கடவுள் என்றாலே வீச்சரிவாள், கடாரி, அம்பு, சூலாயுதம், சக்கரம், ஈட்டி, வேல் போன்ற கொடுமையான கொலைக் கருவிகளை வைத்துக்கொண்டு மிரட்டுகின்ற காட்டுமிராண்டி என்றே நாம் கற்பனை செய்து பழகிவிட்டோம். அதனால் தான் இப்படி ஒரு கேள்வியை கேட்கிறோம். ஆனால், ஒரு தாய் தன் உயிரையே தியாகம் செய்து தன் பிள்ளைகளை காப்பாற்றுவதுபோல, கடவுளே இயேசு என்ற வடிவத்தில் இம்மண்ணில் பிறந்து, தன் உயிரை நமக்காக தியாகம் செய்து நம்மை காப்பாற்றியிருக்கிறார். கடவுள் என்னும் உயர்ந்த பதவியில் பெருமையோடு இருக்காமல், அவர் நம்மீது அன்பு வைத்து, நம்மை மீட்க தாழ்மையோடு நம் வடிவத்தில் இறங்கி வந்ததை நினைத்து கண்ணீரோடு நன்றி சொல்லவேண்டிய நாம் இப்படி கேள்வி கேட்கிறோமே?
இயேசு கைது செய்யப்படுவதற்கு முன்பே மதவாதிகள் பலமுறை அவரைப் பிடிக்க முயற்சி செய்தனர். ஆனால், அப்பொழுதெல்லாம் முன்தீர்மானிக்கப்பட்ட தன் பணிகளை தொடர அவர் மறைந்து போனார் என்று வேதம் கூறுகிறது (யோவா. 8:59, 12:36). இயேசு கெத்சமெனேயில் கைது செய்யப்படும்போது, தப்பிக்க நினைத்திருந்தால் மறைந்து போயிருக்கமுடியும். அவர் அப்படி செய்யவில்லை. ஏனெனில், அவர் மரணத்தைப் பார்த்து பயப்பட்ட கோழையல்ல. பாவிகளை மீட்க, அவர் சிலுவையில் பலியாக வேண்டுமென்ற தெய்வீகத் தீர்மானத்தால், இயேசு அவர்களுடைய கைகளில் தன்னைத் தானே முழுமனதோடு ஒப்புக்கொடுத்தார் (லேவி. 17:11, எபி. 9:22, எசா. 53:10, யோவா. 1:29, 1யோவா. 2:2, 1திமொ. 1:15, உரோ. 5:8).
இயேசுவிடம் குற்றவிசாரணை மேற்கொண்ட பிலாத்து என்னும் ஆட்சித்தலைவன் இயேசுவிடம், “உன்னை சிலுவையில் அறைய எனக்கு அதிகாரம் உண்டென்றும், உன்னை விடுதலை செய்ய எனக்கு அதிகாரம் உண்டென்றும் உனக்குத் தெரியாதா?” என்று கேட்டார். இயேசு மறுமொழியாக, “பரலோகத்திலிருந்து உமக்கு அதிகாரம் கொடுக்கப்படாது இருந்தால், என்மேல் உமக்கு ஒரு அதிகாரமும் இராது” (யோவா.19:10,11), “எனது ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றதல்ல. அது இவ்வுலக ஆட்சி போன்றதாய் இருந்திருந்தால், நான் யூதர்களிடம் காட்டிக் கொடுக்கப்படாதவாறு என் சீடர்கள் போராடியிருப்பார்கள்” (யோவா. 18:36) என்று தெய்வத் திருவுளத்தை வெளிப்படுத்தினார்.
ஒருமுறை இயேசு தன் சீடர்களிடம் பேசும்போது, “என் தந்தை என்மீது அன்பு செலுத்துகிறார் ஏனெனில், நான் என்னுயிரைக் கொடுக்கிறேன். என்னுயிரை என்னிடமிருந்து யாரும் பறித்துக் கொள்வதில்லை. நானாகவே அதைக் கொடுக்கிறேன். உயிரைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு அதை மீண்டும் பெற்றுக்கொள்ளவும் அதிகாரம் உண்டு” (யோவா. 10:17,18) என்று கூறினார். மேற்கண்ட வசனத்திலிருந்து இயேசுவை கைது செய்ததும், அவரை சிலுவையில் ஏற்றிக் கொன்றதும் இயேசுவே எதிர்பார்க்காமல், எதேத்சையாக நடந்த ஒரு சம்பவமல்ல என்பது தெளிவாகப் புரிகிறது. கடவுள் தம் மெசியா துன்புறவேண்டும் என்று இறைவாக்கினர் அனைவர் வாயிலாகவும் முன்னறிவித்ததை இவ்வாறு நிறைவேற்றினார் (தி.பணி.3:18). மெய்யாகவே அவர் நம் பிணிகளைத் தாங்கிக்கொண்டார்; நம் துன்பங்களைச் சுமந்து கொண்டார்; நாமோ அவர் கடவுளால் வதைக்கப்பட்டு நொறுக்கப்பட்டவர் என்றும், சிறுமைப்படுத்தப்பட்டவர் என்றும் எண்ணினோம். ஆனால், அவரோ நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார்; நம் தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார். நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார். அவர்தம் காயங்களால் நாம் குணமடைகின்றோம். ஆடுகளைப் போல நாம் அனைவரும் வழிதவறி அலைந்தோம். நாம் எல்லாரும் நம் வழியே நடந்தோம். ஆண்டவரோ நம் அனைவரின் தீச்செயல்களையும் அவர்மேல் சுமத்தினார் (எசா. 53:4-6). இயேசு ஒரு இலட்சியவாதி. தன்னுடைய வாழ்வில் நடக்கப்போகும் சம்பவங்கள் எல்லாவற்றையும் அவர் முன்னமே அறிந்திருந்தார். அவருக்கு தெரியாமல் எதுவும் நடக்கவில்லை. எனவேதான், “மானிடமகன் தமக்கென்று குறிக்கப்பட்டபடியே போகிறார்;” (லூக். 22:22) என்று கூறினார்.
அவர் யூதாஸ்காரியோத்தால் காட்டிக்கொடுக்கப்படுவதை அவரே முன்னறிவித்தார் (யோவா. 13:21-27). இயேசு, தான் கைதுசெய்யப்பட்டு, சிலுவையில் அறையப்பட்டு, கொல்லப்படுவார் என்றும், மூன்றாம் நாளில் உயிரோடு எழும்புவார் என்றும் தீர்க்கமாய் அறிந்து, “மானிடமகன் (இயேசு) தலைமைக் குருக்களிடமும், மறைநூல் அறிஞர்களிடமும் ஒப்புவிக்கப்படுவார் அவர்கள் அவருக்கு மரணதண்டனை விதிப்பார்கள் அவர்கள் அவரை ஏளனம் செய்து, சாட்டையால் அடித்து, சிலுவையில் அறையும்படி ஒப்புவிப்பார்கள். ஆனால், அவர் மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்படுவார்” (மத். 20:18,19) என்று கூறினார். இயேசுவின் சீடரெல்லாரும் இயேசுவை கைவிடும் காலம் வருமென்று முன்னறிந்த இயேசு, “இதோ காலம் வருகிறது. ஏன், வந்துவிட்டது, அப்பொழுது நீங்கள் சிதறடிக்கப்பட்டு ஒவ்வொருவரும் அவரவர் வீட்டுக்கு ஒடிப்போவீர்கள் என்னை தனியே விட்டுவிடுவீர்கள் ஆயினும் நான் தனியாய் இருப்பதில்லை தந்தை என்னோடு இருக்கிறார்” (யோவா. 16:32) என்றார்.
மெசியா இயேசு கொல்லப்படுவார் என்று தானியேல் தீர்க்க தரிசியால் இறைவாக்காக அருளப்பட்டது நடந்தேறியது (தானி. 9:26). இயேசுவை யூதர்கள் பிடிக்க வந்தபோது இயேசுவின் சீடர்களில் ஒருவரான பேதுரு தன்னிடமிருந்த கத்தியை எடுத்து, தலைமைக் குருவின் பணியாளரைத் தாக்கி, அவருடைய காதைத் துண்டித்தார். அப்பொழுது இயேசு அவரிடம், “உனது வாளை அதன் உறையில் திரும்பப்போடு. ஏனெனில், வாள் எடுப்போர் அனைவரும் வாளால் அழிவர். நான் என் தந்தையின் துணையை வேண்ட முடியாதென்றா நினைத்தாய்? நான் வேண்டினால் பன்னிரு பெரும் படைப் பிரிவுகளுக்கு மேற்பட்ட வானதூதரை எனக்கு அனுப்பி வைப்பாரே! அப்படியானால் இவ்வாறு நிகழவேண்டும் என்ற மறைநூல் வாக்குகள் எவ்வாறு நிறைவேறும்?” (மத். 26:51-54) என்றார்.
அங்கே இயேசு மதத்தீவிரவாதத்தை கண்டிக்கிறார். கண்ணுக்குக் கண், பல்லுக்குப்பல், வெட்டுக்கு வெட்டு, குத்துக்குக்குத்து என்னும் மிருககுணத்தால் உலகில் அமைதியை உருவாக்க முடியாது என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார். எனவே, தனது உயிரை கொடுத்தாவது அகிம்சைக் கொள்கையை நிலைநாட்ட வேண்டும், மதவெறியை ஒழிக்கவேண்டும்,மனிதநேயம் தழைக்க வேண்டும் என்று இறைவன் ஆசைப்பட்டு, தானே தன்னுயிரைக் கொடுக்க முன்வந்தார்.
இயேசு தன்னைப் பிடிக்கவந்த யூதர்களிடம், “யாரைப் பிடிக்க வந்தீர்கள்” என்று கனிவோடு கேட்டபோது அந்த மதவெறிபிடித்த யூதர்கள், “நசரேயனாகிய இயேசுவை” என்று சொன்னார்கள். உடனே, இயேசு பிஞ்சுநெஞ்சோடு, “நான்தான்” என்று கூறினார். அப்போதும், தன் சீடர்களை காப்பாற்ற வேண்டுமே என்னும் ஆதங்கத்தில், “நீங்கள் என்னை தேடி வந்தீர்களானால் இவர்களை (சீடர்களை) விட்டுவிடுங்கள்” (யோவா.18:4-8) என்று கூறி அவர்களை காப்பாற்றினார். அந்த கருணை வடிவத்தின் அன்பை நினைத்தால் கண்கள் கலங்கவில்லையா?
மனிதர்கள் தவறு செய்திருக்க, நிரபராதி இயேசு கொல்லப்பட்டது நியாயமா ?