எனது தமிழ் பெயரை மாற்றி ஆங்கிலப் பெயரை வைத்து விடுவீர்களே !
கடவுள் மொழிவெறி பிடித்தவரல்ல. அவர் ஆங்கிலேயர்களுக்கென்ற சிறப்புக் கடவுளுமல்ல. அவர் எல்லா மொழி மக்களுக்கும் பொதுவானவர். இயேசு தன் கொள்கைகளை மக்களுக்கு போதிக்கும்போது, நாம் பழைய பெயர்களை மாற்றி கண்டிப்பாக புதுப்பெயர் வைக்க வேண்டுமென்றோ, புதுப்பெயரை வைக்கக்கூடாது என்றோ கூறவில்லை. அது நம் விருப்பம். அவர் நமது பெயரை மாற்றுவதற்காகவோ, உணவு பழக்கத்தை மாற்றுவதற்காகவோ ஆடை அணிகலன்களை மாற்றுவதற்காகவோ வரவில்லை. சுருக்கமாக சொன்னால், இயேசு ஒரு மனிதனுடைய கலாச்சாரத்தை மாற்ற வரவில்லை. மாறாக அவனுடைய பண்பாட்டை மாற்ற வந்தார்.
அன்பழகன் என்ற அர்த்தமுள்ள பெயரை எடுத்துவிட்டு சிம்சோன் என்று பெயர்வைப்பது மதவெறிக் கிறிஸ்தவர்களின் கண்டுபிடிப்பு. கிறிஸ்துவின் தூண்டுதலினால் உருவானதல்ல. என் பெயர் அகஸ்டின். என் தந்தையின் பெயர் திரு.ஜோசப். ஆனால், என் அருட்பணிக்கு என் ஆங்கிலப் பெயரே தடையாக இருந்ததால் என் பெயரை அகத்தியன் என்று மாற்றிக்கொண்டேன். என் பழைய பெயரை மக்கள் கேட்டவுடனே, நான் பேசப்போகும் உயிரினும் மேலான மீட்புக்கொள்கையை அவர்கள் புறக்கணித்ததை நான் உணர்ந்திருக்கிறேன். ஒருவன் தமிழில் பெயர் வைத்திருப்பதால் அவன் புனிதன் என்றோ, ஆங்கிலத்திலோ அரபு மொழியிலோ பெயர் வைத்திருந்தால் அவன் மோசமானவன் என்றோ கருதமுடியாது.
நான் எந்த மொழியையும் உயர்ந்ததென்றோ தாழ்ந்ததென்றோ கூறமாட்டேன். அவரவர் மொழி அவரவருக்கு உயர்வாக தெரியும். ஒருசிலருக்கு தங்கள் தாய்மொழி பிடிக்காது. பலர் தங்கள் பெயரை தமிழில் வைத்திருந்தாலும், ஆங்கிலத்தில் பேசுவதை விரும்பி, அதை மதிப்புக்குரிய மொழியாக மனதளவில் ஏற்றுக்கொண்டு ஆங்கிலேயரைப் போல பேச ஏங்குவதும், Spoken English Course படிக்க பிள்ளைகளை அனுப்புவதும் எல்லோருக்கும் தெரியுமே! அன்னை தெரேசா தன் பெயரை ஆங்கிலத்தில்தான் வைத்திருந்தார்கள். அவர்களுடைய பண்பாடுதான் அம்மையாரை உலக உயரத்திற்கு கொண்டு சென்றது. ஜாதி, மத, இன, மொழி வேறுபாடின்றி எல்லார் மனதிலும் அந்த தாய் இடம் பிடித்திருக்கிறார்களே! ஒருவர் எம்மொழியிலும் பெயரிடலாம். ஆனால், அவர் மக்களுக்கு எவ்வளவு பயனுள்ளவர் என்பதை பொறுத்தே மக்கள் மனதில் இடம் பிடிக்கமுடியும்.
இயேசு, சீமோனுடைய பெயரை ‘பேதுரு’ என்று மாற்றினார். ‘சீமோன்’ என்ற வார்த்தையின் அர்த்தம் செவிகொடுப்பது. அந்த பெயரை எடுத்துவிட்டு பாறை என்னும் அர்த்தமுடைய ‘பேதுரு’ என்ற பெயரை வைத்தார். அங்கே மொழிமாறவில்லை அர்த்தம் மாறியது. சவுல் தன்னைத்தானே பவுல் என்றும் அழைத்துக்கொண்டார். ‘ஏமாற்றுக்காரன்’ என்னும் அர்த்தமுடைய ‘யாக்கோபு’ என்னும் பெயரை எடுத்துவிட்டு இஸ்ரவேல் என்ற பெயரை தேவன் கொடுத்தார். உயர்ந்த தகப்பன் என்னும் அர்த்தமுடைய ‘ஆபிராம்’ என்னும் பெயரை எடுத்துவிட்டு, ‘பெருங்கூட்ட மக்களுக்கு தகப்பன் என்னும் அர்த்தமுடைய ‘ஆபிரஹாம்’ என்னும் பெயரை சூட்டியது அர்த்தமுள்ளதாய் இருக்கிறதல்லவா? குழந்தை இல்லாதிருந்த ஆபிராமுக்கு, ‘பெருங்கூட்டத்திற்கு அப்பன் என்று பெயரிட்டது அவனது நம்பிக்கையை வளரச் செய்வதற்காக இருக்கலாம் அல்லவா?
ஒரு நாள் ஒரு ஊழியர், ஒரு பெண்ணின் தலையின் மீது கைவைத்து பிரார்த்தனை செய்தபோது அப்பெண், பத்திரகாளி வந்திருக்கிறேன் உயிரை வாங்காமல் போகமாட்டேன்’ என்று கூறினாள். உயிரை வாங்க ஏவி விடப்பட்டது கடவுளல்ல. எனவே, அப்படிப்பட்ட பெயர்களை கிறிஸ்தவ ஊழியர் மாற்றுவது இயல்பு. அதற்காக ஆங்கில பெயர்களைத்தான் வைக்கவேண்டும் என்று ஊழியர் அடம்பிடிப்பது தவறு. ‘ரோஜா’ என்றால் இந்து பெயர், ரோஸ் என்றால் கிறிஸ்தவ பெயர் என்று மனநோயாளிகளாயிருக்கும் பிரிவினைவாதிகள் கூறுவார்கள். மல்லிகா என்னும் பெயரில் இயேசுவை ஏற்றுக்கொண்ட பெண்ணின் பெயரை ஜாஸ்மின் என்று மாற்றுவது கோமாளித்தனமாக உள்ளது. வெளிமாற்றங்களை உருவாக்குவதைவிட மனதினுள் மாற்றத்தை உருவாக்குவதே அர்த்தமுள்ளது. இயேசு ஒருமுறை தன் சீடர்களிடம் பேசும்போது, உங்கள் வெளிப்புறம் சுத்தமாகும்படி முதலாவது உட்புறத்தை சுத்தமாக்குங்கள் (மத். 23:25,26) என்று உபதேசித்தார். திருமுழுக்கு கொடுக்கும்போது கட்டாய பெயர்மாற்றம் செய்வது இயேசுவால் கூறப்படாத காரியம். அது பாஸ்டர்களின் கண்டுபிடிப்பு. அப்படியே அவர் மாற்றினாலும் உங்கள் அனுமதி இல்லாமல் மாற்றக்கூடாது.
பொருத்தமற்ற, அர்த்தமற்ற பெயரை எடுத்துவிட்டு, அர்த்தமுள்ள, நடைமுறை வாழ்வுக்கு பயனுள்ள பெயரை வைப்பது தவறில்லையே. ஒரு கிறிஸ்தவன் தமிழிலோ, சமஸ்கிருதத்திலோ ஆங்கிலத்திலோ, அரபுமொழியிலோ, கிரேக்கத்திலோ, எபிரேயத்திலோ பெயர்வைப்பான். ஆனால், ஒரு இந்துவால் ஆங்கிலத்தில் பெயர் வைக்கமுடியுமா? யோசியுங்கள்.
நாங்கள் அணிந்திருக்கும் நகையை கழட்டவும், பூ, பொட்டு வைக்கக்கூடாது என்றும் கட்டாயப்படுத்துவீர்களே !