013. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய இயேசு எப்படி உலகத்தைப் படைத்திருக்க முடியும்?

     இயேசு கிறிஸ்துவுக்கு தொடக்கமும் முடிவுமில்லை. அவர்தான் தொடக்கமும் முடிவும் (தி.வெ. 1:8). கடவுள் எவ்வளவு பழமையானவரோ அவருக்குள்ளிருந்த வார்த்தையானவரும் அவ்வளவு பழமையானவர். ஆனால், ஆவியாயிருந்த கிறிஸ்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்தான் மனிதவடிவில் இம்மண்ணுக்கு வந்தார்(1திமொ. 3:16).
     தொடக்கத்தில் வாக்கு இருந்தது. அவ்வாக்கு கடவுளோடு இருந்தது. அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது. வாக்கு என்னும் அவரே தொடக்கத்தில் கடவுளோடு இருந்தார். அனைத்தும் அவரால் உண்டாயின. உண்டானது எதுவும் அவராலன்றி உண்டாகவில்லை (யோவா. 1:1-3).
     விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை, கண்ணுக்குப் புலனாகுபவை, கண்ணுக்குப் புலனானாகாதவை, அரியணையில் அமர்வோர்,தலைமை தாங்குவோர், ஆட்சியாளர், அதிகாரம் கொண்டார் ஆகிய அனைவரும் அவரால் படைக்கப்பட்டனர்.அனைத்தும் அவர் வழியாய், அவருக்காகப் படைக்கப்பட்டன.அனைத்திற்கும் முந்தியவர் அவரே (கொலோ.1:16,17).
பிதாவாகிய கடவுளுக்கும் தனக்கும் உள்ள தெய்வீக உறவைப்பற்றி கிறிஸ்து விளக்கும்போது, “என்னை அறிந்தீர்களானால் என் தந்தையையும் அறிந்திருப்பீர்கள். இதுமுதல் தந்தையை அறிந்திருக்கிறீர்கள். அவரைக் கண்டுமிருக்கிறீர்கள். என்னை காண்பது தந்தையைக் காண்பது ஆகும். நான் தந்தையினுள்ளும், தந்தை என்னுள்ளும் இருப்பதை நீ நம்புவதில்லையா? (யோவா. 14:7-10). நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்” (யோவா. 10:30) என்று இயேசு தெளிவுபடுத்துகிறார்.
இயேசுவை மதிக்கிறவன் இறைவனை மதிக்கிறான். கிறிஸ்தவம் பிதா, மகன், தூய ஆவி என்னும் மூவொரு தெய்வத்தை நம்புகிறது. இயேசு பிதாவாம் கடவுளுக்கு சமமாக இருக்கிறார் (பிலி.2:6, யோவா.5:18) என்று வேதம் கூறுகிறது. மேற்கண்ட வசனங்களிலிருந்து கடவுள் தன் திருமகனாகிய இயேசு மூலமாகத்தான் இவ்வுலகை படைத்தாரென்று தெளிவாக அறிகிறோம்.

இயேசு கன்னியின் வயிற்றில் எப்படி பிறக்க முடியும்? இது விஞ்ஞான பூர்வமாக சாத்தியமா ?