063. என்னுடைய நண்பர்கள் என்னைக் கேலி செய்வார்கள் !

என்னுடைய நண்பர்கள் என்னைக் கேலி செய்வார்கள் !

நீங்கள் ஒரு கிராமத்தில் வளர்க்கப்பட்டீர்கள் என்று வைத்துக்கொள்வோம். உங்கள் ஏழைத்தந்தை உங்களை கொடிய வறுமையின் மத்தியில் படிக்கவைத்தார். உங்களது கடின உழைப்பும், உங்கள் பெற்றோரின் பொருளாதார உதவியும் சேர்ந்து நீங்கள் படித்து மருத்துவராகி விடுகிறீர்கள்.  இதன் நிமித்தம் நீங்கள் கிராமத்தை விட்டு பட்டணத்துக்கு குடிபெயர்ந்து போகிறீர்கள். உங்கள் தாயும், தகப்பனும் உங்களோடு வரவிரும்புகிறார்கள். கிராமவாசிகளான, படிப்பறிவற்ற உங்கள் பெற்றோரை உங்கள் பட்டணத்து வீட்டிற்கு அழைத்து சென்றால், உங்கள் நாகரீக நண்பர்கள் உங்களை தரக்குறைவாக நினைப்பார்கள் என்று பயப்படுவீர்களா? உங்களை பெற்று, ஆளாக்கி, படிக்கவைத்து, இவ்வுயர் நிலைக்கு கொண்டுவந்த அந்த தியாக நெஞ்சங்களை புறக்கணிப்பீர்களா? நிச்சயமாகவே புறக்கணிக்கமாட்டீர்கள். அதுபோல நம்மை படைத்து, நம் நாசியில் சுவாசத்தை வைத்து, சிந்தித்து செயல்பட ஆறறிவுகளைக் கொடுத்து, ஆரோக்கியமாக வைத்திருக்கும் தெய்வத்தை ஆராதிக்க நாம் ஏன் கூச்சப்பட வேண்டும்?
நீங்கள் சிறுவனாக இருந்தபோது உங்களுக்கு உணவுகொடுத்து பராமரிக்க உங்கள் நண்பர்கள் யாரும் வரவில்லை. பாக்கட்டிலே பத்து பணமிருந்தால் உந்தன் பின்னே நண்பனுண்டு. வயிற்றுக்கு வழியின்றி தவிக்கையிலே எந்த நண்பன் கூட உண்டு? உங்கள் பணப்பை நிறைந்திருக்கும் வரை உங்களை சுற்றி நண்பர்கள் நிறைந்திருப்பார்கள். நீங்கள் காசு இல்லாமல் கஷ்டப்படும் போது, நகமும் சதையும் போலிருந்தவர்கள் கூட நன்றி மறந்து போகிறார்கள். நீங்கள் பணக்காரராக இருக்கும்போது, ‘என் உயிர் நண்பனே’ என்று சொன்னவர்கள் எல்லாருமே உண்மையான நண்பர்களா, இல்லையா என்பது உங்கள் கஷ்டநேரத்தில் தான் தெரியும். இந்த மாறுபாடான உலகில் நிலையற்ற நண்பர்களுக்காக இறைவனைப் புறக்கணிப்பது நல்லதல்ல. செல்வமுள்ளவருக்கு நண்பர்கள் பலர் இருப்பர் (நீதி. 14:20). ஆனால், கடவுள் உங்களுக்கு செய்த நன்மைகளை நண்பர்களுக்காகப் புறக்கணிப்பது அறிவல்ல. “மக்கள் முன்னிலையில் என்னை ஏற்றுக்கொள்பவரை, விண்ணுலகிலிருக்கும் என் தந்தையின் முன்னிலையில் நானும் ஏற்றுக் கொள்வேன். மக்கள் முன்னிலையில் என்னை மறுதலிப்பவர் எவரையும் விண்ணுலகிலிருக்கிற என் தந்தையின் முன்னிலையில் நானும் மறுதலிப்பேன்” (மத். 10:32,33) என்று இயேசு கூறினார். இயேசு வாழ்ந்த நாட்களில், தலைவர்களில் கூட பலர் இயேசுவை நம்பினர். ஆனால், பரிசேயருக்கு (மதத்தீவிரவாதிகளுக்கு) அஞ்சி அவர்கள் அதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளவில்லை. அப்படி ஒப்புக்கொண்டால் அவர்கள் தொழுகைக் கூடத்திலிருந்து விலக்கி வைக்கப்படுவார்கள். அவர்கள் கடவுள் அளிக்கும் பெருமையை விட மனிதர்கள் அளிக்கும் பெருமையை விரும்பினார்கள் (யோவா. 12:42,43). பயந்தாங்கொள்ளி வாழ்க்கை வாழ்ந்து எதை சாதிக்க போகிறோம்? தைரியமாய் உங்களுக்காக உயிர்கொடுத்த இயேசுவின் பக்கம் நில்லுங்கள். கடவுள் உங்களுக்கு அருள்புரிவார்.

எனது தமிழ் பெயரை மாற்றி ஆங்கிலப் பெயரை வைத்து விடுவீர்களே !