நான் ஒரு அரசியல்வாதி. கிறிஸ்தவம் அரசியல்வாதிகளுக்கு ஒத்துவருமா ?
நிச்சயமாக ஒத்துவரும். இன்று 90% அரசியல்வாதிகளும் உண்மையற்று தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மக்களுக்கு தொண்டு செய்வதாக தங்களை மக்களுக்கு வெளிக்காட்டினாலும், தங்கள் பணப்பைகளை தந்திரமாக நிரப்புவது தான் அவர்களுடைய முக்கிய நோக்கமாக உள்ளது. இந்நிலையில் ஒருவசனத்தை நினைப்பூட்ட ஆசைப்படுகிறேன். பணஆசை உள்ளவர்களிடம் இயேசு பேசும்போது “ஒருவர் உலகம் முழுவதையும் தமதாக்கி கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்கு கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்?”(மாற்:8:36,37). உயிரையே பணயம் வைத்து அநியாயமாக சம்பாதிக்கிறார்கள். ஆனால், உண்மையான மன அமைதியை இழந்துவிடுகிறார்கள். என்ன நோக்கத்தோடு அரசியலுக்கு வருகிறார்களோ அந்த நோக்கம் நிறைவேறினாலும்,சம்பாதித்த பணத்தை அனுபவிக்க உயிர் தேவை அல்லவா? சட்டத்திற்கு புறம்பாக பணம் சம்பாதிக்கும் அரசியல்வாதிகள் எல்லாருமே அன்னா ஹசாரே போன்ற தேசப்பற்றாளர்களுக்கு விரோதமாய் நிற்கிறார்கள். நாம் கோடிக்கணக்கில் சம்பாதித்துவிட்டு அவற்றை ஆனந்தமாய் அனுபவிக்கமுடியாமல், செத்துச்செத்து பிழைப்பதெல்லாம் ஒரு பிழைப்பா?
நான் இப்படியெல்லாம் கூறினாலும் காமராஜர், கக்கன் போன்ற தியாகிகளும் இந்த மண்ணில் வாழ்ந்த முன்னுதாரணமான அரசியல்வாதிகள்தான். தங்களுக்கென்று வாழாமல், நாட்டுக்காகவே வாழ்ந்த உயர்ந்த மனிதர்கள் இன்று எங்கே போய்விட்டர்கள்? பிறர் நலத்தோடு மக்களுக்காக உழைக்க, உண்மையோடு உயர்ந்த நோக்கங்களோடு சுயநலமில்லாமல் பாடுபட அரசியல்வாதிகள் ஆயிரக்கணக்கில் தேவை. அப்படிப்பட்டவராக நீங்கள் ஏன் இருக்க கூடாது? மக்கள் நலன் ஒன்றே உங்கள் இலட்சியமானால், உங்களுக்கு இயேசுவின் கொள்கை எப்போதுமே முட்டுக்கட்டையாக நிற்காது. எனவே, நீங்கள் இயேசுவை ஏற்றுக்கொண்டு தேவ மக்களோடு வாழ ஒப்புக்கொடுங்கள். நிம்மதியாக வாழும் ஒரு சாதாரண மனிதன், நிம்மதியில்லாத பணக்காரனைவிட பெரியவன் என்பதை நினைவில் கொண்டு பரமாத்மாவிடம் உங்கள் வாழ்வை ஒப்புக்கொடுங்கள். கடவுள் உங்களை வழி நடத்தட்டும்.