என் ஜாதியையும் ஜனங்களையும் எப்படி புறக்கணிக்க முடியும் ?
பிறர் என்ன சொல்வார்களோ என்று அஞ்சிக்கொண்டு நடப்பவர் கண்ணியில் சிக்கிக்கொள்வார். ஆண்டவரை நம்புகிறவருக்கோ அடைக்கலம் கிடைக்கும் (நீதி. 29:25). மனிதர்மீது நம்பிக்கை வைப்பதைவிட ஆண்டவரின் தஞ்சம் புகுவதே நலம் (தி.பா. 118:8).
உங்கள் வீட்டாரிடமிருக்கும் நோய்களைக் குணப்படுத்த, தீராத கடன்களை ஆன்மீக முறையில் தீர்க்க, தலைமுறை சாபங்களை அழித்து வாழ்வில் உயர்வு பெற, தொடர் தோல்விகளை நிறுத்தி நலவாழ்வு பெற, கெட்ட சொப்பனங்கள், குடும்ப பிளவுகளை மாற்ற உங்கள் ஜாதிமக்கள், ஜாதித்தலைவர்களால் முடியுமா? நீங்கள் ஒரேஜாதியாக ஒற்றுமையாக இருப்பது நல்லதுபோல் தோன்றினாலும் அந்த தவறான ஒற்றுமைதான் எல்லா ஜாதிப்போர்களுக்கும் காரணமென்று அறியாமல் இருக்கிறீர்களா? உண்மையைச் சொன்னால் ஜாதித் தலைவர்களுக்கு ஜாதி உணர்வில்லை. மாறாக, தங்களுக்குக் கீழுள்ள தங்களையே நம்பியிருக்கும் மக்களிடம், தங்களுக்கு இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி ஜாதி வெறியூட்டி பணம் சம்பாதிக்கிறார்களே தவிர, ஜாதித்தலைவர்களால் மக்களுக்கு எந்த பயனுமில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. உலக வழக்கில் நான் முதலியார் வகுப்பைச் சார்ந்தவன். ஆனால், நான் ஜாதி பார்க்காமல் திருமணம் செய்திருக்கிறேன். நான் ‘முதலியார்’ என்பதில் பெருமையில்லை. மாறாக, என்னை ‘மனிதன்’ என்பதில் சந்தோஷப்படுகிறேன். தன்னை ‘உயர்ஜாதி’ என்று கூறிக்கொள்பவனும், “கீழ்ஜாதி” என்று ஏற்றுக்கொள்பவனும் மனநோயாளிகள் என்று டாக்டர் அம்பேத்கர் கூறினார்.
மக்கள்தொகை கணக்கெடுக்க வீட்டுக்கு வரும் அதிகாரிகள், உங்கள் ஜாதி என்ன என்று உங்களிடம் கேட்டால் ‘மனிதன்’ என்று கூறுங்கள். கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட பிராமணர்கள் பலர் பிராமணர் அல்லாதவர்களை திருமணம் செய்து நலமோடு சுமூகமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நீங்கள் ஒரு ஜாதியை சார்ந்தவர் என்று கூறினால் பலரை உங்களை விட கீழ்ஜாதி என்றும் பலரை உங்களை விட மேல்ஜாதி என்றும் கூறுகிறீர்கள். உங்களைப்பார்த்து கீழ்ஜாதி என்று வேறு யாராவது கூறினால் உங்கள் மனம் புண்படுமல்லவா? அதுபோலத்தான், நீங்கள் வேறு ஒருவரைப்பார்த்து கீழ்ஜாதி என்று கூறினால் அவருடைய மனமும் புண்படும் அல்லவா? ஒரு மனிதனை பிறப்பால்; உயர்ஜாதி என்றும் கீழ்ஜாதி என்றும் கூறுவது மனிதநேயமல்ல.
தொழில் அடிப்படையில் ஜாதி பிரிக்கப்பட்டிருந்தால் சட்டப்படி பிராமணர்கள் இறைப்பணி செய்யவேண்டுமே!ஆனால், இக்கால பிராமணர்கள் எல்லோரும் கடவுள்பணிதான் செய்கிறார்களா? ஒவ்வொரு ஜாதிக்கும் ஒரு
குலதெய்வத்தை வைத்து கும்பிடுகிறார்கள். அங்கு பூசாரியாக அந்த ஜாதியைச் சார்ந்தவர்தான் இருக்கிறார். அவர் கடவுள்பணி செய்கிறார் என்பதால் அவரை பிராமணர் என்றல்லவா அழைக்க வேண்டும்! நாட்டைக் காக்கும் படையில் வேலை செய்பவர்கள் ‘சத்தியர்கள்’ என்று அழைக்கப்பட்டனர். ஆனால், இன்று சத்தியர்கள் என்று ஒரு ஜாதி இருக்கிறதா? அப்படியே இருந்தாலும் அவர்கள் சத்திரிய பணியைத்தான் செய்கிறார்களா? ‘வைஷ்யர்கள்’ என்றால் வியாபாரிகளென்று அர்த்தம். வைஷ்ய ஜாதியைச் சார்ந்தவர்கள்தான் வியாபாரம் செய்கிறார்களா? ‘சூத்திரர்கள்’ மேற்கண்ட மூன்று தரப்பினருக்கும் மனம் கோணாமல் அடிமையைப்போல் சேவை செய்யவேண்டும் என்று மனுதர்மம் கூறுகிறது. இது நியாயமென்று நீங்கள் நினைக்கிறீர்களா? மேல்ஜாதிக்காரன், கீழ்ஜாதிக்காரன் என்னும் பாகுபாடுகளை பரமாத்மா உருவாக்கியிருப்பாரா? ஜாதி வெறிபிடித்த அதிகாரமோகம் கொண்ட மக்களால் தான் உருவாக்கப்பட்டது.
ஒருவரை ஒருவர் கடித்துக் குதறும் வெறிநாய்க் கலாச்சாரம் விலகி சமத்துவக்காற்று வீசினால், இந்தியா இவ்வளவு பின்தங்கிய நாடாக இருக்காது. வேறெந்த நாட்டிலும் இல்லாத இந்த ஜாதிப் பேயை நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து விரட்டியடிக்க வேண்டும். கல்வி அறிவுள்ள உங்களிடம், ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று பாரதியார் என்னும் மகாகவி எழுதிய வரிகளை உங்கள் வாழ்வில் நடைமுறைப்படுத்த கெஞ்சிக் கேட்கிறேன். ஜாதி என்னும் பேயால் உயிரிழந்தோர், ஊனமுற்றோர் லட்சக்கணக்கானோர். அவர்கள் வறுமையை ஒழிக்கவோ, உயிர்கொல்லி நோயை ஒழிக்கவோ, சுதந்திர போராட்டத்திலோ தங்கள் உயிர்களை இழந்தவர்களல்ல. சாதிச்சண்டைகளில் செத்துப் போனவர்கள். இதை சொல்வதற்கு எவ்வளவு அசிங்கமாக இருக்கிறது! காந்தி பிறந்த மண்ணை கலவர பூமியாக்கலாமா? சமத்துவ தோட்டமாக்குவோம் இறைவன் நமக்கு துணைநிற்பார்.