எனக்கு நிம்மதி இல்லை. பிரச்சனைமேல் பிரச்சனை. ஆனால், எனக்கு ஆராதனைக்கு வர நேரமில்லை. நீங்கள் எனக்காக ஜெபியுங்கள்.
மீசைக்கும் ஆசை கூழுக்கும் ஆசை. இது துரதிர்ஷ்டமானது. உங்களுக்காக நாங்கள் நிச்சயம் ஜெபிப்போம். அது எங்கள் மேல் வைக்கப்பட்ட கடமை. ஆனால், “நகம் நனையாமல் நத்தை எடுக்கமுடியாது” என்பதை நினைவில் கொள்ளுங்கள். அனலுமின்றி குளிருமின்றி இருந்தால் ஆண்டவரிடமிருந்து எதையும் எதிர்பார்க்க முடியாது (தி.வெ.3:16).
நீங்கள் இயேசுவை நம்புவது உண்மையானால் அதை செயலில் காட்டவேண்டும். “பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே எல்லாரும் என்னிடம் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” (மத். 10:28) என்று கிறிஸ்து அறிவுறுத்துகிறார். சுமை சுமக்கும் நீங்கள் முதலாவது இயேசுவிடம் வரவேண்டும் என்று இயேசு எதிர்பார்க்கிறார். நிம்மதி இல்லாதவர்கள் ‘அமைதியின் அரசர்’ இயேசுவிடம் மன்றாட வேண்டும்.கேளுங்கள் பெற்றுக்கொள்வீர்கள் என்று வேதம் கூறுகிறது. நீங்கள் நேசிக்கும் ஒரு நபரை சந்தித்துப்பேச நேரமும் மனமும் இல்லாதிருந்தால் நீங்கள் நிஜமாகவே அன்புள்ளவர் என்று எப்படி நம்பமுடியும்? ‘அழுதப்பிள்ளைக்குத் தான் பால் கிடைக்கும்’.
நீங்கள் பணம் இல்லாமல் கடனில் முழ்கியிருக்கும்போது, திடீரென உயர்ந்த சம்பளத்தில் ஒரு வேலைக்குரிய ஒப்பந்தப் பத்திரம் உங்கள் முகவரிக்கு வந்தால், அதை வாங்கி வாசிக்கக்கூட உங்களுக்கு நேரமில்லாமல் உங்கள் மனம்போல வாழ்ந்து கொண்டிருந்தால் வாழ்வில் முன்னேற முடியுமா? ஆண்டவர் யாருடைய வாழ்க்கையிலும் வலுக்கட்டாயமாக நுழையமாட்டார்.
“இதோ, நான் கதவருகில் நின்று கதவை தட்டுகிறேன். யாராவது எனது குரலைக் கேட்டு கதவை திறந்தால் நான் உள்ளே சென்று அவர்களோடு உணவருந்துவேன். அவர்களும் என்னோடு உணவருந்துவார்கள் (தி.வெ. 3:20) என்று இயேசு கூறுகிறார். அவரால் கதவை பெயர்த்துக்கொண்டு உள்ளே போகமுடியும். ஏன்! கதவு பூட்டியிருக்கும்போது அதை திறக்காமலேயே ஊடுருவிப்போக முடியும் (யோவா. 20:19). ஆனால், அப்படி யாருடைய வாழ்விலும் அத்துமீறி நுழையமாட்டார். நாம் உத்தரவு கொடுத்தால்தான் நம் வாழ்வில் நுழைவார். பூட்டப்பட்ட வீட்டுக்குள் இருக்கும் நீங்கள் வீட்டுக்கு வெளியே பணத்தோடு நிற்கும் நண்பரிடமிருந்து பணத்தை வாங்க வேண்டுமானால் கதவை திறக்க வேண்டுமல்லவா? இவ்வுலகில் தானாக எதுவும் நடக்காது. இயேசுவுக்கு உங்கள் வாழ்வை திறந்து கொடுக்காமல் ஒருபோதும் அவரது அருளுக்கு உட்பட முடியாது.
ஒரு படகு பாதுகாப்பாக கரைசேர வேண்டுமானால், படகோட்டத் தெரிந்த ஒரு படகோட்டி வேண்டும். உங்கள் வாழ்க்கைப் படகில் இயேசுவை படகோட்டியாக ஏற்றுக்கொள்ளுங்கள். வெட்கம், பயம் எல்லாவற்றையும் விட்டு, சமூக அந்தஸ்து என்னும் வெங்காயங்களை கருதாமல் இயேசுவை முழுமையாக ஏற்றுக்கொள்ளுங்கள். இயேசுவை ஏற்றுக்கொண்டு அவருடைய அருளாசியைப் பெற்றுக்கொள்ள பணச்செலவு ஏதுமில்லை. தைரியமாக முன்னேறுங்கள்.
எனக்கு இயேசுவைப் பிடிக்கும். ஆனால், எதிர்ப்புகளுக்கு பயப்படுகிறேன்.