய் குட்டிகளுக்கு போடுவது முறையல்ல”_ என இயேசு கூறியது ஏன்? அனைத்து மக்களுக்காகவும் தன் உயிரையே கொடுக்குமளவுக்கு அன்பு மனம் படைத்த பண்பாளன் ஏன் இப்படிக் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தினார்? நிச்சயமாகவே அதற்கு ஒரு நியாயமான காரணம் இருக்கவேண்டுமல்லவா! இல்லாவிட்டால் அகில உலக மக்களுக்காகவும் தன் உயிரையே கொடுத்த கருணாமூர்த்தி அப்படி பேசியிருக்கமாட்டார். அது என்ன என்று ஆராய்வோம்.
_கடவுள் யூதருக்கு மட்டுமா கடவுள்? பிற இனத்தாருக்கும் அவர் கடவுள் அல்லவா? ஆம், பிற இனத்தாருக்கும் அவரே கடவுள் (உரோ. 3:29)_ என்று திருத்தூதர் பவுல் கூறுகிறார். _நம் பாவங்களுக்குக் கழுவாய் அவரே; நம் பாவங்களுக்கு மட்டும் அல்ல, அனைத்துலகின் பாவங்களுக்கும் கழுவாய் அவரே (1யோவா. 2:2)_ என்று திருத்தூதர் யோவான் கூறுகிறார்.
யூதர்கள் பொதுவாக யூதர் அல்லாதவர்களை தரக்குறைவாக நினைக்கும் குணமுடையவர்களாக இருந்தனர். அவர்கள் மட்டும்தான் உண்மையான கடவுளை வணங்குபவர்கள் என்ற தற்பெருமை உடையவர்கள். இந்த தற்பெருமை இவர்களுக்கு எப்படி வந்தது? கடவுளுடைய வார்த்தையை கடைபிடித்து, வாழ்பவர்களை கடவுள் சிறப்பானவர்களாக கருதுகிறார் என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.
_”நீங்கள் என் வார்த்தைக்குச் செவிசாய்த்து என் உடன்படிக்கையைக் கடைபிடித்தால் அனைத்து உலகும் என் உடைமையே எனினும், நீங்களே எல்லா மக்களினங்களிலும் என் *தனிச்சொத்து* ஆவீர்கள்” (விடு. 19:5)_ என்று கடவுள் இஸ்ரயேலருக்கு சிறப்பு ஆசி வழங்கியிருந்தார்.
இயேசு மக்களுக்கு போதிக்கையில், _”மறைநூல் அறிஞரும் பரிசேயரும் மோசேயின் அதிகாரத்தைக் கொண்டிருக்கின்றனர். ஆகவே அவர்கள் என்னென்ன செய்யும்படி உங்களிடம் கூறுகிறார்களோ அவற்றை எல்லாம் கடைப்பிடித்து நடந்து வாருங்கள். ஆனால், அவர்கள் செய்வதுபோல நீங்கள் செய்யாதீர்கள். ஏனெனில், அவர்கள் சொல்வார்கள்; செயலில் காட்டமாட்டார்கள்” (மத். 23:2-3)_ என்றார்.
அதாவது யூதர்கள் தங்கள் மதத்தைப்பற்றி பெருமையடித்துக் கொண்டாலும் அதன் கற்பனைகளை அவர்கள் கடைபிடிப்பதில்லை என்று அறிகிறோம். தங்கள் விருத்தசேதனத்தைப் பற்றி பெருமையாக இப்படிப்பட்டவர்கள் பேசி பிறமதத்தவரை இழிவுபடுத்துவர்.
திருத்தூதர் பவுல் எபேசு திருச்சபையாருக்குக் கடிதம் எழுதுகையில், _”பிறப்பால் பிற இனத்தாராய் இருந்த நீங்கள், உங்கள் முன்னைய நிலையை நினைவில் கொள்ளுங்கள். உடலில் கையால் விருத்தசேதனம் செய்து கொண்டவர்கள் உங்களை விருத்தசேதனம் செய்யாதோர் எனக் கூறி இகழ்ந்தார்கள்” (எபே. 2:11)_ என்று குறிப்பிடுகிறார். இப்படிப்பட்ட தற்பெருமையில், _”நாங்கள்தான் கடவுளுக்கு நெருக்கமானவர்கள்”_ என இந்த சீடர்களும் பிதற்றியிருக்கக்கூடும். கிறிஸ்துவின் *இரட்சிப்பு யூதர்களுக்கு மட்டுமே உரியது* என்றும் தலைமுறைப் பகையோடு நினைத்திருக்கலாம். அதனால்தான் சீடர்கள் இயேசுவிடம், _”நமக்குப் பின்னால் கத்திக்கொண்டு வருகிறாரே, அவரது கோரிக்கையை நிறைவேற்றும்”_ என்று சொல்லாமல், _”இவரை அனுப்பிவிடும்”_ என்று கூறினர்.
இந்த சூழ்நிலையில் அப்பெண், _”ஐயா, தாவிதின் மகனே, எனக்கு இரங்கும். என் மகள் பேய் பிடித்துக் கொடுமைக்குள்ளாகி இருக்கிறாள்”_ என்று வேண்டுகிறாள். அப்போது, புறவினத்தாரையும் கடவுள் நேசிக்கிறார்: அவர்களும் கடவுளை நேசிக்கிறார்கள்; அவர்களும் கடவுளுடையவர்கள்தான் என்று தன் சீடருக்கு புரிய வைத்து ஓர் இணைப்புப் பாலம் கட்ட அச்சந்தர்ப்பத்தை இயேசு பயன்படுத்தினார். எனவே, _’நாய்க்குட்டிகள்’_ என யூதர்களால் அழைக்கப்படும் புறமக்களுக்கு இயேசுவின்மீது எவ்வளவு நம்பிக்கை இருக்கிறது என்பதை சீடருக்கு வெளிப்படுத்துவதற்காகத்தான் இயேசு அந்த வார்த்தைகளைப் பயன்படுத்தினார். ஏனெனில், அவர் அப்படி சொல்லாவிட்டால், _”தங்கள் உரிமையாளரின் மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே!”_ என்று சொல்லி தன் நம்பிக்கையை அப்பெண் வெளிப்படுத்தியிருக்கமாட்டார். அவளுக்கு கிறிஸ்துவின்மீது நம்பிக்கை உண்டு; யூதரல்லாதவரும் மேசியாவை நம்புகின்றனர் என்பதை தன் திருத்தூதருக்கு வெளிப்படுத்தவே இப்படி ஒரு குழப்பமான உரையாடலை நம் அனந்த ஞானமூர்த்தி நடத்தினார் என்றே நான் நம்புகிறேன். அந்த பெண்மணியின் நம்பிக்கை அறிக்கையை எல்லாரையும் வைத்து கேட்கவைத்தபின், _”அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும்”_ என்று கூறியதும் பிள்ளை குணமடைந்தது.
புறவினத்தாரை கிறிஸ்து வெறுத்திருந்தால், இயேசு அந்த பெண்மணியின் குழந்தைக்கு அற்புதம் செய்திருக்கமாட்டாரே! கிறிஸ்து தன்னிடம் வந்த எல்லோரையும் உள்ளன்போடு ஏற்றுக்கொண்டார். _”தந்தை என்னிடம் ஒப்படைக்கும் அனைவரும் வந்துசேருவர்; என்னிடம் வருபவரை நான் புறம்பே தள்ளிவிடமாட்டேன்” (யோவா. 6:37)_ என தெளிவாகச் சொல்லிவிட்டார். இயேசு கிறிஸ்து அகில உலகத்துக்கும் பொதுவான மீட்பர் என்பதை தெளிவான ஆதாரங்களோடு படித்துவிட்டோம். ஆனால், _”இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற்போன ஆடுகளாய் இருப்போரிடமே நான் அனுப்பப்பட்டேன்” (மத். 10:6)_ என்று இயேசு ஏன் தனிமைப்படுத்திச் சொன்னார்? இந்த கேள்விக்கு பதில் கண்டுபிடிப்பதில்தான் இயேசு கிறிஸ்துவின் மனத்தாழ்மையும் பொறுப்புணர்ச்சியும் விளங்கும்.
_யூதர்களின் திருத்தூதராகச் செயல்படும் ஆற்றலைப் பேதுருவுக்கு தந்தவரே, புறவினத்தாருக்குத் திருத்தூதராகச் செயல்படும் ஆற்றலை எனக்கும் தந்தார் (கலா. 2:8)_ என்று பவுல் கூறுகிறார்.
இயேசு 100 விழுக்காடு கடவுளுக்கு சமமாக இருந்ததுபோல, கடவுளோடு மனிதனை இணைக்கும் பாலமாக 100 விழுக்காடு மனிதனாகவும் இருந்தார். மனிதனாக இருந்தபோது தந்தையின் *திருத்தூதராகவும் (Apostle)* ஊழியம் செய்தார்.
_தூய சகோதர சகோதரிகளே, விண்ணக அழைப்பில் பங்குகொண்டவர்களே, நாம் அறிக்கையிடும் திருத்தூதரும், தலைமைக் குருவுமான இயேசுவைப் பற்றி எண்ணிப் பாருங்கள் (எபி. 3:1)_ என்ற வசனப்படி கிறிஸ்து ஒரு *திருத்தூதர் (Apostle)* என்றும் அறிகிறோம். திருத்தூதர் என்ற நிலையில், தந்தை அவரை இஸ்ரயேலருக்கான திருத்தூதராக நியமித்து அனுப்பி, அந்த நோக்கத்தில் முனைப்பாக இருந்ததால்தான் இஸ்ரயேலர்களுக்கு முதலில் பாவமன்னிப்பின் நற்செய்தியை அறிவிப்பதாக இருந்திருக்க வேண்டும். அதனால்தான் _”இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற்போன ஆடுகளாய் இருப்போரிடமே நான் அனுப்பப்பட்டேன்”_ என்று இயேசு கூறுகிறார்.
வேறோரு காரணத்தை நாம் சொல்லலாம். _”முதலில் உங்கள் கண்ணிலிருந்து மரக்கட்டையை எடுத்தெறியுங்கள். அதன்பின் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணிலிருந்து துரும்பை எடுக்க உங்களுக்குத் தெளிவாய்க் கண் தெரியும்” (மத். 7:5)_ என்று அவரே சொன்னதின்படி கடவுளின் மக்களாகிய இஸ்ரயேலருக்கு முதலில் பாவமன்னிப்பைப் பற்றி போதித்து அவர்களை நெறிப்படுத்தியபின் அவர்களைவைத்து யூதரல்லாதோருக்கு நற்செய்தி அறிவிக்கலாம் என்று தீர்மானித்திருக்கலாம். அதனால்தான், _”யூதரிடமிருந்தே மீட்பு வருகிறது” (யோவா. 4:22)_ என்று கிறிஸ்து கூறுகிறார். அதாவது தன்னோடு உடன்படிக்கை செய்துகொண்ட யூதர்களுக்கு போதித்து அவர்களைவைத்து உலகின் மற்ற பகுதியினருக்கு நற்செய்தி அறிவிக்க கடவுள் நியாயப்படி விரும்பினார் என்றும் நிதானிக்கலாம்.
அதனால்தான், தனக்கென்று கொடுக்கப்பட்ட திருத்தூதர் பணியின்மீதுள்ள பொறுப்புணர்வோடு, _”எருசலேமே, எருசலேமே, இறைவாக்கினரைக் கொல்லும் நகரே, உன்னிடம் அனுப்பப்பட்டோரைக் கல்லால் எறிகிறாயே. கோழி தன் குஞ்சுகளைத் தன் இறக்கைக்குள் கூட்டிச் சேர்ப்பதுபோல நானும் உன் மக்களை அரவணைத்துக்கொள்ள எத்தனையோ முறை விரும்பினேன். உனக்கு விருப்பமில்லையே! (மத். 23:37)_ என்று எருசலேமில் வாழ்ந்த யூதர்களைப் பற்றிக் கூறி கிறிஸ்து வேதனைப்பட்டார்.
கடவுள் உண்மையுள்ளவர் என்பதைக் காட்டுமாறு கிறிஸ்து விருத்தசேதனம் செய்து கொண்டவர்களுக்குத் தொண்டர் ஆனார். மூதாதையருக்குத் தரப்பட்ட வாக்குறுதிகளை உறுதிப்படுத்தவும், பிற இனத்தார் கடவுளுடைய இரக்கத்தைப் பார்த்து அவரைப் போற்றிப் புகழவும் இவ்வாறு தொண்டர் ஆனார் (உரோ. 15:8-9) என்று திருத்தூதர் பவுல் வெளிப்படுத்துகிறார்.