உங்கள் தெய்வங்களென்று நீங்கள் யாரைக் கூறுகிறீர்கள்? ஒருமுறை ஒரு இந்து சகோதரி என்னிடம் வந்து, “ஐயா, என் கணவர் என்னைவிட்டு வேறொரு பெண்ணோடு வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறார்” என்று அழுதுகொண்டே கூறினார். உடனே, “உங்கள் பெயர் என்ன? என்றேன். அவர், “தெய்வானை” என்று கூறினார். “நீங்கள் யாரை தெய்வமாக வழிபடுகிறீர்கள் அம்மா?” என்று கேட்டேன். உடனே அவர் இரண்டு மனைவிகளையுடைய ஒரு கடவுளுடைய பெயரை (முருகன்) கூறினார். “நீங்கள் வழிபடும் இந்த தெய்வத்திற்கு எத்தனை மனைவிகள்” என்று கேட்டேன். “இரண்டு” என்று பவ்வியமாக பதிலளித்தார். உடனே நான் அவரிடம், “அம்மா, நான் தெரியாமல் தான் கேட்கிறேன், நீங்கள் வழிபடும் கடவுளுக்கு மட்டும் இரண்டு மனைவிகள் இருக்கலாம், உங்கள் கணவனுக்கு இருக்கக்கூடாதா?” என்று கேட்டேன். உடனே அந்த அம்மா, “அப்படி என்றால் என் கணவர் செய்வது சரியென்று சொல்கிறீர்களா?” என்று கேட்டார். நான், “இல்லை தாயே உங்கள் கணவர் செய்வது சரியென்று நான் நியாயப்படுத்த வரவில்லை. ஆனால், உங்கள் கணவர் செய்வது தவறானால், உங்கள் கடவுள் செய்வதும் தவறென்று ஒத்துக்கொள்ள வேண்டும். அல்லது உங்கள் கடவுள் செய்தது சரியானால் உங்கள் கணவன் செய்வதும் சரி என்று ஒத்துக்கொள்ள வேண்டும்” என்று கூறினேன். உடனே அந்த அம்மா, “என்ன சொல்றீங்க” என்று கேட்டார்கள். நான் சொன்னேன், “அம்மா, உண்மையாகவே முருகக் கடவுளுக்கு இரண்டு மனைவிகள் இருந்தார்கள் என்று நம்புகிறீர்களா? அப்படியே அது உண்மையானால் அந்த கேவலமான வாழ்வியலை தமிழ்க் கலாச்சாரம் என்று எப்படி ஏற்றுக்கொண்டு தமிழ்கடவுளாக மனப்பூர்வமாக வணங்க முடியும்?” என்று கேட்டேன். அப்பொழுது அந்த தாய், “எல்லோரும் கும்பிடுறாங்க அதனால் நானும் கும்பிடுறேனுங்க” என்று புன்சிரித்துக் கொண்டே பதிலளித்தார்.
மனிதன் தன் வாழ்வில் தவறுகள் செய்வது இயல்பு. ஆனால், அதுபோல கடவுளும் தவறுகள் செய்தால், மனிதனுக்கும் கடவுளுக்கும் என்ன வேறுபாடு? கடவுளின் வாழ்க்கை தரம், மனிதனுடைய வாழ்க்கைத் தரத்தை விட உயர்வாக இருக்க வேண்டாமா!
ஒருநாள் ஒரு பிராமண பெண்மணியிடம், “மாமி, கங்கை கரைத்தோட்டத்து பொம்முனாட்டிங்க குளிச்சுண்டேயிருக்கச்ச, அவா புடவையை எடுத்துண்டு, பக்கத்தில இருக்கிற மரத்தில உக்காந்து கண்ண பரமாத்மா வேடிக்கை பாத்துண்டிருந்தார்னு புராணம் சொல்றது. சாக்ஷாத் பகவான் இப்படி எல்லாம் பண்ணுவாரா? அப்படி யாராச்சும் பண்ணினா அவ்வாள பகவான்னு சொல்ல முடியுமா? சத்து யோஜன பண்ணிப் பாருங்கோ” என்று கேட்டேன். உடனே மாமி, “நேக்கு சின்ன வயசில இருந்தே சந்தேகம் தான் அம்பி. ஆனா, இதை எல்லாம் மாமாகிட்ட சொன்னா என்னை divorce பண்ணிடுவாரோல்லியோ என்றார்.
உங்கள் தங்கை, அக்கா அல்லது அம்மா இவர்களில் யாராவது ஒருவர் ஓர் ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். திடீரென்று ஒருவன் வந்து அப்பெண்மணி ஆற்றங்கரையில் வைத்திருந்த துணிகளை எடுத்துக்கொண்டு அருகிலிருக்கும் மரத்தின்மீது ஏறியிருந்து, ஆற்றில் அரைகுறை ஆடையோடு குளித்துக்கொண்டிருக்கும் நபரை காமக்கண்ணோடு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால், அப்படிப்பட்ட கேவலமான பண்பாடுடைய நபரை நீங்கள் யாரென்று நினைப்பீர்கள்? சமுதாயம் அப்படிப்பட்ட ஒருவரை ஒரு முன்மாதிரி மனிதனாக ஏற்றுக்கொள்ளுமா? நிச்சயமாக நீங்கள் ஏற்றுக் கொள்ளமாட்டீர்கள். கண்ணபரமாத்மா அப்படி வாழ்ந்திருப்பாரா? “கங்கைக் கரைத்தோட்டம், கன்னிப்பெண்கள் கூட்டம், கண்ணன் நடுவினிலே” என்று பாடி கண்ண பரமாத்மாவை கேவலப்படுத்துகிறார்களே. இதை அறிந்தும் இது தவறென்று நீங்கள் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருக்கிறீர்களே! நிஜமாகவே கண்ணபிரான் அவ்வளவு அசிங்கமான லீலைகளில் ஈடுபட்டிருப்பாரா? அவர் அப்படித்தான் வாழ்ந்திருப்பாரானால் அவரை பரமாத்மா என்று கூறமுடியுமா? ‘கண்ணன் வெண்ணை திருடினார்’ என்று கூச்சமில்லாமல் கூறுகிறார்களே. நிஜமாகவே கண்ணன் வெண்ணெய் திருடியிருப்பாரா? அப்படியே அவர் திருடியிருந்தால், அவரை கடவுளென்று எப்படி அழைக்கமுடியும்? தயவுசெய்து இக்கேள்விக்கு பதில் கூறுங்கள். இதை தட்டிக் கேட்காமல் கண்மூடித்தனமாக நம்புகிறீர்களே! அப்படிப்பட்ட ஒருவரை கடவுள் என்று நீங்கள் உங்கள் பெற்றோரின் பரம்பரை மதநம்பிக்கையால் நம்புகிறீர்கள்.
ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால்’ என்று சந்தேகத்தோடு வாழ்ந்தது போதும். தனிமனிதனாய் நின்று எது சரி, எது தவறு என்று யோசிப்பதல்லவா பகுத்தறிவு! ‘கத்தியைத் தீட்டாதே புத்தியைத் தீட்டு’ என்ற அறிஞர் அண்ணாவின் அறிவுரைப்படி யோசியுங்கள்.
பிள்ளையார் முருகரை ஏமாற்றினார், சிவபெருமான் விஷ்ணுவுடன் தவறு செய்தார், இராமர் மறைந்திருந்து வாலியைக் கொன்றார் என்றெல்லாம் கூறி கடவுளை அசிங்கப்படுத்துவது நியாயமா?
கடவுளுக்கு பெண்டேது பிள்ளையேது?
காமகுணலீலை முதலானதேது?
கடவுளுக்கு பகடிச்சீட்டு தாயமேது?
காடுகளில் வேட்டைக்குத் திரிவதேது?
கடவுளுக்கு காமிகளின் தொழிலில்லை
காருண்யத் தொழிலொன்றே கடவுள் பாரம்
என்று ஞானவெட்டியான் என்னும் தமிழ்ச்சித்தர் பாடினார்.
கடவுள் களவு, விபச்சாரம், பொய், ஏமாற்றல், வேசித்தனம், காமவிகாரம் என்னும் கீழ்தரமான பாவங்களை செய்வாரா? நீங்கள் யோசித்துப் பாருங்கள். இந்நிலையில், உங்கள் கடவுள்கள் உங்களை சொர்க்கத்துக்கு கொண்டு சேர்க்கும் என்பது காமெடியாகத் தெரியவில்லையா ?