பணமே தெய்வம்.
இயேசு ஒருமுறை மக்களை நோக்கி, “எவ்வகை பேராசைக்கும் இடம் கொடாதவாறு, எச்சரிக்கையாயிருங்கள். மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது” என்றார். அவர்களுக்கு ஓருவமையைச் சொன்னார். “செல்வனாயிருந்த ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது. அவன், ‘நான் என்ன செய்வேன் என் விளைபொருட்களை சேர்த்து வைக்க இடமில்லையே என்று எண்ணினான். ஒன்று செய்வேன் என்களஞ்சியங்களை இடித்து இன்னும் பெரிதாகக் கட்டுவேன் அங்கு என் தானியத்தையும் பொருட்களையும் சேர்த்து வைப்பேன் பின்பு, ‘என் நெஞ்சமே உனக்கு பல்லாண்டுகளுக்கு வேண்டிய பலவகைப் பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. நீ ஓய்வெடு, உண்டு, குடித்து, மகிழ்ச்சியில் திளைத்திடு’ என சொல்லுவேன் என்று தனக்குள் கூறிக்கொண்டான். ஆனால், கடவுள் அவனிடம், அறிவிலியே, இன்றிரவே உன்னுயிர் உன்னை விட்டுப் பிரிந்துவிடும் அப்போது நீ சேர்த்து வைத்தவை யாருடையவை ஆகும்?” என்று கேட்டார். ஆகவே, நான் உங்களுக்கு சொல்கிறேன், உயிர்வாழ எதை உண்பது என்றோ, உடலுக்கு எதை உடுத்துவது என்றோ கவலை கொள்ளாதீர். உணவைவிட உயிரும், உடையைவிட உடலும் உயர்ந்தவை அல்லவா? காகங்களை கவனியுங்கள் அவை விதைப்பதுமில்லை, அறுப்பதுமில்லை, அவற்றுக்குச் சேமிப்பு அறையுமில்லை, களஞ்சியமுமில்லை. கடவுள் அவற்றுக்கும் உணவளிக்கிறார். நீங்கள் பறவைகளைவிட மேலானவர்களல்லவா?” (லூக். 12:16-20, 22-24) என்றார்.
பணமே தெய்வம் என்னும் கொள்கையிலேயே பெரும்பான்மையான பணக்காரர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், பணத்தின் பெருக்கம் எவ்வளவு ஆபத்தானது என்பதை மனிதன் நினைத்துப் பார்ப்பதில்லை. உலகிலேயே செல்வம் கொழிக்கும் முக்கியமான நாடுகளில் ஒன்று அமெரிக்கா. அதன் முக்கியமான கட்டடங்களில் ஒன்று வர்த்தக மையம் (Trade Centre) என்னும் இரட்டை கோபுரம். 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதி அந்த மகா பிரம்மாண்டமான கட்டடம் இஸ்லாமிய தீவிரவாதி ஒசாமா பின்லேடன் என்பவனால் தகர்க்கப்பட்டது. அதில் வேலை பார்த்துக்கொண்டிருந்த கிட்டத்தட்ட 3000 பேர் அந்நாளில் மடிந்து போனார்கள். அந்த கட்டடத்தில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் பல மதம், ஜாதி, மொழியைச் சார்ந்தவர்கள். அவர்கள் பணம் சம்பாதிப்பதற்காகத் தான் அங்கே வேலை பார்த்துக் கொண்டிருந்திருப்பார்கள். ஆனால், ஒரு நிமிடத்தில் அவர்கள் வாழ்க்கை முடிந்துவிட்டது. கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்துவிட்டு, நிம்மதியில்லாமல் நடைபிணமாய் வாழும் மக்களை நாம் கண்கூடாகப் பார்க்கவில்லையா? “பணம் எல்லாவற்றுக்கும் உதவும்” (ச.உ. 10:19) என்று கூறும் வேதாகமம், “பணஆசை எல்லா தீமைகளுக்கும் ஆணிவேராய் இருக்கிறது” (1திமொ. 6:10) என்றும் கூறுகிறது.
உலகில் இதுவரை தற்கொலை செய்து கொண்டவர்கள் எல்லாரும் பணமில்லாதவர்களா? பணமில்லாதவனுக்கு நிம்மதியில்லை என்றோ, பணம் உள்ளவனுக்கு நிம்மதியுண்டு என்றோ கூறிவிட முடியாது. இரண்டு லட்சம் ரூபாயை உங்களோடு வைத்துக்கொண்டு, தைரியமாக உங்களால் தூங்கிக்கொண்டே பேருந்தில் பயணம் செய்யமுடியுமா? இன்று தற்கொலை செய்வதில் ஏழைகளைவிட பணக்காரர்களே அதிகம். பணம் வந்தால் மனிதநேயம் வந்துவிடுமா? தீவிரவாதம் ஒழிந்துவிடுமா? வரதட்சணைக் கேட்டு கொடுமைப் படுத்துவது, ஏழைகளுடைய வீட்டைவிட பணக்காரர்களுடைய வீட்டில் தான் அதிகமாக அரங்கேறுகிறது. உலகத்திற்கு நாம் எதையும் கொண்டு வந்ததில்லை உலகத்தை விட்டு எதையும் கொண்டு போகவும் முடியாது. எனவே, உணவும் உடையும் நமக்கு இருந்தால், அவற்றில் நாம் மனநிறைவு கொள்வோம்.
செல்வத்தை சேர்க்க விரும்புகிறவர்கள், சோதனையாகிய கண்ணியில் சிக்கிக் கொள்கிறார்கள் அறிவீனமான, தீமை விளைவிக்கக் கூடிய பல்வேறு தீய நாட்டங்களில் வீழ்ந்துவிடுகிறார்கள். இவை மனிதரைக் கேட்டிலும் அழிவிலும் ஆழ்த்துபவை (1திமொ. 6:6-9) என்று புத்தியுள்ள பவுல் கூறுகிறார். ஒருவன் பணக்காரனாய் மாறிவிட்டால் அவனுடைய குழந்தையைக் கடத்திச் சென்று, அவனை மிரட்டி கோடிக்கணக்கான பணத்தைப் பறித்து விடுகிறார்கள். உடல் நிரம்ப அணிகலன்களை அணிந்து வெளியே செல்லும் ஒரு பெண், பத்திரமாக உயிரோடு வீட்டிற்கு திரும்பும்வரை இதயம் தாறுமாறாக பதைபதைக்கிறது.
பணம் இல்லாமல் இருக்கும்போது, அந்த ஏக்கத்தில் பல உபாய தந்தரங்களின் மூலம் மனிதன் பணத்தை சம்பாதித்துவிடுகிறான். ஆனால், கிராமத்தில் நிம்மதியாக பாயில் தூங்கியவன், பட்டணத்துக்கு வந்து பணத்தை வரம்புமீறி சம்பாதித்தபின் பஞ்சுமெத்தையில் தூங்க முயன்றாலும் தூக்கமின்றி துன்பப்படுகிறானே! ஒரு நிமிடத்தில் பல்லாயிரக்கணக்கில் சம்பாதித்து விடும் திரைப்படத்துறையில் தற்கொலை செய்வோரின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போகிறதே!
ஒருமுறை ஒரு பெரும்பணக்காரர், இதய நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒரு குறிப்பிட்ட நாளில் அவருக்கு இதய அறுவைசிகிட்சை செய்தார்கள். ஆனால், என்ன பரிதாபம்! அறுவை சிகிட்சை நடந்து கொண்டிருக்கும்போதே அவரது உயிர்பிரிந்தது, பணம் அவரது கடவுளாயிருந்தால் அவரது உயிரை காப்பாற்றியிருக்க வேண்டுமே! AVM ராஜன் என்னும் முன்னாள் திரைப்பட நடிகர் பணம், பணம் என்று ஓடிக்கொண்டிருந்தார். திடீரென பெரிய கடனுக்குள்ளாகி மீள வழியின்றி தற்கொலை செய்ய தீர்மானித்தார். அந்நிலையில் கிறிஸ்துவின் அன்பை விளக்கும் கருணாமூர்த்தி என்னும் பக்தித் திரைப்படத்தைப் பார்த்து, பணமல்ல கடவுளே கடவுள் என்ற தீர்மானத்தில் உறுதிப்பட்டு, ‘இயேசுவே சரணம்’ என்று அர்ப்பணித்தார். இப்போது இறையருளால் கடன்கள் எல்லாவற்றையும் தீர்த்து அருட்பணி செய்து கொண்டிருக்கிறார்.
கடவுள்பக்தி இல்லாதவரிடம் கிடைத்த பெருஞ்செல்வம் அவருக்கு தீமையாகவே முடியும். இயேசு ஒருமுறை கூறினார்: “மண்ணுலகில் உங்களுக்கென செல்வத்தை சேமித்து வைக்கவேண்டாம். இங்கே பூச்சியும் துருவும் அழித்துவிடும், திருடரும் அதைக் கன்னமிட்டுத் திருடுவர். ஆனால் விண்ணுலகில் உங்கள் செல்வத்தை சேமித்து வையுங்கள். அங்கே பூச்சியோ துருவோ அழிப்பதில்லை திருடரும் கன்னமிட்டு திருடுவதில்லை. உங்கள் செல்வம் எங்குள்ளதோ, அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும் (மத். 6:19-21).
நாளைக்காகக் கவலைப்படாதீர்கள். ஏனெனில் நாளைய கவலையைப் போக்க நாளை வழிபிறக்கும். அந்தந்த நாளுக்கு அன்றன்றுள்ள தொல்லையே போதும்” (மத். 6:34) என்று நம் குருநாதன் கற்பித்தார். ‘பேராசை பெரும் நஷ்டம்’ என்று பெரியவர்கள் கூறியது சரிதானே. மதிப்புக்குரிய பதவியிலிருக்கும் அதிகாரிகள் பலர், பணஆசையால் லஞ்சம் வாங்கி, தாங்கள் கஷ்டப்பட்டு உருவாக்கிய நற்பெயரைக் கெடுத்துக் கொள்கிறார்கள். குறுக்கு வழியில் சம்பாதித்த கோடிக்கணக்கான பணத்தை மருத்துவனையில் பட்டுவாடா செய்வது எவ்வளவு பரிதாபமாக உள்ளது! ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கினால், பத்தாயிரம் ரூபாய் இழப்பு வருகிறது.
கர்த்தரை நம்புகிறவன் உண்மையாகவே செழிப்பான் (நீதி. 28:25). கடவுள் ஒருவருக்கு பொருள் செல்வமும் நல்வாழ்வும் கொடுத்து, அவற்றை அவர் அநுபவித்து மகிழும் வாய்ப்பையும் அளிப்பாரானால், நன்றியோடு தம் உழைப்பின் பயனை நுகர்ந்து இன்புறலாம். அது அவருக்கு கடவுள் அருளும் நன்கொடை. தம் வாழ்நாள் குறுகியதாய் இருப்பதைப் பற்றி அவர் கவலைப்படமாட்டார். ஏனெனில் கடவுள் அவர் உள்ளத்தை மகிழ்ச்சியோடிருக்கச் செய்கிறார் (ச.உ. 5:19,20). ஆண்டவரின் ஆசி செல்வம் அளிக்கும் அச்செல்வம் துன்பம் கலவாது அளிக்கப்படும் செல்வம் (நீதி. 10:22). பண ஆசை உள்ளவருக்கு எவ்வளவு பணம் இருந்தாலும் ஆவல் தீராது. செல்வத்தின் மேல் மிகுந்த ஆசைவைப்பவர் அதனால் பயனடையாமற் போகிறார். சொத்து பெருகினால் அதைச் சுரண்டித் தின்போரின் எண்ணிக்கையும் பெருகும்.செல்வர்களுக்கு தங்கள் சொத்தை கண்ணால் பார்ப்பதைத் தவிர வேறு என்ன பயனுண்டு? வேலை செய்பவரிடம் போதுமான சாப்பாடு இருக்கலாம். அல்லது இல்லாதிருக்கலாம். ஆனால் அவருக்கு நல்ல தூக்கமாவது இருக்கும். செல்வரது செல்வப்பெருக்கே அவரை தூங்கவிடாது. (ச.உ. 5:10-12).
ஒருவர் சேமிக்கும் பணம் அவருக்கு துன்பத்தையே விளைவிக்கும் என்று சாலமோன் என்னும் ஞானி கூறினார். பணம் அதிகம் இல்லாதவன்; நாட்டில் தைரியமாக நடமாடலாம். ஆனால் பணக்காரனால் முடியவில்லையே. இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி என்று பலர் படுகொலை செய்யப்பட்டபோது பணம் அவர்களைக் காப்பாற்ற முடியவில்லையே.