ஒரு மாணவன் தேர்வில் வெற்றி பெற்று சப்தமிட்டு தன் வெற்றியைக் கொண்டாடுகிறான். விளையாட்டுப் போட்டியில் ஒரு அணி வெற்றி பெற்றால், அவ்வெற்றியை ஆனந்த முழக்கமிட்டு கொண்டாடுகிறார்கள். இதை தவறென்று கூறமுடியுமா? கடவுள் மனிதனுக்கு தந்தையானவர். அவரிடம் மகன், மகள் என்னும் உணர்ச்சி பெருக்கோடு பேசும்போது சப்தம் கொஞ்சம் அதிகமாகலாம். அதை குறை என்று கூற முடியுமா? விக்கிரகக் கோயிலில்கூட தினமும் காலையிலும், மாலையிலும் மந்திரம் சொல்லும்போது, அதை ஒலிப்பெருக்கியின் மூலம் அதே ஊரிலுள்ள எல்லா மதத்து மக்களும் கேட்கும்படி செய்வதை தவறு என்று நாங்கள் என்றாவது கூறினோமா? ஆனால், சுத்தமான ஆன்மீகம் பிறருக்கு தொந்தரவாக இருக்காது. தூய அன்புதான் மக்களுக்கு தேவை. எனவே மக்கள் தூங்கும் இரவு வேளைகளில் அவர்களுக்கு தொந்தரவு கொடுக்காமல், அமைதியாக இறைவனை வழிபடுவது நல்லது. அப்படியே பாடல் பாடும் போதும் கடவுளைப் புகழும் போதும் சப்தம் வந்தால், அந்த சப்தம் பிறருக்கு கேடு விளைவிக்காமல், அவர்களது மனஅமைதியை கெடுக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இப்போதெல்லாம் A/C பொருத்தப்பட்ட சபைக் கட்டிடங்களில் ஜன்னல்களும், வாசல்களும் பூட்டப்படுவதால் சப்தம் வெளியே வராது. பிரார்த்தனை செய்யும்போது கொஞ்சம் சப்தத்தை உயர்த்தி, கடவுளிடம் மன்றாடும்போது, அது கொஞ்சம்கூட வலிமையுடையதாக பலர் உணர்கின்றனர். இயேசு இவ்வுலகில் வாழ்ந்த நாட்களில் தம்மை சாவிலிருந்து காப்பாற்ற வல்லவரை நோக்கி உரத்த குரலெழுப்பி, கண்ணீர் சிந்தி மன்றாடி வேண்டினார் (எபி. 5:7). ஆனால், அவர் பிறருக்கு தொந்தரவாக இராமல் தோட்டங்களிலும், மலைகளிலும் பிரார்த்தனை செய்தார்.