எல்லாருக்கும் நன்மை பயக்கும் ஒரு கொள்கையை ஏன் மூடிவைக்கவேண்டும். திருநெல்வேலி மக்கள் மட்டுமே பலசரக்குக்கடை வைக்க முடியும், கேரளத்து மக்கள் மட்டும் தான் உணவகம் நடத்த முடியும் என்று யாராவது கூறினால் நீங்கள் ஒத்துக்கொள்வீர்களா? காற்று எல்லோருக்கும் பொதுவானது, கடவுளும் அனைவருக்கும் பொதுவானவர். தமிழ் தமிழனுக்கு மட்டுமே சொந்தம் வேறு யாரும் தமிழ் கற்கக்கூடாது என்று கூறமுடியுமா? ஒரு வெள்ளைக்காரன் தமிழ் கற்பது அநியாயமென்று கூறமுடியுமா? இந்தியாவுக்கு ஒரு அமெரிக்கன் வரும்போது அமெரிக்க காற்றை ஒரு சிலிண்டரில் அடைத்து கொண்டுவந்து சுவாசிக்க வேண்டும் என்று இந்திய அரசு கட்டளையிட முடியுமா? கிறிஸ்துவின் நற்செய்தியை முதல் நூற்றாண்டு யூதர்களும் பிறரும் ஏற்றுக்கொண்டபோது அவர்கள் கிறிஸ்துவின் சீடரானார்கள். அவர்கள் அவருடைய மீட்புக் கொள்கையை தழுவுவதற்குமுன் கிறிஸ்தவர்களல்ல. எந்த ஜாதியினரும், எந்த மொழி பேசுபவர்களும், எந்தநாட்டைக் சார்ந்தவர்களும், எந்த படிப்புடையவரும், எந்த கலாச்சாரத்தை சார்ந்தவர்களும், எந்த நாகரீகத்தை பின்பற்றும் மக்களும் இயேசுவின் மீட்புக் கொள்கையைத் தழுவலாம். இயேசுவின் அன்புக்கொள்கை இன்று பட்டிதொட்டிகள், சந்து பொந்தெல்லாம் பறைசாற்றப்படுகிறது. இயேசுவின் கொள்கையை கடைபிடிக்க ஒரு குறிப்பிட்ட மதத்தை சார்ந்தவராக இருக்கவேண்டுமென்று எந்த நிபந்தனையுமில்லை. ஒரு கிறிஸ்தவர் பிராமணராக மாறமுடியாது. பிராமணராக பிறந்தவர்கள் மட்டும் தான் பிராமணீயத்தைக் கடைபிடிக்க முடியும். ஆனால், ஒரு பிராமணர் கிறிஸ்தவராக மாறலாம். ஆயிரக் கணக்கானோர் மாறியுமிருக்கிறார்கள். கிறிஸ்தவத்தை யாரானாலும் கடைபிடிக்கலாம். இயேசு கிறிஸ்துவுக்கு எம்மதமும் சம்மதம் என்ற பாடல் அடங்கிய ‘எவரும் விரும்பும் ஓர் இனிய தெய்வம்’ என்னும் குறுந்தகட்டை வாங்கி கேளுங்கள். (மேற்கண்ட ஒலித்தட்டு வேண்டுமானால் எங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்) தமிழ்நாட்டிலுள்ள எல்லா அரசாங்க கோயில்களிலும் இந்துக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்னும் பலகை வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், எந்த கிறிஸ்தவ வழிபாட்டு ஸ்தலங்களிலும் கிறிஸ்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்று எழுதப்பட்ட பலகையை பார்க்கமுடியாது. ஏனெனில், இயேசுவின் பிறப்புச் செய்தியை அறிவித்த வானதூதர், “அஞ்சாதீர்கள், இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்” என்றனர். இயேசு பொதுமக்களிடம் பேசுகையில், “வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்கள் எல்லோரும் என்னிடம் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் (மத்.11:28) என்னிடம் வருபவரை நான் புறம்பே தள்ளிவிடமாட்டேன்” (யோவா.6:37) என்று எல்லோரையும் அழைக்கிறார். உயிர்த்தெழுந்த இயேசு தன் சீடரைப் பார்த்து, “நீங்கள் போய் எல்லா மக்கள் இனத்தாரையும் சீடராக்குங்கள், தந்தை, மகன், தூயஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்கு கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைபிடிக்கும்படி கற்பியுங்கள்” (மத்.28:19,20) என்றார். இங்கு எல்லா மக்கள் இனத்தாரையும் சீடராக்கச் சொல்கிறார். எல்லா மனிதரும் மீட்பு பெறவும் உண்மையை அறிந்துணரவும் வேண்டுமென அவர் விரும்புகிறார். அனைவரின் மீட்புக்காக அவர் தம்மையே ஈடாக தந்தார் (1திமொ.2:4-6). இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர். தந்தையாம் கடவுளின் மாட்சிக்காக இயேசு கிறிஸ்து ஆண்டவர் என எல்லா நாவுமே அறிக்கையிடும் (பிலி.2:10,11) என்று திருத்தூதர் பவுல் கூறுவதிலிருந்து, கிறிஸ்தவம் உலக மக்கள் எல்லாருக்கும் பொதுவானது என்று அறிகிறோம். உலகிலுள்ள எல்லா மக்களும் ஒரு நாள் நிஜத்தை புரிந்து கொள்வார்கள். ஒரு கிறிஸ்தவர் கூட இல்லாதிருந்த இந்தியாவில் முதன்முதலாக தோமா என்னும் ஒரு திருத்தூதர் வந்து நற்செய்தியைக் பறைசாற்றி இன்று பலகோடி மக்கள் உண்மையை புரிந்து கொண்டு இயேசுவின் மீட்புக் கொள்கையை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். இன்று இந்தியாவிலுள்ள ஏதாவது உயிரோட்டமுள்ள திருச்சபையில் சென்று அங்குள்ளவர்களிடம் கேட்டால் நூற்றுக்கு 90% மக்கள் இந்து பின்னணியிலிருந்து வந்;தவர்களாகத்தான் இருப்பார்கள். இவராலேயன்றி (இயேசு) வேறு எவராலும் மீட்பு இல்லை. ஏனென்றால், நாம் மீட்பு பெறுமாறு வானத்தின் கீழ் மனிதரிடையே இவரது பெயரன்றி வேறெந்த பெயரும் கொடுக்கப்படவில்லை (தி.பணி.4:12) என்று பேதுரு கூறுகிறார்.
வழியும், உண்மையும், வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை (யோவா.14:6) என்று இயேசு கூறுகிறார். நம் பாவங்களுக்கு பரிகாரம் அவரே. நம் பாவங்களுக்கு மட்டுமல்ல அனைத்து உலகின் பாவங்களுக்கும் பரிகாரி அவரே (1யோவா.2:2) என்று யோவான் தெளிவாக்குகிறார். பரலோகத்தில், எல்லா நாட்டையும், குலத்தையும், இனத்தையும், மொழியையும், சார்ந்தவர்களும் வருவார்களென்று வேதம் தெளிவாக்குகிறது. இதன்பின் யாராலும் எண்ணிக்கையிட முடியாத பெரும் திரளான மக்களைக் கண்டேன். அவர்கள் எல்லா நாட்டையும், குலத்தையும் மக்களினத்தையும் மொழியையும் சார்ந்தவர்கள் அரியணைக்கும், ஆட்டுக்குட்டிக்கும் (இயேசு) முன்பாக நின்றுகொண்டி ருந்தார்கள் வெண்மையான தொங்கலாடை அணிந்தவர்களாக கையில் குருத்தோலைகளை பிடித்திருந்தார்கள் (தி.வெ.7:9). இதில் யூதர்கள் என்றோ, கிரேக்கர் என்றோ வேறுபாடில்லை. அனைவருக்கும் ஆண்டவர் ஒருவரே. அவரை நோக்கி மன்றாடும் யாவருக்கும் அவர் அளவற்ற நலன்களை பொழிகிறார்; (உரோ.10:12).
இயேசு எல்லோரையும் நேசித்தால் ஒரே நேரத்தில் எல்லோரையும் இரட்சிக்கலாமே !