067. என் பெற்றோரும் உறவினரும் என்னை வெறுத்து ஒதுக்கி விடுவார்களே !

என் பெற்றோரும் உறவினரும் என்னை வெறுத்து ஒதுக்கி விடுவார்களே !

நீங்கள் இந்தியாவில் படித்து முடித்து அமெரிக்காவில் வேலை பார்க்கிறீர்களென்று வைத்துக்கொள்வோம். உங்கள் உறவினருடைய மகன் படித்து முடித்து வேலை இல்லாமலிருக்கிறார். அவருடைய வீட்டார் உங்கள் மீது பொறாமைப்படுகிறார்கள். உங்கள் உறவினர்கள் நீங்கள் அமெரிக்காவில் வேலைபார்ப்பதை விரும்பவில்லை என்பதால், அவர்கள் நிமித்தம் உங்கள் அமெரிக்க வேலையை விட்டுவிடுவீர்களா? உங்கள் உறவினர்களின் பொறாமை உணர்வுக்கு உங்கள் எதிர்காலத்தை பலியாக்க முடியுமா? நாம் கஷ்டப்பட்டு பத்து ருபாய்கூட இல்லாமல் நடுத்தெருவில் நிற்கும்போது எந்த உறவினர்களும் உதவமாட்டார்கள். இன்று அவர்கள் நிம்மதியாக வாழ்வதற்காக உங்கள் வேலையை விட கூறுவதால் விட்டுவிடுவீர்களா? யாரை எப்போது கவிழ்க்கலாம் என்னும் எண்ணத்தில்தான் இன்று பெரும்பாலான மனிதர்கள் வாழ்கின்றார்கள்.
     மனிதர்மீது நம்பிக்கை வைப்பதைவிட ஆண்டவரிடம் தஞ்சம் புகுவதே நலம் (தி.பா. 118:8). பிறர் என்ன சொல்வார்களோ என்று அஞ்சிக்கொண்டு நடப்பவர் கண்ணியில் சிக்கிக் கொள்வர். ஆண்டவரை நம்புகிறவருக்கோ அடைக்கலம் கிடைக்கும் (நீதி. 29:25) என்றும், ஆண்டவரிடம் கொள்ளும் அன்பு கலந்த அச்சமே ஞானத்தின் தொடக்கம் (நீதி. 9:10) என்றும் வேதம் கூறுகிறது. கம்பியூட்டர் இல்லாத உங்கள் வீட்டில் ஒரு கம்பியூட்டர் வாங்கியிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதைப்பார்த்து உங்கள் அண்டை வீட்டார் பொறாமைப்பட்டால் அவர்களுக்கு பயந்து கம்பியூட்டரை திரும்ப கொடுத்துவிடுவீர்களா? மனிதனுக்கு கீழ்படிவதைவிட இறைவனுக்கு கீழ்படிவதே அவசியமாக உள்ளது (தி.பணி. 5:29).

     உங்களுக்கு தலைவலி வந்தால், அதை வேறு யாரை வைத்தும் சுமக்க வைக்க முடியாது. யாரோ கட்டிய அஸ்திபாரத்தில் நீங்கள் வீடுகட்டாதீர்கள். நீங்கள் கட்டிய அஸ்திபாரத்தல் வேறு யாரையும் வீடுகட்ட விடாதீர்கள். உங்கள் வாழ்க்கையை நீங்கள் வாழவேண்டும். வேறு யாரும் உங்கள் வாழ்வை வாழவிடாதீர்கள். உங்களைப் பெற்ற தாய், தகப்பன், உற்றார், உறவினர், நண்பர்கள், அண்டைவீட்டார் யார் உங்களைக் கைவிட்டாலும் இயேசு கைவிட மாட்டார். உங்கள் பெற்றோருடைய மரணம்வரைதான் அவர்கள் உங்களோடு வருவார்கள். அவர்களுடைய மறைவுக்கு பிறகும் கடவுள் உங்களோடு வருவார். பெற்றோர் உயிரோடிருந்தாலும் நீங்கள் போகுமிடமெங்கும் உங்களுக்கு பாதுகாப்பு தரமுடியாது. அங்கெல்லாம் கடவுள்; பாதுகாப்பார். நிலையில்லாத மனிதர்கள்மேல் நம்பிக்கை வைக்காதீர்கள். கடவுளை முழுமையாக நம்புவோர் மனநிம்மதியோடு வாழ்வார்கள். இயேசுவுக்காக யாரை வேண்டுமானாலும் இழக்கலாம் யாருக்காகவும் இயேசுவை இழக்கக்கூடாது.

     ‘வீடுவரை உறவு, வீதிவரை மனைவி, காடுவரை பிள்ளை, கடைசிவரை யாரோ? என்ற கேள்வியைக் கேட்டுவிட்டு பதில் சொல்லாமலேயே போய்விட்டார் கவிஞர் கண்ணதாசன். ஆனால் அந்த கேள்விக்கான பதில், “உன்னை விட்டு விலகுவதும் இல்லை உன்னைக் கைவிடுவதும் இல்லை” என்று சொன்ன சகாதேவன் இயேசு என்று நான் கண்டுபிடித்துவிட்டேன்.

என் தொழிலை முதலாவது நிறுவிவிட்டு, அதன் பின் இயேசுவை பின்பற்றுவேன்.