070. எனக்கு இயேசுவைப் பிடிக்கும். ஆனால், எதிர்ப்புகளுக்கு பயப்படுகிறேன்.

எனக்கு இயேசுவைப் பிடிக்கும். ஆனால், எதிர்ப்புகளுக்கு பயப்படுகிறேன்.

ஆற்றில் ஓடும் உயிருள்ள மீன் எதிர்நீச்சல் போடும். அது செத்துவிட்டால் ஆற்றுநீரின் திசையிலே போகும். துன்பத்தைக்கண்டு துவண்டு போவது கோழைத்தனம். சவாலற்ற வாழ்க்கை சலிப்பு தட்டும் வாழ்க்கை. தற்போதைய தமிழக முதல்வர் லஞ்சம் வாங்கும் எந்த அதிகாரியையும் கடுமையாக தண்டிக்கிறார் என்று பத்திரிக்கையில் வாசிக்கிறோம். சிலர் தன்னை பகைப்பார்கள் என்று பயந்து, இந்த நடவடிக்கையை தைரியமாக எடுக்காமல் இருந்தால் நாட்டுக்காக எதையும் செய்ய முடியாது. நாட்டுக்கு ஒரு நல்ல காரியம் செய்யமுற்படும்போது, சில சமூகவிரோதிகள் நம்மை எதிர்க்கத்தான் செய்வார்கள். சோதனைகளே இல்லாமல் எப்படி சாதிக்க முடியும்? சாதனையாளர்களுக்கு சோதனைகள் பெரிய வேதனைகள் அல்ல என்றே கருதுகிறேன். 
ஜாதி வெறிபிடித்த மனித மிருகங்கள் நடமாடும் இந்த மண்ணில் ‘பெரியார், அம்பேத்கர்’ என்பவர்கள் ஜாதிவெறிக்கு விரோதமாக பிரச்சாரம் செய்தனர் பலர் எதிர்த்தனர்; ஆனால், அவர்கள் அவற்றை பொருட்படுத்தவில்லை சோதனைகளை சகித்து தொடர்ந்து போராடினர். லட்சக்கணக்கான சிந்தனையாளர்கள் ஒன்று திரண்டனர். மூடநம்பிக்கைகள் புரையோடிப்போன சமுதாயத்தில் சீர்திருத்த நறுமணம் வீசக் காரணமானார்கள். அன்று அவர்கள் பயந்திருந்தால் இந்தியாவுக்கு பயனுள்ளவர்களாக இருந்திருக்க முடியாது. மனிதனுடைய கைகளால் கட்டப்பட்ட கோயில்களில் கடவுள் குடியிருக்க மாட்டார். மனிதனுடைய உள்ளத்தில்தான் குடியிருப்பார் என்னும் உண்மையை தைரியமாய் சொல்லும்போது, பழமைவாதிகள் எதிர்ப்பார்கள். ஆனால், கவலைப்படாதீர்கள்! உங்களோடு பரமாத்மாவும் நிற்பார். தலையில் தேங்காய் உடைத்து தலையைக் காயப்படுத்தினால் தான் பரமேஷ்வரன் அருள்புரிவார் என்பது மூடநம்பிக்கை என்று சமுதாயத்திற்கு சுட்டிகாட்ட முதுகெலும்போடு நில்லுங்கள். கன்னத்தில், நாக்கில் அலகு குத்தாமல், வெறும் பிரார்த்தனை மூலமே நலமாய் வாழலாம் என்று தைரியமாக கூறுங்கள். பகுத்தறிவு உணர்வாளர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருகிறது. உங்களோடு நாங்களும் நிற்கிறோம்.
காந்தியடிகள் அறவழியில் போராடினார். அதை RSS இயக்கத்தினர் எதிர்த்தார்கள். காமராஜர் தனக்கென்று எதையும் சேர்த்து வைக்காமல் நாட்டுக்காகவே வாழ்ந்தார். பயப்படாமல் சோதனைகளை எதிர்கொண்டார். இன்னும் நாடு போற்றும் நல்லோர்களின் வரிசையில் இருக்கிறார். ராஜாராம் மோகன்ராய், பண்டித ரமாபாய் அம்மையார் போன்றவர்கள் உடன்கட்டை ஏறும் பழக்கம், தேவதாசிமுறை என்னும் சமுதாய சீர்கேடுகளுக்கு விரோதமாக நின்றனர். பல மதவாதிகளுடைய எதிர்ப்புகளை சந்தித்தாலும் சோர்ந்து போகவில்லை. உலகில் உங்களுக்கு துன்பங்கள் வரலாம். ஆனால், நமக்கு முன்செல்லும் பரமேஷ்வரன் துன்பங்களை மேற்கொண்டு நமக்கு முன்னோடியாயிருக்கிறார். உலக மக்கள் உங்களைப் பகைப்பதற்கு முன், கடவுளைப் பகைத்துவிட்டார்கள் (யோவா. 15:18) என்று முதலாவது அறியுங்கள். இப்போது சிறிது காலம் நீங்கள் பல்வகை சோதனைகளால் துயருறவேண்டி இருப்பினும் அந்நாளிலே (இறுதிநாளில்)பேருவகை கொள்வீர்கள் (1பேது. 1:6). கிறிஸ்து இயேசுவிடம் இணைந்து இறைப்பற்றுடன் வாழ விரும்புவோர் துன்பத்துக்குள்ளாக நேரிடலாம் (2திமொ.3:12).ஆன்மாவைக்கொல்ல இயலாமல், உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்சவேண்டாம். ஆன்மாவையும் உடலையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே அஞ்சுங்கள் (மத்.10:28). கனிகளற்ற மரத்தில் யாரும் கல்லெறிய மாட்டார்கள். கனி கொடுக்கும் மரத்திற்கு சோதனைகளுண்டு. உங்கள் ஒவ்வொரு சோதனையின் நிமிடங்களிலும் கடவுள் உங்களோடிருந்து, அவற்றை தாங்கும் சக்தியைத் தருவார். உங்களால் தாங்க முடியாத அளவுக்கு சோதனைகளை கடவுள் உங்கள் வாழ்வில் அனுமதிக்கமாட்டார் (1கொரி. 10:13). எனவே எதிர்ப்புகளுக்கு பயப்படாதிருங்கள். கடவுள் கூட நிற்பார்.
பேதுருவும் யோவானும் கல்வியறிவற்றவர்கள் என்பதைத் தலைமைச் சங்கத்தார் அறிந்திருந்ததால், அவர்களது துணிவைக் கண்டு வியப்படைந்து, அவர்கள் இயேசுவோடு இருந்தவர்கள் என்பதையும் உணர்ந்து கொண்டனர் (தி.பணி.4:13). இயேசுவை ஏற்றுக்கொண்டால் தைரியம் தானாக வரும். இயேசு கூறினார், “என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம். என்மீது அன்பு கொண்டிராதவர் நான் சொல்வதைக் கடைபிடிப்பதில்லை” (யோவா.14:23,24).

நான் மிகவும் இளைஞனாக இருக்கிறேன்.