018. எல்லா கிறிஸ்தவர்களும் நல்லவர்கள் அல்ல.

     ஆங்கிலத்தில் பெயர் வைத்திருப்பதாலோ, கழுத்தில் சிலுவை மாலை தொங்கப் போடுவதாலோ, கிறிஸ்மஸ் பண்டிகையை பட்டாசு வெடித்துக் கொண்டாடுவதாலோ, ஆராதனைக்கு ஒழுங்காக போவதாலோ, காணிக்கை கொடுப்பதாலோ, ஒருவரை கிறிஸ்தவரென்று கூறமுடியாது. கிறிஸ்து எதற்காக மனிதவடிவில் வந்து, பாடுபட்டு, சிலுவையில் மரித்து, உயிர்த்தார் என்னும் விபரங்களைத் தெரியாத, அதை அறிந்துகொள்ள விருப்பமில்லாத பாரம்பரிய கிறிஸ்தவர்கள் பலர் இம்மண்ணில் வாழ்கிறார்கள். கொலைவெறி, ஜாதிவெறி, மொழிவெறி, இனவெறியுடைய, லஞ்சம் வாங்கி கோடிக்கோடியாக சம்பாதிக்கும் பலர் கிறிஸ்தவர்களென்ற பெயரில் உலாவருகிறார்கள். வரதட்சணைக் கொடுமையால் பிரிந்துபோன கிறிஸ்தவ குடும்பங்கள்தான் எத்தனை! இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு வேலைக்காக சென்றவர்களை ஆஸ்திரேலியர்கள் கொடுமைப் படுத்துவதை கேள்விப்படுகிறோம். இயேசுவின் அன்புக்கொள்கையை கடைபிடிப்பவர்கள் இப்படி செய்வார்களா?

     புதிதாக இயேசுவை ஏற்றுக்கொண்ட பிராமண சகோதரன்கூட ஜாதிபார்க்காமல் திருமணம் செய்யமுடிகிறது. ஆனால், பல தலை முறையாக கிறிஸ்தவர்களாக இருக்கும் பலரால் அந்த ஜாதிப்பேயின் கோரப்பிடியினின்று வெளியேற முடியாமல் இருக்கிறார்களே! திருநெல்வேலியில் நாடார்களுக்கென்று தனி சபை, மற்றவர்களுக்கு என்று தனி சபை உள்ளது. நாடார்களுடைய கோயிலில் மற்றவர்கள் சட்டபூர்வமாக நுழையமுடியாது. எனவே, கிறிஸ்தவர்கள் எல்லாரும் யோக்கியமானவர்கள் என்று கூறிவிட முடியாது. நீங்கள் சொல்வது உண்மைதான்.

யூதன் என்றும் கிரேக்கன் என்றும் இல்லை, ஆணென்றும் பெண்ணென்றும் இல்லை, அடிமை என்றும் உரிமைக் குடிமக்கள் என்றும் இல்லை எல்லோரும் கிறிஸ்துவுக்குள் ஒன்றாய் இருக்கிறார்கள் (கொலோ.3:11) என்று பைபிள் அறுதியிட்டுக் கூறுகிறது. ஆனாலும், நாங்கள் ‘கிறிஸ்தவ நாடார்கள்’ ‘கிறிஸ்தவ வெள்ளாளர்கள்’ ‘கிறிஸ்தவ முதலியார்கள்’ என்று பீத்திக்கொள்ளும் ஆயிரக்கணக்கானோர் இன்றுமுண்டு. இந்த தரங்கெட்ட வாழ்க்கையை கிறிஸ்தவமென்று நிச்சயம் கூறமுடியாது. கிறிஸ்து உருவாக்கிய வாழ்வியல் அமைப்புடன் இதை ஒப்புமைப்படுத்த முடியாது.உன்னை நீ நேசிப்பதுபோல பிறரையும் நேசி என்னும் உயர்ந்த பண்பாட்டை கற்றுக்கொடுத்து, தானும் அதன்படி வாழ்ந்த இயேசுவின் இதயம் எவ்வளவு உயர்வானது என்பதை சிந்தியுங்கள். தயவுசெய்து கிறிஸ்தவர்களை பார்க்காதீர்கள் ஏன், பாதிரியார்களையே பார்க்காதீர்கள் (மத்.23:3) கிறிஸ்துவை மட்டும் பாருங்கள்.

     ஒரு மருத்துவக் கல்லூரியினின்று தேர்ச்சி அடையும் எல்லா மாணவர்களையும் மருத்துவத்தில் தேறியவர்களாக அந்த கல்லூரி எதிர்பார்க்கிறது. ஆனால், அதிலுள்ள ஒருசிலர் தவறாக மருந்து எழுதி, சில நோயாளிகள் பாதிக்கப்பட்டால், அதற்குக் காரணம் மருத்துவக் கல்லூரியாகுமா? அதே கல்லூரியில் படித்த பலர் விஞ்ஞானிகளாக மாறுகிறார்களே! அவர்களைத்தான் முன்மாதிரியாக பார்க்கவேண்டும். இயேசுவை முழுமையாக நம்பி சரணாகதியான எல்லாரும் வாழ்வில் பிரகாசமாக முடியும். ஒருசிலர் பின்வாங்கினார்கள் என்பதால் இயேசுவே சரியில்லை என்று கருதமுடியாது. எவ்வளவு முதிர்ந்தவர் குற்றம் செய்தாலும் குற்றம் குற்றமே. விசுவாசத்தை தொடங்குகிறவரும் முடிக்கிறவருமாகிய இயேசுவை நோக்கி நமக்கு நியமித்திருக்கிற ஆன்மீக ஓட்டத்தில் பொறுமையோடே ஓடுவோம் (எபி.12:1) என வேதம் வழிகாட்டுகிறது. இயேசுவோடு கூட இருந்த ஒரு நண்பன் இயேசுவை முப்பது வெள்ளிக் காசுகளுக்காக காட்டிக்கொடுத்தான் என்பதற்காக மற்ற 11 பேரும் இயேசுவைவிட்டு பின்வாங்கி விட்டார்களா? விபத்திற்கு உட்பட்ட ஒருவர் சிகிச்சை பலனின்றி மரித்துவிட்டார் என்பதற்காக, அந்த மருத்துவமனையே சரியில்லை என்று கூறமுடியுமா? இயேசுவின் அன்பு, தூய்மை, சக்தி இவற்றை மட்டும் கண்ணோக்கி ஒடுவோம்.

     மனிதனை நம்புவதைப் பார்க்கிலும் கடவுள் பேரில் பற்றுதலாய் வாழ்வதே ஞானம் (தி.பா.118:8). இயேசுவுடைய வலிமையால் பேதுரு கடல்மீது நடந்தார். ஆனால் ஒருநாள், அந்த இயேசுவை எனக்கு தெரியவே தெரியாது என்று உயிருக்கு பயந்து பொய் சொன்னார். இயேசுவுடன் எப்போதும் சுற்றித் திரிந்து அற்புதங்களை செய்த பேதுருவே பொய் சொல்லிவிட்டார் என்பதற்காக நாமும் பொய் சொல்லமுடியுமா? பேதுருவை பார்க்காமல் இயேசுவின்மேல் கண்களைப் பதிப்போம். அநேக கிறிஸ்தவ சபைகளில் வேதாகமத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல், எப்படி வாழவேண்டும் என்று கற்றுக்கொள்ள முடியாமல் இருக்கிறார்கள். தரமாக வேதாகமத்தை பிரசங்கிப்பவர்கள் இல்லாவிட்டால் மக்கள் எப்படி கேள்விப்பட்டு முன்னேற்றம் அடைவார்கள்? (உரோ.10:14). வேதத்தின் விளக்கத்தை சரிவர புரிந்துகொள்ள முடியாதிருந்த ஒரு பக்தன், “யாராவது விளக்கிக் காட்டாவிட்டால் எவ்வாறு என்னால் புரிந்து கொள்ள முடியும்?” (தி.தூ.8:31) என்றான். ஒருகாலத்தில் ஊதாரியாய் திரிந்த அநேகம் பழமைவாதிகள் இப்போது உணர்வடைந்து முன்மாதிரியாய் வாழ்கிறார்கள் என்பதும் மறுக்கமுடியாத உண்மை.

     இயேசு கூறினார், “என்னிடம் வந்து, என் வார்த்தைகளைக் கேட்டு, அவற்றின்படி செயல்படும் எவரும் யாருக்கு ஒப்பாவார் என உங்களுக்கு எடுத்துக்காட்டுகிறேன் அவர் ஆழமாய்த் தோண்டி, பாறையின் மீது அடித்தளம் அமைத்து, வீடு கட்டிய ஒருவருக்கு ஒப்பாவார்.வெள்ளம் ஆறாகப் பெருக்கெடுத்து அந்த வீட்டின்மேல் மோதியும் அதை அசைக்க முடியவில்லை ஏனென்றால் அது நன்றாகக் கட்டப்பட்டிருந்தது. நான் சொல்வதைக் கேட்டும் அதன்படி செயல் படாதவரோ, அடித்தளம் இல்லாமல் மண்மீது வீடு கட்டியவருக்கு ஒப்பாவார். ஆறு பெருக்கெடுத்து அதன்மேல் மோதிய உடனே அது விழுந்தது அவ்வீட்டுக்குப் பேரழிவு ஏற்பட்டது” (லூக்.6:47-49).

கிறிஸ்தவர்கள் நோயோடிருக்கிறார்களே !