3. இயேசு தன்னைத்தான் தெய்வமென்று கூறினாரா ?

     “நான்தான் கடவுள்; என்னைத்தான் நீங்கள் வணங்க வேண்டும்” என்று இயேசு நேரடியாக கூறியதாக வேதபுத்தகத்தில் எங்குமே எழுதப்படவில்லை. அதனால் அவர் கடவுள் அல்ல என்று கூற முடியாது.  “நான் கன்னியின் வயிற்றில் பிறந்தேன்” என்று இயேசு தன் வாயால் சொல்லாததால் அவர் கன்னியின் வயிற்றில் பிறக்கவில்லை என்று கூறமுடியுமா? இயேசு தன்னைக் கடவுளென்று மறைமுகமாக கூறியிருக்கிறார்.

     ஒருமுறை இயேசு யூதர்களிடம் பேசும்போது, “நானும், தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம்” (யோவா.10:30) என்றார். அவர் ஒரு சாதாரண இறைத்தூதராக இருந்திருந்தால் இப்படி கூறியிருக்கமாட்டார். இந்த வசனத்தை நாம் பார்க்கும்போது, இயேசு தன்னை கடவுளுக்கு சமப்படுத்தி பேசியதாக காணப்படாதது போல் தெரியலாம். ஆனால், இயேசு இப்படி பேசியவுடனேயே யூதர்களுடைய பிரதிபலிப்பைக் கவனியுங்கள். இயேசு அப்படி கூறிய உடனேயே அவர்மேல் எறிய யூதர்கள் மீண்டும் கற்களை எடுத்தனர். இயேசு அவர்களைப் பார்த்து, “தந்தையின் சொற்படி பல நற்செயல்களைச் உங்கள் முன் செய்து காட்டியிருக்கிறேன்.அவற்றுள் எச்செயலுக்காக என் மேல் கல்லெறிய பார்க்கிறீர்கள்?” என்று கேட்டார். யூதர்கள் மறுமொழியாக நற்செயல்களுக்காக அல்ல.இறைவனைப் பழித்துரைத்ததற்காகவே உன்மேல் கல்லெறிகிறோம். ஏனெனில், மனிதனாகிய நீ உன்னையே கடவுளாக்கிக் கொள்கிறாய் (யோவா. 10:31-33) என்றார்கள். இயேசு அந்த அர்த்தத்தில் சொல்லியிருக்காவிட்டால் யூதர்களிடம் மன்னிப்பு கேட்டிருப்பாரே! நமது பார்வையில் “நானும் தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம்” என்னும் அறிக்கை இயேசுவின் தெய்வீகத்தை வெளிப்படுத்தாததுபோல் இருந்தாலும், இயேசு எந்த அர்த்தத்தில் அப்படி கூறினார் என்று யூதர்கள் புரிந்து கொண்டதால்தான் அவர்மீது கல்லெறிய முயன்றனர். ‘கடவுள் ஒருவரே’ என்று நம்பும் யூதர்களுடைய பார்வையில் இயேசு கடவுளைப் பழித்துரைத்தது போல் இருந்தது. அதனால்தான் அவர்களுக்கென்று கொடுக்கப்பட்ட மதச்சட்டப்படி ( இணைச்சட்டம் 13) அவரைக் கல்லெறிய தீர்மானித்தார்கள்.

     யோவான் 5:18-ல், “இவ்வாறு அவர் ஓய்வுநாள் சட்டத்தை மீறியதோடு இல்லாமல் கடவுளைத் தம் சொந்த தந்தை என்று கூறித் தம்மையே கடவுளுக்கு சமமாக்கியதால், யூதர்கள் அவரை கொல்ல இன்னும் மிகுந்த முயற்சி செய்தார்கள்” என்று பார்க்கிறோம். இயேசு, தன்னை கடவுளுக்குச் சமமாக்கியிருக்காவிட்டால் யோவான் இப்படி எழுதியிருக்கமாட்டார். பிலாத்துவிடம் யூதர்கள் பேசும்போது, “எங்களுக்கு ஒரு சட்டமுண்டு. அச்சட்டத்தின்படி இவன் சாகவேண்டும். ஏனெனில், இவன் தன்னையே இறைமகன் என உரிமை கொண்டாடுகிறான்” (யோவா.19:7) என்றனர். ஆக, இறைமகன் என்று  கூறி, இயேசு தன்னை கடவுளுக்கு இணையாக்கி பேசியதால்தான் அவருக்கு மரணதண்டனை கொடுத்தார்கள்.

     தந்தையாம் கடவுள், “என் அன்பார்ந்த மைந்தர் இவரே” என்று இயேசுவைப் பற்றி சான்று கொடுக்கிறார் (மத். 3:17, 15:7). ஒருமுறை இயேசு மதஅறிஞர்களிடம் பேசும்போது, ‘உங்கள் தந்தை ஆபிரகாம் நான் வரும் காலத்தைக் காண ஆசைப்பட்டார். அதனைக் கண்டபோது மகிழ்ச்சியும் கொண்டார் என்றார். யூதர்கள் அவரை நோக்கி, “உனக்கு இன்னும் 50 வயதுகூட ஆகவில்லை! நீ ஆபிரகாமை கண்டிருக்கிறாயா?” என்று கேட்டார்கள். இயேசு அவர்களிடம், ஆபிரகாம் பிறப்பதற்கு முன்பே நானிருக்கிறேன் என உறுதியாக உங்களுக்கு சொல்கிறேன் என்றார். அவர்களுடைய பார்வையில் இயேசு கூறியது இறைவனைப் பழித்துரைத்தது போலிருந்ததால், இதை கேட்ட அவர்கள் அவர்மேல் கல்லெறிய கற்களை எடுத்தார்கள்(யோவா.8:56-59). தந்தையாம் இறைவனே இயேசுவை நோக்கி, “இறைவனே, என்றும் உள்ளது உமது அரியணை. உம் ஆட்சியின் செங்கோல் வளையாத செங்கோல்” (எபி.1:8) என்றார்.

     பாவிகளுடைய பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் கடவுளுக்கு மட்டும்தான் உண்டு (தி.பா. 103:3, 2சாமு. 12:13, தி.பணி. 8:22). ஆனால், கிறிஸ்துவுக்கு அந்த அதிகாரம் இருந்ததென்று அவரே கூறிய ஒரு சந்தர்ப்பத்தைப் பார்ப்போம். ஒருமுறை இயேசுவின் வல்லமையால் குணம் பெற்றுச் செல்ல முடக்குவாதமுள்ள ஒருவரை கட்டிலோடு தூக்கிக் கொண்டு வந்தார்கள். இயேசு ஒரு வீட்டினுள் இருந்தார். திரளான மக்கள் கூட்டம் அவரை சூழ்ந்திருந்ததால் அவரருகில் இவரைக் கொண்டு போக முடியாமல், வீட்டுக் கூரையின் மேலேறி ஓடுகளைப் பிரித்து நோயாளியை இறக்கினார்கள்.அவர்களுடைய நம்பிக்கையைக் கண்ட இயேசு அந்த ஆளைப்பார்த்து, “உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்றார். இதனை கேட்ட மறைநூல் அறிஞரும், பரிசேயரும், “கடவுளைப் பழித்துரைக்கும் இவன் யார்? கடவுள் மட்டுமன்றி பாவங்களை மன்னிக்க யாரால் இயலும்” என்று எண்ணிக் கொண்டனர். அவர்களின் எண்ணங்களை உய்த்துணர்ந்த இயேசு அவர்களைப் பார்த்து, “உங்கள் உள்ளங்களில் நீங்கள் எண்ணுகிறதென்ன? உம் பாவங்கள் உமக்கு மன்னிக்கப்பட்டன’ என்பதா, ‘எழுந்து நடக்கவும்;’ என்பதா, எது எளிது? மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மானிட மகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்” என்றார். பின்பு அவர் முடக்குவாதமுற்றவரை நோக்கி, “நான் உமக்கு சொல்கிறேன் நீர் வீட்டுக்கு போம்!” என்றார். உடனே அவர் அவர்கள் முன்பாக எழுந்து தாம் படுத்திருந்த கட்டிலைத் தூக்கிகொண்டு, கடவுளைப் போற்றிப் புகழ்ந்தவாறே தமது வீட்டுக்குப் போனார் (லூக். 5:20-25). இயேசுவுக்கு மக்களுடைய பாவங்களை மன்னிக்கும் அதிகாரமும் இருந்தது என்று திருத்தூதர்கள் சான்று பகர்ந்தனர். இஸ்ராயேல் மக்களுக்கு மனமாற்றத்தையும், பாவமன்னிப்பையும் அளிப்பதற்காக கடவுள் அவரைத் தலைவராகவும் மீட்பராகவும் தமது வலப்பக்கத்திற்கு உயர்த்தினார் (தி.பணி. 5:31).

     கடவுள்தான் எங்கும் நிறைந்திருக்கிறார் (எரே. 23:24, நீதி. 15:3). ஆனால், இயேசு தானும் எங்கும் நிறைந்தவரென்று தெளிவாக கூறுகிறார். “இரண்டு மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாக கூடியிருக்கின்றார்களோ, அங்கே அவர்களிடையே நான் இருக்கின்றேன் என உறுதியாக உங்களுக்கு சொல்கிறேன்” (மத். 18:20); “நான் உங்களுக்கு கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைபிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ, உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கின்றேன்” என்றார் (மத். 28:20). இயேசு ஆதியிலே கடவுளோடிருந்தார். அவர்; கடவுளாகவே இருந்தார் என்பதற்கான விளக்கங்களைக் கீழே தருகிறேன். தொடக்கத்தில் வாக்கு இருந்தது.அவ்வாக்கு கடவுளோடு இருந்தது. அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது. வாக்கு என்னும் அவரே தொடக்கத்தில் கடவுளோடு இருந்தார். அவரிடம் உயிர் இருந்தது. அவ்வுயிர் மனிதருக்கு ஒளியாயிருந்தது. அந்த ஒளி இருளில் ஒளிர்ந்தது. இருள் அதன்மேல் வெற்றிகொள்ளவில்லை (யோவா.1:1-5). இயேசுவுக்கு ‘கடவுளின் வாக்கு’ (தி.வெ. 19:13) என்றொரு பெயரும் உண்டு.

     இயேசு ஒருமுறை தன் தந்தையை நோக்கிப் பிரார்த்தனை செய்யும்போது, “தந்தையே உலகம் தோன்றும் முன்பே நீர் என்னை மாட்சிப்படுத்தியுள்ளீர். இப்போது உம் திருமுன் அதே மாட்சியை எனக்கு தந்தருளும்” (யோவா. 17:5) என்றார். இதன் மூலம் உலகம் தோன்றுவதற்கு முன்பே இயேசு கடவுளோடு இருந்தார் என்று தெளிவாகத் தெரிந்து கொள்கிறோம். இறுதி நியாயத்தீர்ப்பு செய்யும் அதிகாரம் கடவுளுக்கு மட்டும்தான் இருக்கமுடியும் (எசா. 33:22, தி.பா. 50:6, 96:10,13). ஆனால், இயேசுவே கடைசி நாளில் நியாயத்தீர்ப்பு செய்வாரென்று அவரே கூறினார். “தந்தை யாருக்கும் தீர்ப்பளிப்பதில்லை. தமக்கு எல்லாரும் மதிப்பு கொடுப்பதுபோல, மகனுக்கும் மதிப்புக் கொடுக்க வேண்டும் என தீர்ப்பளிக்கும் அதிகாரம் முழுவதையும் அவர் மகனுக்கு அளித்துள்ளார் (யோவா. 5:22).

அவர் மானிடமகனாய் இருப்பதால் தீர்ப்பு வழங்கும் அதிகாரத்தையும் தந்தை அவருக்கு அளித்துள்ளார் (யோவா. 5:27). மேற்கண்ட வசனங்களின்படி, இறுதித்தீர்ப்பு இயேசுவின் அதிகாரத்திலுள்ளது என்றும், தந்தையாம் கடவுளை நாம் எவ்வளவு மதிக்கிறோமோ, அவ்வளவு மதிப்பை அவரது வார்த்தையாகிய மகனுக்கும் கொடுக்கவேண்டும் என்றும் கடவுள் எதிர்பார்க்கிறார். தயவுசெய்து வாசியுங்கள்: மத். 25:31-46. வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் நீதிபதியாக கடவுளால் குறிக்கப்பட்டவர் இயேசுதாம் என்று மக்களுக்கு பறைசாற்றவும், சான்றுபகரவும் அவர் எங்களுக்குக் கட்டளையிட்டார் (தி.பணி. 10:42) என்று திருத்தூதர் பேதுரு கூறினார். தந்தை, தாம் உயிரின் ஊற்றாய் இருப்பதுபோல, மகனும் உயிரின் ஊற்றாய் இருக்குமாறுச் செய்துள்ளார் (யோவா. 5:26). இயேசு, தனக்கு அழிவேயில்லை, என்பதை மக்கள் புரிந்து கொள்ளும்படி, “இறந்தேன், ஆனாலும் இதோ என்றென்றும் உயிர்வாழ்கிறேன்; சாவின் மீதும், பாதாளத்தின் மீதும் எனக்கு அதிகாரம் உண்டு” (தி.வெ. 1:18) என்று வெற்றி முழக்கமிட்டார்.

இயேசுவை யாராவது தொழுததாக வேதத்தில் ஆதாரமுண்டா ?