006. மனிதர்கள் தவறு செய்திருக்க, நிரபராதி இயேசு கொல்லப்பட்டது நியாயமா ?

ஒரு நியாயமான கேள்வியை கேட்டீர்கள். நியாயமாகப் பார்த்தால் இயேசு ஒரு குற்றமும் செய்யாதவராக இருந்ததால் அவர் கொல்லப்பட்டிருக்கக் கூடாது. ஆனால், அந்த நிரபராதி மரண தண்டனை அனுபவித்ததன் காரணம் நாம்தான்.

“உங்கள் தீச்செயல்களே உங்களுக்கும், உங்கள் கடவுளுக்கும் இடையே பிளவை உண்டாக்கியுள்ளன. உங்கள் பாவங்களே அவர் செவிசாய்க்காதவாறு அவரது முகத்தை உங்களுக்கு மறைத்துள்ளன” (எசா. 59:2) என்கிறார் இறைவாக்கினர் எசாயா. “கடவுள் அநீதியைப் பொறுக்காத இறைவன் பழிவாங்குபவர் வெகுண்டெழுபவர். அவர் மிகுந்த ஆற்றலுள்ளவர். அவர் குற்றவாளிகளை எவ்வகையிலும் பழிவாங்காமல் விடமாட்டார்” (நாகூ. 1:2,3). ஆனால், மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையே உருவான பகைமை இடைவெளியை அகற்ற, மனிதன் செய்த தவறுகளுக்கு தக்க தண்டனையை கடவுள் நமக்குக் கொடுத்தால், இந்த உலகில் நாம் உயிர்வாழ முடியாது. சொல்லாலும், செயலாலும், சிந்தனையாலும் கொடுமையான, கேவலமான, அநியாயமான, அசிங்கமான பாவங்களை செய்துவிட்ட நமக்குத் தகுந்த தண்டனையைச் சட்டப்படி, நியாயப்படி கொடுத்திருந்தால் இந்த உலகம் என்றோ அழிந்து போயிருக்கும். குற்றம் செய்தால் தண்டனை நிச்சயம் உண்டு.

     நம் மரணத்தோடு நம் வாழ்வு முடிந்தால்கூட பரவாயில்லையே! அதன்பின் பரலோகம், நரகம் என்னும் இரண்டு இடங்களில் ஏதாவது ஓரிடத்திற்கு கட்டாயம் சென்றாக வேண்டுமென்று வேதம் கோடிட்டுக் காட்டுகிறது (மத்.25:31-46). நாம் செய்த தவறுகளுக்குத் தக்க தண்டனையை கடவுள் நமக்கு தந்தால் நிச்சயமாக நம் ஆன்மா சாந்தியடையாது. கொடுமையான நரகத் தண்டனையைத்தான் நாம் அனுபவிக்க வேண்டும். இது எவ்வளவு கொடுமை என்பது நமக்குத் தெரியாது. ஏனெனில், இன்னும் நாம் நரகத்தைப் பார்க்கவில்லை. அதை உருவாக்கிய கடவுளுக்குத்தான் முழுமையாகத் தெரியும். எனவே, அந்த கொடிய தண்டனையிலிருந்து நம்மைக் காப்பாற்றுவதற்காக, கடவுள் நாம் அனுபவிக்க வேண்டிய தண்டனையை அந்த கருணாமூர்த்தி கிறிஸ்துவின்மீது சுமத்தினார்.

     கடவுள் எவ்வளவு நீதியுள்ளவரோ அவ்வளவு அன்புள்ளவர். இது சட்டப்படி நியாயமல்ல என்றே தோன்றும். ஆனால், கெட்டுப்போன நம்மை காப்பாற்ற, கடவுள் தன் சொந்த மகனை பாவபரிகார பலியாக அனுப்புவதைத் தவிர வேறு வழியில்லாததால் இப்படிச் செய்தார். நம்மீது இறைவன் வைத்திருக்கும் அளவு கடந்த அன்புதான் இயேசுவை சிலுவையில் அறைந்து கொலை செய்யப்பட அனுமதித்தது. ஆண்டவர் சினங்கொள்ளத் தாமதிப்பவர் அருளிரக்கம் காட்டுவதில் அளவு கடந்தவர் குற்றங்களையும் குறைகளையும் மன்னிப்பவர் (எண். 14:18).

     நீங்கள் உங்கள் சிறுவயது மகனோடு கடைவீதியில் நடந்து சென்று கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். உங்களது கையிலிருந்து சற்றுநேரம் விடுபட்ட சிறுவன் திடீரென்று ஒரு கல்லை எடுத்து விளையாட்டுத்தனமாக ஒரு கடையிலுள்ள கண்ணாடிக் கதவில் எறிந்து கதவு உடைந்துவிட்டது. உடனே, அந்த கடையின் உரிமையாளர் உங்கள் மகனை பிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைக்கிறார். நீதிமன்றத்தார் உங்கள் மகனிடம் 25000 ரூபாய் அபராதம் செலுத்தவோ அல்லது 6 மாத சிறைத்தண்டனை அனுபவிக்கவோ சொல்கிறார்கள். உடனே நீங்கள் உங்கள் மகனிடம், “அபராதத் தொகையை நீயே செலுத்து அல்லது 6 மாத சிறைத் தண்டனையை நீயே அனுபவி” என்று கூறுவீர்களா? நிச்சயமாக கூறமாட்டீர்கள். உங்கள் சொந்த பணத்தை கொடுத்து உங்கள் மகனை அந்தத் தண்டனையிலிருந்து காப்பாற்றுவீர்கள். உங்கள் மகன் குற்றம் செய்திருக்க, குற்றம் செய்யாத நீங்கள் அந்த குற்றத்திற்குரியத் தண்டனையை அனுபவித்தது நியாயமா, அநியாயமா என்று கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள்? சட்டப்படி மகன்தான் தண்டனை அனுபவிக்க வேண்டும். ஆனால், உங்கள் மகன்மீது நீங்கள் வைத்திருக்கும் மிகப்பெரிய அன்பு தான் உங்களை அப்படி செய்ய வைத்தது. உங்கள் மகன்மீது உங்களுக்கு இவ்வளவு கருணையும் கிருபையும் இருக்குமானால், அந்த காருண்யேஸ்வரன் மொத்த உலகத்தின் மீதும் கருணைப் பிரபுவாக இருப்பதை தவறு என்று நீங்கள் எப்படிக் கூற முடியும்?

ஓர் உணவு விடுதிக்கு சென்று நீங்களும் உங்கள் நண்பரும் சேர்ந்து உணவு உண்டபின், நீங்கள் உண்ட உணவுக்கான தொகையையும் சேர்த்து உங்கள் நண்பன் செலுத்தினால், அவர் செய்ததை அநியாயமென்று கூறமுடியுமா? உங்கள் மேல் வைத்திருக்கும் அன்பினால் உங்களுக்கு அவர் கொடுத்த விருந்தை அநியாயமென்று கூறமுடியுமா? கடவுள் தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும்பொருட்டு அந்த மகனையேத் தருமளவுக்குக் கடவுள் உலகின்மேல் (மக்கள்) அன்புகூர்ந்தார். உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார் (யோவா. 3:16,17). நாம் கடவுள்மீது அன்பு கொண்டுள்ளோம் என்பதில் அல்ல. மாறாக அவர் நம்மீது அன்புகொண்டு தம் மகனை நம் பாவங்களுக்கு பரிகாரமாக அனுப்பினார் என்பதில்தான் அன்பின் தன்மை விளங்குகிறது (1யோவா. 4:10). “என் எண்ணங்கள் உங்கள் எண்ணங்கள் அல்ல, உங்கள் வழிமுறைகள் என் வழிமுறைகள் அல்ல” என்கிறார் ஆண்டவர் (எசா.55:8). 

     ஆராதனை தூதன் லூசிபர் குற்றம் செய்து சாத்தானாக மாறிய உடனேயே அவனை கடவுள் அழிக்காமல் விட்டுவைத்ததில் நிச்சயமாக ஒரு நோக்கம் இருந்திருக்கும். அவன் பாம்பின் உருவில் ஏதேன் தோட்டத்தில் நுழைந்து ஆதாமையும் ஏவாளையும் சோதிக்காதபடி கடவுள் நினைத்திருந்தால் தடுத்திருக்கலாம். அவர் அப்படி தடுக்கவில்லை. கடவுள் அவனை அனுமதித்ததிலும் ஒரு நோக்கம் இருந்திருக்கும். அத்தோட்டத்தில் நன்மை தீமை அறிவதற்கு ஏதுவான ஒரு மரத்தை கடவுள் வைத்து, “அம்மரத்திலிருந்து மட்டும் உண்ணாதே ஏனெனில், அதிலிருந்து நீ உண்ணும் நாளில் சாகவே சாவாய்” (தொ.நூ.2:17) என்று கூறியதிலும் நிச்சயமாக ஒரு நோக்கம் இருந்திருக்கும். நன்மை தீமை அறியாத ஆதாமுக்கும், ஓரு பச்சைக் குழந்தைக்கும் எந்த வித்தியாசமும் இருந்திருக்காது. என் குழந்தையின் கை எட்டும் தொலைவில் ஒரு விஷபுட்டியை நான் வைப்பேனா? அப்படியே வைத்தால் ஒரு நோக்கத்தோடு தான் வைப்பேன். கடவுள் மனிதனை சுய ஆதீன வடிவத்தில் படைத்ததால், அவன் பாவம் செய்யும்போது கடவுள் அவனைத் தடுத்து நிறுத்தவில்லை. ஆக, மனிதன் குற்றவாளியாக மாறியதற்கு முழு பொறுப்பையும் மனிதன் மேல் கடவுள் சுமத்த முடியவில்லை. அனைவருக்கும் இரக்கம் காட்டுவதற்காகவே கடவுள் அனைவரையும் கீழ்ப்படியாமைக்கு உட்படுத்தினார் (உரோ. 11:32).

இயேசுவால் நோய்களை குணப்படுத்த முடியுமானால், கிறிஸ்தவர்கள் மருத்துவமனைகள் தொடங்க வேண்டிய தேவை இல்லையே ?