031. நீங்கள் உங்கள் கோயில்களுக்குள் செருப்பு அணிகிறீர்களே !

     கடவுள் கட்டடங்களில் குடியிருக்கமாட்டார். விண்ணகம் என் அரியணை; மண்ணகம் என் கால்மணை . அவ்வாறிருக்க எத்தகைய கோயிலை நீங்கள் எனக்காக கட்டவிருக்கிறீர்கள்? (தி.பணி. 7:49) என்று பரமேஸ்வரன் கேள்வி கேட்கிறார்.

     “உன்னை படைத்த தெய்வத்தை நீ படைக்கமுடியுமா? அதை வர்ணம் தீட்டிச் சந்தையிலே விற்க முடியுமா? வார்த்தையாலே உலகைப் படைத்த தெய்வத்தை, ஒரு கண்ணாடிப் பெட்டிக்குள் பத்திரப்படுத்த முடியுமா?” என்று பூந்தமிழ் பாவலன் பாடினான். நாம் கட்டும் கோயில் கட்டடங்களுக்குள் கடவுள் குடியிருக்கிறார் என்று பலர் நம்பிக் கொண்டிருக்கிறோம். அதனால் தான் அங்கே செருப்பு அணியக் கூடாது என்று நினைக்கிறோம். ஆனால், அது தவறு என்பதை கீழ்க்காணும் வசனம் தெளிவுபடுத்துகிறது. “உலகையும் அதிலுள்ள அனைத்தையும் படைத்த கடவுள் விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவர். மனிதர் கையால் கட்டிய கோயில்களில் அவர் குடியிருப்பதில்லை” (தி.பணி. 17:24) என்று கடவுள் அறிவுறுத்துகிறார். நம் இதயமே இறைவன் உறையும் திருக்கோயில் என்று நான் முழுமையாக நம்புகிறேன். உங்கள் உடல், நீங்கள் கடவுளிடமிருந்து பெற்று கொண்ட தூய ஆவியார் தங்கும் கோயில் என்று தெரியாதா?” (1கொரி. 6:19) என்று திருத்தூதர் பவுல் அடிகளார் ஆதங்கப்படுகிறார்.

     கடவுளைக் காண நாமிருக்கும் இடத்திலிருந்து ஓர் அடி தூரம்கூட போகவேண்டாம். பரமாத்மா ஜீவாத்மாவோடு இணைந்திருக்கிறார். அவரை அனுதின வாழ்வில் தந்தையாக, தாயாக, அண்ணனாக, தம்பியாக, மகனாக, மகளாக, உதவியாளனாக, எஜமானாக, உறவினராக, நண்பராக காண்பது ஒரு பேரானந்தம். அப்படிப்பட்ட கடவுளைக் காண புண்ணியத் தலங்களைத் தேடி ஓடவேண்டாம். பணச்செலவு தான் மிச்சம். அந்த புண்ணியத் தலங்களையும் கொத்தனார்களும், தச்சர்களும்தானே கட்டினார்கள். கிறிஸ்தவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளிலும் மற்ற நாட்களிலும் ஜெபவீட்டுக்கு போய் பிரார்த்தனை செய்கிறார்கள். ஒரே குடும்பமாக, ஒருதாய் பிள்ளைகளாக, ஒரே இரத்தத்திலிருந்து வந்தோம் என்னும் உணர்வோடு கடவுள் கொடுத்த தெய்வீக ஒருமனப்பாட்டோடு, ஈஸ்வரன் செய்த நன்மைகளுக்கு நன்றி சொல்ல, அவரை ஒருமித்து புகழ, அவரிடம் தங்களுக்காகவும் பிறருக்காகவும் மன்றாட ஒருவரை ஒருவர் சந்தித்து, தங்கள் அன்பைப் பகிர்ந்து கொள்ள கிறிஸ்தவர்கள் ஜெபவீட்டுக்கு போகிறார்கள். மாறாக, கடவுள் ஜெபவீட்டில் குடியிருக்கிறார் என்று நம்பி அவரை பார்ப்பதற்காக போகவில்லை. மனிதனுடைய கற்பனைத்திறனால் ஒரு சிலையை உருவாக்கி, அதற்கு பற்பல வர்ணங்களை தீட்டி அதற்கு பொன், வெள்ளியாலான ஆபரணங்களை அணிவித்து, பட்டுச்சேலையால் சுற்றி வைத்து, அது பாதுகாப்பாக இருக்க பூட்டு போட்டு பூட்டிவைத்தால், இதை கடவுளென்று எப்படி கூறமுடியும்? கடவுளல்லவா மனிதனைப் படைத்தார். கடவுளல்லவா மனிதனை பாதுகாக்க வேண்டும். மனிதன் கடவுளை படைக்க முடியுமா? தரையில் அமர்ந்து கடவுளை ஆராதிக்கும் சபையார், காலணிகளை வெளியே விடுவது நல்லதென்று சுகாதாரத்தை விரும்பும் எவரும் ஒத்துக்கொள்வர். மகா பரிசுத்த ஸ்தலத்தில் சிறப்பாய் குடியிருந்த கடவுள், இயேசுவின் மரணத்தின் மூலம் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறார். கடவுள் இல்லாத இடமே இல்லை. கடவுள் இருக்குமிடத்தில் செருப்பு அணியக் கூடாது என்று சட்டமியற்றினால் நாம் எங்குமே செருப்பு அணிய முடியாது. ஏனெனில் கடவுள் இல்லாத இடமே இல்லை.

மதமாற்றம் தடை செய்யப்பட்டுள்ளதே !