அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?
அன்புள்ள சகோதரங்களே,
இந்த புத்தகத்தை எழுதிய நான் ‘இயேசு கிறிஸ்துவே உலக இரட்சகர்’ என்று நம்பும் கிறிஸ்தவர் என்பதை முதலாவது அறிவிக்கிறேன்.
இயேசு கிறிஸ்து தன் இரட்சிப்பின் நற்செய்தி உலகம் முழுவதும் பரவவேண்டும் என்று சித்தம் கொண்டு, “உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள் (மாற்கு 16:15) என்று தன் சீடர்களுக்கு அன்புக் கட்டளையிட்டார். ஏனென்றால், எல்லா மனிதரும் மீட்புப் பெறவும் உண்மையை அறிந்துணரவும் வேண்டுமென அவர் விரும்புகிறார் (1திமொ. 2:4). அந்த கட்டளைப்படி இயேசுவின் சீடர்கள் எட்டு திக்கும் சென்று நற்செய்தியை பரப்பினர்.
நானும் இந்தியா முழுவதும் சுவிசேஷம் பரவவேண்டும் என்றும், இந்தியர்கள் அனைவரும் இரட்சிக்கப்படவேண்டும் என்றும் ஏங்குகிறேன்.
1956-ல் அம்பேத்கர் இந்துத்துவ சாதி இழிவிலிருந்து விடுதலை அடைவதற்காக 6 லட்சம் இந்து தலித்துகளோடு பெளத்தத்துக்கு மாறினார்.
1986-ல் நெல்லை மீனாட்சிபுரத்திலுள்ள 900 இந்து தலித்துகள் இந்துத்துவ சாதி இழிவிலிருந்து விடுதலை அடைவதற்காக இஸ்லாத்துக்கு மாறினார்கள்.
2018 ஏப்ரல் குஜராத்திலுள்ள 300 இந்து தலித்துகள் இந்துத்துவ சாதி இழிவிலிருந்து விடுதலை அடைவதற்காக பெளத்தத்துக்கு மாறினார்கள்.
2020 பிப்ரவரியில் கோவையிலுள்ள 430 இந்து தலித்துகள் இந்துத்துவ சாதி இழிவிலிருந்து விடுதலை அடைவதற்காக இஸ்லாத்துக்கு மாறினார்கள்.
2020 அக்டோபர் உ.பி-யிலுள்ள 236 இந்து தலித்துகள் இந்துத்துவ சாதி இழிவிலிருந்து விடுதலை அடைவதற்காக பெளத்தத்துக்கு மாறினார்கள்.
லட்சக்கணக்கான ஒடுக்கப்பட்டோர் இந்துத்துவ சாதி இழிவிலிருந்து விடுதலை அடைவதற்காக விரக்தியில் கடவுளே இல்லை என்னும் கொள்கைக்கு மாறிக்கொண்டிருக்கிறார்கள்.”இந்துத்துவ சாதிய இழிவிலிருந்து விடுதலை அடைய விரும்பி மதம் மாறுவோர் நிச்சயமாக கிறிஸ்தவத்தை தேர்வு செய்யமாட்டார்கள்” என்று திருமாவளவன் தன் காணொலியில் கூறுகிறார்.
இப்படிப்பட்டோரைப் பார்த்து : “வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே, எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள்; உங்களுக்கு நான் இளைப்பாறுதல் தருகிறேன்” (மத்.11:28) என்று நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து கரிசனையோடு அழைக்கிறார்.
ஆனால், தலைமுறைகளாக அம்மக்கள் வருத்தப்பட்டு சுமந்த சாதி இழிவு என்னும் பாரத்திலிருந்து இளைப்பாறுதல் அடைய விரும்பி, அவர்கள் ஏன் நம் விடுதலை நாயகன் இயேசு கிறிஸ்துவிடம் வரவில்லை என்ற கேள்விக்கு இந்த புத்தகத்தில் பதில் எழுதியிருக்கிறேன்.
Thank you for reading this book.
Bro Agathiyan (Augustine)