எங்கள் தெய்வங்களோடு இயேசுவையும் கும்பிடுகிறேன். இது தவறா ?
உங்களது பெருந்தன்மையான உள்ளத்தைப் பாராட்டுகிறேன். ஆனால், நீங்கள் நினைப்பது போல இந்துக்களுக்கு ஒரு கடவுள், கிறிஸ்தவர்களுக்கு ஒரு கடவுள், இஸ்லாமியருக்கு ஒரு கடவுள் இல்லை. ஒரே கடவுள் மட்டுமே கடவுளாயிருக்கிறார். உண்மையான கடவுளைப் பின்பற்றும்போது பொய் தெய்வங்களை (போலிக்கடவுள்களை) வணங்கக்கூடாது என்று வேதம் எச்சரிக்கிறது.
“நீங்கள் இந்த பயனற்ற பொருட்களை விட்டுவிட்டு, விண்ணையும் மண்ணையும் கடலையும் அவற்றிலுள்ள அனைத்தையும் உண்டாக்கிய வாழும் கடவுளிடம் திரும்புங்கள்” (தி.பணி. 14:15, 1தெச. 1:9) என்று பவுல் கூறுகிறார். “என்னைத்தவிர வேறு தெய்வங்கள் உனக்கு இருத்தல் ஆகாது” (வி.ப. 20:3) என்று சர்வேஸ்வரன் கூறியிருக்கிறார். “உங்களிடையே வேற்று தெய்வம் இருத்தலாகாது. நீங்கள் அந்நிய தெய்வத்தை தொழலாகாது” (தி.பா. 81:9, 34:14) என்றும் வேதம் நம்மை எச்சரிக்கிறது. “உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி, அவர் ஒருவருக்கே பணி செய்” (மத். 4:10, தி.வெ. 22.9) என்று வேதம் அறிவுறுத்துகிறது. “நம் கடவுளாகிய ஆண்டவர் ஒருவரே ஆண்டவர். உன் முழு இதயத்தோடும், உன் முழு உள்ளத்தோடும், உன் முழு ஆற்றலோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்புகூர்வாயாக” (இ.ச. 6:4) என்று கர்த்தர் கூறினார். “நானே ஆண்டவர். அதுவே என் பெயர், என் மாட்சியை பிறருக்கோ, என் புகழைச் சிலைகளுக்கோ விட்டுக்கொடேன்” (எசா. 42:8) என்று மொத்த உலகத்துக்கும் பொதுவான தெய்வமாகத் தன்னையே வெளிப்படுத்தியுள்ளார் கர்த்தர்.
கிறிஸ்துவுக்கும் சாத்தானுக்கும் என்ன உடன்பாடு? கடவுளின் கோவிலுக்கும் சிலைவழிபாட்டுக் கோவிலுக்கும் என்ன இணக்கம்? (2கொரி. 6:15-16). எல்லாருக்கும் கடவுளும் தந்தையுமானவர் ஒருவரே அவர் எல்லாருக்கும் மேலானவர் எல்லார் மூலமாகவும் செயலாற்று பவர் எல்லாருக்குள்ளும் இருப்பவர் (எபே. 4:6).
ஒரு தந்தைக்கு 5 பிள்ளைகள் இருக்கலாம். ஆனால், ஒரு பிள்ளைக்கு 5 தந்தைகள் இருக்க முடியுமா? உங்களை பெற்ற தந்தை உயிருள்ளவராய் இருக்கும்போது வேறொரு நபரைத் தந்தை என்று நீங்கள் கூறுவதை உங்கள் தந்தை கேள்விப்பட்டால் அவர் மனம் எவ்வளவு புண்படும்! அதுபோலவே உண்மையான கடவுளை விட்டுவிட்டு, வேறு எதையாவது பார்த்து தெய்வம் என்று கூறுவதை பார்த்து நிஜதெய்வம் மகிழ்ச்சியடைவாரா?
உங்கள் பழைய பொய் தெய்வ விக்கிரகங்களை விட்டுவிட்டு நிஜதெய்வத்தை ஏற்றுக்கொள்வது ஆரம்பத்தில் நிச்சயமாகவே கடினமாகத்தான் இருக்கும். கஞ்சா புகைக்கும் பழக்கத்துக்கு அடிமையானவனர் ஒருவரிடம் போய், ‘கஞ்சா உடல் நலத்திற்கு தீங்கானது’ என்று அறிவுரை கூறினால், அதை அவ்வளவு சுலபமாக அவரால் புரிந்து கொள்ள முடியாது. புகைபிடிப்பது உடல் நலத்திற்கு தீங்கானது என்று சுவரில் விளம்பரம் எழுதுபவர், புகைபிடித்துக்கொண்டே எழுதுகிறார். ஒரு குடிகாரனிடம் அவரது மனைவி தயவு செய்து குடிக்காதீர்கள் என்று சொன்னால் அவர் மனைவி கூறிய நல்ல அறிவுரையை புறக்கணித்து, அவரை அடித்து உதைக்கிறார். குடிப்பதில் தவறில்லை, குடிப்பதால் நிம்மதி உருவாகிறது என்ற குடிகாரனுடைய மூடநம்பிக்கையே அதற்கு காரணம்.
ஒரு தமிழ்ப்பெண் தான் உயிரோடிருக்கும்போது தனது கணவர் வேறொரு பெண்ணை மணந்தால், அதை நிச்சயமாக சகிக்கமாட்டார். ஒரு சாதாரண மனிதனே ஒரு மனைவியோடு நல்லொழுக்கம் உடையவராய் வாழவேண்டுமென்று சமுதாயம் எதிர்பார்க்கிறது. அப்படியிருக்க, அந்த அழகேசனுக்கு இரண்டு மனைவிகளுண்டு என்னும் மூடநம்பிக்கையை எப்படி ஏற்றுக்கொள்கிறீர்கள்? இது தவறு என்பது உங்கள் மனசாட்சிக்குத் தெரியும். ஆனாலும் மதவைராக்கியம் உங்கள் கண்களை மறைக்கிறது. ‘பரிசுத்தமாய் வாழும் பவித்திர பரமேஷ்வரன் இயேசு மட்டுமே தெய்வம்’ என்று ஏற்றுக்கொள்வது உங்களுக்கு இப்போது கடினமாயிருந்தாலும் நிச்சயமாக ஒருநாள் உணர்வீர்கள். இருமனமுள்ள நிலையற்ற போக்குடையவர் ஆண்டவரிடம் ஏதாவது பெறமுடியுமென நினைக்காதிருக்கட்டும் (யாக். 1:8). “எத்தனை நாள் இருமனத்தோராய் தத்தளித்துக்கொண்டிருக்கப் போகிறீர்கள்? ஆண்டவர்தாம் கடவுளென்றால் அவரைப்பின் பற்றுங்கள், பாகால்தான் கடவுளென்றால் அவன் பின்னே செல்லுங்கள்” (1அர. 18:21) என்று இறைவாக்குரைஞர் எலியா கூறினார்.
என் பெற்றோரும் உறவினரும் என்னை வெறுத்து ஒதுக்கி விடுவார்களே !