032. மதமாற்றம் தடை செய்யப்பட்டுள்ளதே !

     நான் விரும்பும் ஒரு நல்ல கொள்கையைப் பின்பற்ற யார் தடை செய்ய முடியும்? இந்திய அரசியல் சட்டம் 25-வது பிரிவின் கீழ் இந்தியாவிலுள்ள எந்த மதத்தவருக்கும் பிறமதத்திற்கு மாறவும், யாரையும் தம் மதத்திற்கு மாற்றவும், அதிகாரம் உண்டென்னும் உரிமை கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த சட்டத்தை எதிர்த்து கிறிஸ்தவர்களுடைய அருட்பணிகளை எதிர்ப்பவர்கள் அரசாங்கத்தையும் கடவுளையும் எதிர்க்கிறார்கள். முதலாம் நூற்றாண்டிலேயே மதமாற்றம் தடை செய்யப்பட்டிருந்தது. ஆனால், இம்மார்க்கம் உண்மைக்கடவுளால் உருவானதால் எந்த பெரிய சக்திகள் அதைத் தடுத்தாலும் தோற்றுபோனார்கள். ஏனெனில், இயேசு ஒருமுறை தன் சீடர்களிடம் பேசும்போது, “என் நாமத்தின் நிமித்தம் நீங்கள் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள். முடிவுவரை மனஉறுதியுடன் இருப்பவர்கள் மட்டுமே மீட்கப்படுவர், உங்கள் ஆன்மாவைக் கொல்ல இயலாமல், உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்சவேண்டாம், ஆன்மாவையும், உடலையும் நரகத்தில் அழிக்க வல்ல கடவுளுக்கே அஞ்சுங்கள்” (மத். 10:22-28) என்றார்.

     இயேசு உயிர்த்தெழுந்தபின் தன்னை நம்பி வாழ்ந்த தன் சீடர்களுக்கு, அவர் வாக்குறுதியாய் சொன்ன தூய ஆவியின் அருட்பொழிவைக் கொடுத்தார். அந்த அருட்பொழிவால் இறைவல்லமையை அவர்கள் பெற்றுக் கொண்டனர். தங்கள் உயிரையும் ஒரு பொருட்டாக எண்ணாமல், எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சாமல், சீடர்கள் இயேசுவைப் பற்றிய ஆன்மீக உண்மைகளை எல்லா மக்களுக்கும் பரப்பத் தொடங்கினர். இயேசுவின் வல்லமையுள்ள நாமத்தில் மக்களுக்கு அதிசயங்களை செய்தனர். கூட்டம் கூட்டமாக மக்கள் குமாரசுவாமியின் பக்கம் திரும்பினர். இதனால் கோபமடைந்த மதவாதிகளும், அதிகாரவர்க்க அரசியல்வாதிகளும் “நாம் இந்த மனிதர்களை என்ன செய்யலாம்? ஏனெனில், எல்லாருடைய பார்வையில் இவர்கள் அற்புதங்கள் செய்திருக்கிறார்கள் இது எருசலேமில் வாழும் அனைவருக்கும் தெரியும். இதை நாம் மறுக்கமுடியாது. ஆகவே இச்செய்தி மேலும் மக்களிடையே பரவாமல் இருக்குமாறு, இந்த இயேசுவைக் குறித்து யாரிடமும் பேசக்கூடாது என நாம் இவர்களை அச்சுறுத்தி வைப்போம்” என்று கூறினர். அதன்பின்பு தலைமை சங்கத்தார் அவர்களை அழைத்து “இயேசுவைப் பற்றி எதுவும் பேசவோ, கற்பிக்கவோகூடாது” என்று கண்டிப்பாக கட்டளையிட்டனர். அதற்கு பேதுருவும் யோவானும் மறுமொழியாக, “உங்களுக்கு செவிசாய்ப்பதா? கடவுளுக்கு செவிசாய்ப்பதா? இதில் கடவுள் பார்வையில் எது முறையானது என நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள். என்ன ஆனாலும் நாங்கள் கண்டதையும் கேட்டதையும் எடுத்துரைக்காமலிருக்க எங்களால் முடியாது” என்றனர் (தி.பணி. 4:16-20).
கிறிஸ்தவர்களிடம் இந்த மறைபரப்பு பணியை செய்யச் சொன்னது கடவுள். எனவே எத்தனை பெரிய அரசியல் சக்திகள் இதை எதிர்த்தாலும், எத்தனைக் கொடுமைக்கார மதவாதிகள் இந்த தார்மீக அமைப்பை அழிக்க நினைத்தாலும், கடவுள் செய்ய நினைத்ததை யாரும் தடை செய்யமுடியாது. இயேசு மண்ணிலுள்ள மக்களுக்கு நன்மைகள் செய்து, தன்னிடமிருந்த இறைசக்தியால் நோயாளிகளை அற்புதமாக குணப்படுத்தி, மனிதர்களுக்குள் இருந்த பேய், பிசாசுகளை துரத்தி நலவாழ்வளித்தார். சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, கேவலமாக கருதப்பட்ட மக்களையும் தன் சொந்த இரத்தமாக நினைத்து, அன்புகாட்டி, ஆதரித்து புதுவாழ்வுக்கு வழிகாட்டினார். கொடுமையான பாவிகள், தங்கள் பாவவாழ்விலிருந்து வெளியேறி புனிதவாழ்வு வாழ அடித்தளமிட்டார். எங்கும் ஆனந்தம்! பேரானந்தம்! திவ்யானந்தம்! பெருங்கூட்டம் மக்கள் இயேசுவின் அன்பால் ஈர்க்கப்பட்டு, தங்கள் சுயநல வாழ்வை விட்டு கடவுளுக்காக வாழ ஆரம்பித்தனர். பிறர்நலத்தோடு எல்லா மக்களுக்காகவும் இறைவனிடம் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தனர். உலகெங்கும் இயேசு என்றாலே ஒரு பரபரப்பு! அவர் மக்களுடைய மனதில் முக்கியமான இடம் பிடித்துவிட்டார்! மக்களைச் சுரண்டி, ஆச்சாரங்களை காரணம்காட்டி மக்களுடைய பொருளாதாரத்தை சூரையாடிக் கொண்டிருந்த மதவாதிகளுக்கு இயேசுவின் வளர்ச்சி எரிச்சலையும் பொறாமையையும் கிளறிவிட்டது. மக்கள் வெள்ளம் இயேசுவின் பின்செல்வதைக் கண்ட அரசியல்வாதிகளும் கலங்கினர். நிலைமை இப்படியே போனால் இயேசு ஒருநாள் இஸ்ரவேலின் ஆட்சியை பிடிப்பார் என்று பயந்துபோய் இயேசுவைக் கொலை செய்யும்படி வலைவிரித்தனர்;.
இயேசு மகாத்மா இந்த உலகில் அவதரித்ததன் நோக்கத்தை அறியாமல், கடைசியாக கருணைவடிவாய் வந்த அந்த பரிசுத்த திருமகனை மதமாற்ற தடைச்சட்டத்தின் உச்சக்கட்ட தண்டனையாக கொலை செய்தனர். ஆனால், இயேசுவை சிலுவையில் அறைந்தவர்கள் அதை அறியாமல் செய்தனர் என்று இயேசுவுக்கு தெரியும். அதனால்தான், பிஞ்சு நெஞ்சோடு, “தந்தையே இவர்களை மன்னியும், இவர்கள் செய்வது இன்னதென்று இவர்களுக்கு தெரியவில்லை” (லூக்.23:34) என்று மனதுருகி பிரார்த்தித்தார். இயேசுவின் மேல் பொறாமையும், எரிச்சலும் அந்த அரசியல் வாதிகளுக்கும், மதவெறியர்களுக்கும் இருந்தாலும், அவர்கள் செய்த கொடுமைகளை இறைவனுடைய மகனுக்கு செய்தார்கள் என்பது அவர்களுக்கு தெரியாது. அதை மனதிற்கொண்டு, பேதுரு யூத அதிகாரிகளிடம், “அன்பர்களே, நீங்களும் உங்கள் தலைவர்களும் அறியாமையினாலேயே இப்படி செய்துவிட்டீர்களென எனக்குத் தெரியும்” (தி.பணி. 3:17) என்று அந்த கொடியவர்களையும் தேற்றுகிறார்.
இயேசுவை கொலை செய்தவர்களைப் பற்றி பவுல் கூறுகையில், “இவ்வுலகின் தலைவர்கள் எவரும் அதை அறிந்துகொள்ளவில்லை. அறிந்திருந்தால் அவர்கள் மாட்சிக்குரிய ஆண்டவரை சிலுவையில் அறைந்திருக்க மாட்டார்கள்” (1கொரி.2:8) என்று கூறுகிறார். கிறிஸ்தவ கொள்கைகளை உண்மையாகவே முழுமையாகப் புரிந்துகொள்பவர்கள் முழுநெஞ்சோடு வரவேற்பார்கள். இதுதான் உலக அமைதிக்கு ஒரேவழி என்றும் தெரிந்து கொள்வார்கள். மன்னிப்பு கொள்கையே உலக நிம்மதிக்கு ஒரேவழி என்பது தெய்வீக தெளிவுடையவர்களுக்கு மட்டுமே தெரியும். மத வெறியுடையவர்களுக்கு புரியாது. பிரான்ஸ் நாட்டு சிந்தனையாளர் வால்ட்டர், தன் ஆயுள் நாட்களிலேயே கிறிஸ்தவத்தை ஒழித்துவிடுவதாக சபதமிட்டார். வேதத்தைப் பார்க்க வேண்டுமெனில், அருங்காட்சியகத்தில் போய்த்தான் தேடிப்பார்க்க வேண்டுமென்று பரிகாசம் பண்ணினார் ஆனால், நடந்தது என்ன தெரியுமா? எந்த வீட்டில் இருந்து இந்த சபதமெடுத்தாரோ, அதே வீட்டை வேதாகமத்தை அச்சிட அவரே கொடுத்தார். இன்று ‘ஜெனீவா வேதாகம சங்கம்’ என்ற பெயரில் அது இயங்குகிறது. நாத்திக புத்தகங்கள் அச்சடித்த அவரது அச்சு இயந்திரங்கள் இன்று வேதாகமங்களை அச்சடிக்கின்றன. இயேசு இன்றும் உயிரோடிருக்கிறார்.

ஞாயிற்றுக்கிழமை மட்டும்தானே ஊழியம் செய்ய வேண்டும். மற்ற நாட்களிலும் போய் ஏன் மக்களை தொந்தரவு செய்கிறீர்கள் ?