030. பெற்றோர் தனது மகனை எவ்வளவு கஷ்டப்பட்டு படிக்கவைக்கிறார்கள். இயேசு என்னை ஊழியத்திற்கு அழைத்தார் என்று கூறி பெற்றோரின் பாடுகளை அலட்சியப்படுத்துவது நியாயமா ?

     இயேசுவுக்கு ஊழியம் செய்ய கடவுளால் அழைக்கப்பட்டால் பெற்றோரை மறந்துவிட வேண்டும் என்று வேதம் கூறவில்லையே! மாறாக, தமது சொந்தக் குடும்பத்தை நடத்தத் தெரியாத ஒருவரால், கடவுளின் சபையை எவ்வாறு கவனிக்க முடியும்? (1திமொ. 3:5) என்றல்லவா வேதம் கேள்வி கேட்கிறது! தன்னைத்தான் நேசிப்பதுபோல பிறரையும் நேசிக்க வேண்டும் என்றல்லவா கிறிஸ்தவம் கற்பிக்கிறது!

     முன்னாள் தமிழக முதலமைச்சர் காமராஜருடைய தாயாரும் தகப்பனாரும் காமராஜரைப் பெற்று, படிக்க வைத்து, வளர்த்து, உணவு, உடை, உறைவிடம் அளித்து எதற்காக வளர்த்தார்கள்? தங்களுக்கு எதிர்காலத்தில் பயனுள்ளவராயிருப்பார் என்ற கனவுகளோடு தானே வளர்த்திருப்பார்கள்! ஆனால் அவர் அரசியலுக்கு வந்து தனக்கென்றோ, தன் குடும்பத்துக்கென்றோ எதையும் செய்யாமல் தன் வாழ்நாட்கள் முழுவதையும் மக்கள் நலனுக்காகவே செலவிட்டாரே! அவர் செய்தது சரியா? தவறா? அல்லது அவருக்கு சிலைவடித்து, மணிமண்டபம் கட்டி, அவரது பெயரை சொல்லி, மக்களை ஏமாற்றி தங்களுக்கென்றும், தங்கள் குடும்பத்திற்கென்றும் கோடிக்கணக்கில் சேர்த்துவிட்ட அவருடைய “தொண்டர்கள்” செய்வதை சரியென்று கூறப்போகிறீர்களா?
100 ஆண்டுகள் தனக்கென்றும் தன் குடும்ப நலனுக்கென்றும் சுயநலனோடு வாழ்ந்து சாவதைவிட, 35 ஆண்டுகள் ‘மக்கள்நலன்’ என்னும் லட்சியத்தோடு வாழ்ந்து மடிவதே மேலானது. சராசரி மனிதன், தான் செல்வந்தனாக அதிக ஆயுளோடு வாழவேண்டுமென்று கடவுளிடம் பிரார்த்தனை செய்வான். ஆனால், உயர்ந்த மனிதன் பிறருடைய நலனுக்காக பல இன்னல்களையும், ஆபத்துக்களையும், எதிர்ப்புகளையும், அவமானங்களையும், வேதனைகளையும் சகிப்பான்.
ஒருவன் பொறியியல் படித்து, உயர்பதவியில் உயர்ந்த சம்பளத்தில் வேலை செய்து செத்துப்போகிறான். தனக்காக மட்டும் வாழ்ந்த அவரை தன் குடும்பம் மட்டுமே ஞாபகத்தில் வைத்திருக்கும். அதுவும் இரண்டு தலைமுறை வரைதான். உங்கள் தாத்தாவின் தாத்தாவுடைய பெயரைத் தெரிந்துகொள்ள, உங்கள் தாத்தாவிடம்தான் கேட்பீர்கள். நாட்டு நலனுக்காக வாழ்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களை உங்களால் மறக்கமுடியுமா? எத்தனை தலைமுறைகளானாலும் அவர்களது தியாகம் மக்களால் நினைக்கப்படும். பாவிகளுக்காக 2000 ஆண்டுகளுக்குமுன் இயேசு மரித்ததை மக்கள் மறக்காமல் இருப்பதன் காரணமென்ன? ‘வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி, மக்களின் மனதில் நிற்பவர் யார்?’ என்று பெரியவர்கள் கேட்டிருக்கிறார்கள். ‘தான் மட்டும் பிழைத்தால் போதும்’ என்னும் உணர்வோடு வாழ்வது ஒரு வாழ்வா? மருத்துவம் படிப்பது பணக்காரன் ஆவதற்காகவா? அல்லது நாட்டு மக்களுக்கு சேவை செய்வதற்காகவா? புனிதமாகக் கருதப்பட வேண்டிய மருத்துவம், கல்வி எல்லாமே இன்று வியாபாரமாகி விட்டது. உயர்படிப்பு படிப்பது நாட்டுக்கு சேவை செய்வதற்காகத்தான் என்னும் உணர்வு இன்று அகன்றுவிட்டது. மனிதநேயம் மலையேறிப் போய்விட்டது! சுகப்பிரசவமாகும் நிலையிலுள்ள கர்ப்பிணிப் பெண்ணிடமிருந்து பணத்தைக்கறக்க அறுவை சிகிட்சை செய்தேயாக வேண்டும்’ என்று கட்டாயப்படுத்தும் மருத்துவ வியாபாரிகளைத்தான் இன்று நாம் பார்க்கிறோம். ‘மனசாட்சியாவது மண்ணாங்கட்டியாவது’ என்று நினைக்கும் ஈவு இரக்கமற்ற யுகத்தில் வாழும் நீங்கள் இப்படி ஒரு கேள்வி கேட்டதில் ஆச்சரியமில்லை. காமராஜர், கக்கன் போன்ற தியாகிகள் இருந்த ஆட்சி ஆசனங்களில் இன்று சுயநலவாத, ஜாதி, மத, மொழி வெறிபிடித்தவர்கள் அமர்ந்திருக்கிறார்கள். பிறருக்காக வாழ்பவனை பிழைக்கத் தெரியாதவன் என்று சுயநலவாதிகள் கூறுவார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பிறருக்காக வாழ ஒருவன் தீர்மானிப்பானானால் அவனை இளிச்சவாயன் என்று நையாண்டி செய்வதொன்றும் அதிசயமல்ல.

     பட்டப்படிப்பை பணத்திற்காக பணயம் வைப்பதைவிட, படிக்காமலேயே இருப்பது மேலானது என்றே நினைக்கிறேன். படித்த சுயநலவாதிகள், படிக்காத காமராஜருடைய வாழ்க்கைத் தரத்தைப்பார்த்து வெட்கப்பட வேண்டும். ‘ஒரு கிரிக்கெட் வீரனுக்கு பலகோடி ரூபாய்களை பரிசாகக் கொடுக்கிறது அரசாங்கம். ஆனால், உயிரையே ஒரு பொருட்டாக நினைக்காமல், நாட்டை கண்விழித்து பாதுகாக்க, நாட்டு எல்லையிலே போராடுகிறார்களே படைவீரர்கள், அவர்கள் நாட்டுக்காக உயிரைவிட்டால் அரசு என்ன கொடுக்கிறது?’ என்று கேள்வி கேட்டு என் அலைபேசிக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. கிரிக்கெட் விளையாட தியாக உள்ளம் தேவையில்லை. விளையாடத் தெரிந்தால் மட்டும் போதும். அதை யாரும் பழகலாம். ஆனால், தாயகத்தைக் காக்க உயிரையே பணயம் வைத்துப் போராடுவது ஊதியத்திற்கு அல்ல. அது தியாக மனமுடையவர்கள் மட்டுமே செய்ய முடியுமான விஷயம். எனவே, எல்லா பெற்றோர்களும், தங்கள் பிள்ளைகளைப் பணம் சம்பாதிக்கும் எந்திரமாக பார்க்காமல், நாட்டுக்கு பயனுள்ள தலைவனாகப் பார்த்து உயர்ந்த எண்ணங்களை அவர்களுக்குள் வளர்க்க வேண்டும். இங்கிலாந்து அமைச்சரவையில் இருந்த ஒரு பெரிய பணக்காரர் வில்லியம்கேரி. அவர் இந்தியாவுக்கு வந்து, பல பாடுகள் பட்டு, உடன்கட்டை ஏறும் பழக்கத்தை முறியடித்தார். அவர் தனக்காக மட்டும் வாழ்ந்திருந்தால், இந்த பொருளாதாரத்தில், நாகரீகத்தில் பின்தங்கிய இந்தியாவுக்கு வரவேண்டிய தேவையில்லையே.

நீங்கள் உங்கள் கோயில்களுக்குள் செருப்பு அணிகிறீர்களே !