உங்கள் மதச்சட்டப்படி, பிறருக்கு உங்கள் மதக்கொள்கைகளை பரப்ப வேண்டிய தேவையில்லை. ஆனால், கிறிஸ்துவைப் பின்பற்றும் எல்லாருமே அவருடைய மீட்புச் செய்தியைப் பற்றி பறைச்சாற்ற வேண்டுமென்று வேதம் கூறுகிறது. இயேசு கூறினார், “நீங்கள் உலகெங்கும் போய் எல்லா மக்களினத்தாரையும் என் சீடராக்குங்கள் தந்தை, மகன், தூய ஆவியானவர் பெயரால் திருமுழுக்கு கொடுங்கள் நான் உங்களுக்கு கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைபிடிக்கும்படி கற்பியுங்கள்” (மத். 28:19,20).
“நான் நற்செய்தியை அறிவிக்கிறேன் என்றாலும், அதில் நான் பெருமைப்பட ஒன்றுமில்லை. இதைச் செய்யவேண்டிய கட்டாயம் எனக்கு உள்ளது. நற்செய்தியை அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு!” (1கொரி. 9:16) என்று பவுல் என்னும் இறைத்தூதர் நற்செய்திப் பிரகடனத்தின் முக்கியத்துவத்தை விளக்குகிறார்.
“இறைவார்த்தையை அறிவி நேரமும், வாய்ப்பும் கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும், இதை செய்வதில் நீ கருத்தாயிரு கண்டித்துப்பேசு கடிந்துகொள் அறிவுரை கூறு மிகுந்த பொறுமையோடு கற்றுக்கொடு” (2திமொ.4:2) என்று பவுல் கூறுகிறார்.
நற்செய்தி அறிவிப்பதின் அவசரத்தை உணர்ந்த பேதுரு என்னும் திருத்தூதர், “நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வழிமரபினர், அரச குருக்களின் கூட்டத்தினர், தூயமக்களினத்தினர், அவரது உரிமைச் சொத்தான மக்கள் எனவே, உங்களை இருளினின்று தமது வியத்தகு ஒளிக்கு அழைத்துள்ளவரின் மேன்மை மிக்க செயல்களை அறிவிப்பது உங்கள் பணி” (1பேது. 2:9) என்கிறார்.
“தூய ஆவி உங்களிடம் வரும்போது, நீங்கள் கடவுளது வல்லமையைப் பெற்று, எருசலேமிலும், யூதேயா, சமாரியா முழுவதிலும், உலகின் கடையெல்லை வரைக்கும் எனக்கு சாட்சிகளாய் இருப்பீர்கள்” (தி.பணி.1:8) என்று சர்வேஸ்வரன் பரமேறுவதற்கு முன் தன் அன்புச்சீடரிடம் கூறினார்.
ஆபத்தான சாங்கியங்களும் வேடிக்கையான மூடநம்பிக்கைகளும் மலிந்துபோன பாரதத்தை இயேசுவின் சீர்திருத்தக் கொள்கையினால் காப்பாற்றியே ஆகவேண்டும். அவர் கூறிய அந்த கட்டளைக்கு கீழ்ப்படிந்து, கிறிஸ்துவின் சீடர்கள் இயேசுவின் அன்பைப் பற்றியும் அவர் தரும் புதுவாழ்வைப் பற்றியும் மக்களிடையே பேசுகிறார்கள். ஒருவர் தனது எண்ணங்கள் பிறருக்கு நன்மை தருமானால் அவற்றை பிறரிடம் பகிர்ந்து கொள்வதில் என்ன தவறிருக்கின்றது? இங்குள்ள விவேகானந்தர் அமெரிக்காவுக்குப் போய் அங்குள்ள ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்களை இந்துமத சிலைவழிபாட்டினராக மாற்றினாரே! அதைத் தவறு என்று உங்களால் ஒத்துக்கொள்ள முடியுமா? மூச்சுக்கு மூச்சு “இந்துக்களுக்கு எல்லா கடவுளும் கடவுள் தான் இந்துக்கள் பெருந்தன்மையுடையவர்கள்” என்று கூறும் நீங்கள் விவேகானந்தர் செய்ததை தவறு என்று ஒத்துக்கொள்ள முடியுமா?