017. அமெரிக்கா ஒரு கிறிஸ்தவ நாடு. அங்குள்ளவரெல்லாரும் யோக்கியரா ?

     எல்லா நாட்டிலும், எல்லா மதத்திலும் நல்லவர்களுமுண்டு, கெட்டவர்களுமுண்டு. அமெரிக்கா ஒரு கிறிஸ்தவநாடு என்றோ, இந்தியா ஒரு இந்துநாடு என்றோ நான் நம்பவில்லை. ‘கிறிஸ்தவ பெற்றோருக்கு பிறந்த எவரும் கிறிஸ்தவர்தான்’ என்றோ, ‘ஆங்கில, கிரேக்க, அல்லது எபிரேய மொழியில் பெயர் வைத்திருப்பவர்கள் எல்லாரும் கிறிஸ்தவர்கள்’ என்றோ வேதாகமம் கூறவில்லை. அவன் ஒருமுறை இயற்கையாக பிறந்திருந்தாலும், மறுபடியும் ஆவியாலும் இறைவனுடைய அன்பாலும் பிறக்கவேண்டும் (யோவா. 3:3-5). “நீங்கள் மனந்திரும்பிச் சிறு பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால் விண்ணரசில் புகமாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” (மத். 18:3) என்று நம் குருநாதன் கூறினார். கிறிஸ்துவின் இரட்சிப்பை பெற்று, அவரது போதனைகளை பின்பற்றி, அவரது அன்பை வெளிப்படுத்தி, மனத்தூய்மையோடு வாழ்பவனே முதிர்ந்த கிறிஸ்தவன்.

     அமெரிக்காவை கிறிஸ்தவநாடு என்று பொதுவாக மக்கள் நினைக்கிறார்கள். அது தவறு. எல்லா மதத்தினரும் அமெரிக்காவில் உண்டு. ஒருமுறை இயேசு, “ஒருவன் என்னில் அன்பாயிருந்தால் என் வசனங்களைக் கைக்கொள்கிறான்” (யோவா.14:23) என்று தன் சீடர்களைப் பார்த்து கூறினார். இந்த வசனப்படி இயேசுவிடம் அன்பு வைப்பது ஒரு தனிநபரை சார்ந்தது. ஒருநாட்டை கிறிஸ்தவநாடு, இந்துநாடு, இஸ்லாமியநாடு என்று கூறுவதே தவறு. அரபுநாடுகளில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் வாழ்கிறார்கள். ஒரேநாட்டில் பலமத நம்பிக்கையாளர்கள் இருப்பார்கள். ஏன், நாத்திகர்கள்கூட இருப்பார்கள். அமெரிக்காவில் உள்ள நாத்திகர்களின் பெயர்கள்கூட ஆங்கிலத்தில்தான் இருக்கின்றன. அவர்கள் கிறிஸ்தவர்கள் என்று கூறமுடியுமா? இயேசு தன் சீடர்களைப் பார்த்து, “நீங்கள் ஒருவரில் ஒருவர் அன்புள்ளவர்களாய் இருந்தால், நீங்கள் என்னுடைய சீடர்களென்று எல்லாரும் அறிந்து கொள்வார்கள்” (யோவா. 13:35). “என்னிடம் வருபவர் தம் தந்தை, தாய், மனைவி, பிள்ளைகள், சகோதரர், சகோதரிகள் ஆகியோரையும், ஏன் தம் உயிரையும் என்னைவிட மேலாகக்கருதினால் அவர் என் சீடராயிருக்க முடியாது, தம் சிலுவையை சுமக்காமல் (தியாகசிந்தை இல்லாமல்) என் பின்வருபவர் எனக்கு சீடராயிருக்க முடியாது” (லூக்.14:26:27) என்று கூறினார். இப்படித்தான் வாழவேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்ட வாழ்க்கை தான் கிறிஸ்தவம். எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்றுதான் அமெரிக்கர்களில் பெரும்பான்மையானோர் நினைக்கின்றனர். இப்படியிருக்க அமெரிக்காவை ஒரு கிறிஸ்தவநாடு என்று எப்படி கூறுகிறீர்கள்? கிறிஸ்தவராக வாழ்வதற்கு சுயக்கட்டுப்பாடு முக்கியம் அல்லவா! இயேசு ஒருமுறை, “இடுக்கமான வாயிலின் வழியே நுழையுங்கள் ஏனெனில், அழிவுக்குச் செல்லும் வாயில் அகன்றது வழியும் விரிவானது அதன் வழியே செல்வோர் பலர்.ஆனால் மெய் வாழ்வுக்குச் செல்லும் வாயில் மிகவும் இடுக்கமானது. வழியும் மிகக்குறுகலானது. இதைக் கண்டுபிடிப்போர் சிலரே” (மத். 7:13,14) என்றார்.

     நாகர்கோயிலிலுள்ள ஒரு மந்திரவாதியின் பெயர் சாலமோன். அங்குள்ள சாராயக் கடைகளை நடத்துவது பெரும்பாலும் ஆங்கிலப் பெயர் வைத்திருப்பவர்களே. ஏன், சாராயக்கடையின் பெயரையே பெதஸ்தா ஒயின்ஸ் என்று வைத்திருக்கிறார்கள். உண்மையான கிறிஸ்தவன் சாராய  வியாபாரம் செய்வானா?

தன்னலம் நாடுவோர், பணஆசை உடையோர், வீம்புடையோர், செருக்குடையோர், பழித்துரைப்போர், பெற்றோருக்கு கீழ்ப்படியாதோர், நன்றியற்றோர், தூய்மையற்றோர், அன்புணர்வற்றோர், ஒத்துப்போகாதோர், புறங்கூறுவோர், தன்னடக்கமற்றோர், வன்முறையாளர், நன்மையை விரும்பாதோர், துரோகம் செய்வோர், கண்மூடித்தனமாக செயல்படுவோர், கடவுளை விரும்புவதைவிட சிற்றின்பத்தை அதிகம் விரும்புவோர் பலர் இன்று இறைப்பற்றுடையவர்கள் போல வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் (2திமொ. 3:2-5). இவர்கள் கிறிஸ்தவர்கள் என்று அரசாங்கத்தால் கணக்கெடுக்கப்படலாம். ஆனால், இவர்கள் இயேசுவிடம் அன்புகூராதவர்கள். தயவுசெய்து கிறிஸ்துவை மட்டும் உங்கள் முன்மாதிரியாக வையுங்கள். கிறிஸ்தவர்களைப் பார்க்காதீர்கள். இயேசுவின்மீது கண்களைப் பதிய வைப்போம் (எபி.12:1,2). மனிதன் எப்படி வாழவேண்டுமென்று அவரே வாழ்ந்துகாட்டியிருக்கிறாரே.

எல்லா கிறிஸ்தவர்களும் நல்லவர்கள் அல்ல.