ஆஸ்திரேலிய பாதிரியார் கிரகாம் ஸ்டேன்ஸ் தன் இரண்டு பிள்ளைகளோடு தன் வண்டியில் வைத்து உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டார். இதுபோன்று கோடிக்கணக்கானோர் இயேசுவின் அன்பை வெளிப்படுத்தும் வண்ணம் தங்கள் உயிரையே கிறிஸ்துவுக்காக அர்ப்பணித்துள்ளனர். சிலுவையில் இயேசு வலியால் துடிக்கும்போது, “தந்தையே இவர்கள் என்ன செய்கிறார்களென்று அறியாமல் செய்கிறார்கள் இவர்களுக்கு மன்னியும்” (லூக். 23:24) என்று வேண்டினார். புனித ஸ்தேவான் தனது வாழ்வின் கடைசி நிமிடங்களில் தன்னை கல்லெறிந்து கொலை செய்த கூட்டத்தாரை மன்னித்தார். அவர் முழுங்கால் படியிட்டு, “ஆண்டவரே, இவர்கள் மேல் இந்த பாவத்தை சுமத்தாதிரும்” என்று மன்னித்து உயிரைவிட்டார் (தி.பணி.7:60). இவர்கள் இப்படி செய்த காரணம் இயேசுவின் அன்பு.
“நீதியின் பொருட்டு துன்புறுத்தப்படுவோர் பாக்கியவான்கள். ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது. என்பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து துன்புறுத்தி உங்களைப்பற்றி இல்லாதவை பொல்லாதவை எல்லாம் சொல்லும்போது நீங்கள் பாக்கியவான்கள். மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள் ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்கு கிடைக்கும் கைமாறு மிகுதியாகும். உங்கள் பகைவரிடமும் அன்புகூருங்கள். உங்களை துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். இப்படி செய்வதால் நீங்கள் உங்கள் விண்ணகத் தந்தையின் மக்களாவீர்கள்” (மத். 5:10,11,44,45). “மற்ற மனிதர் செய்யும் குற்றங்களை நீங்கள் மன்னிப்பீர்களானால், உங்கள் விண்ணகத்தந்தையும் உங்களை மன்னிப்பார். மற்ற மனிதரை நீங்கள் மன்னிக்காவிடில், உங்கள் தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிக்கமாட்டார்” (மத். 6:14,15).
“என் பெயரின் பொருட்டு உங்களை எல்லாரும் வெறுப்பர். இறுதிவரை மனஉறுதியுடன் இருப்போரே மீட்கப்படுவர். ஆன்மாவை கொல்ல இயலாமல் உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்ச வேண்டாம். ஆன்மாவையும் உடலையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே அஞ்சுங்கள்” (மத்.10:22,28) என்று அறிவுறுத்துகிறார் இயேசு. “உலகம் உங்களைப் பகைத்தால் ஆச்சரியப்பட வேண்டாம்” (1யோவா.3:13). “உலகு உங்களை வெறுக்கிறதென்றால், அது உங்களை வெறுக்குமுன்னே என்னை வெறுத்ததென்று அறியுங்கள். நீங்கள் உலகை சார்ந்தவர்களாக இருந்திருந்தால் தனக்கு சொந்தமானவர்கள் எனும் முறையில் உலகு உங்களிடம் அன்பு செலுத்தியிருக்கும். நான் உங்களை உலகிலிருந்து தேர்ந்தெடுத்து விட்டேன். நீங்கள் உலகைச் சார்ந்தவர்களல்ல. எனவே உலகு உங்களை வெறுக்கிறது” (யோவா.15:18,19) என்று ஆண்டவர் தன் மக்களை திடப்படுத்துகிறார். சோதனையை மனவுறுதியுடன் தாங்குவோர் பேறுபெற்றோர். ஏனெனில், அவர்களது தகுதி மெய்ப்பிக்கப்படும்போது, தம்மீது அன்பு கொள்வோருக்குக் கடவுள் வாக்களித்த வாழ்வாகிய வெற்றி வாகையினை அவர்கள் பெறுவர் (யாக்.1:12)
“தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம் மாறாக, உங்களை வலக்கன்னத்தில் அறைபவருக்கு மறுகன்னத்தையும் காட்டுங்கள். ஒருவர் உங்களுக்கு எதிராக வழக்கு தொடுத்து உங்கள் அங்கியை எடுத்துக்கொள்ள விரும்பினால், உங்கள் மேலுடையையும் அவர் எடுத்துக்கொள்ள விட்டுவிடுங்கள். எவராவது உங்களை ஒருமைல் தூரம் வரக் கட்டாயப்படுத்தினால் அவரோடு இருமைல் தூரம் செல்லுங்கள். உங்களிடம் கேட்கிறவருக்குக் கொடுங்கள். கடன் வாங்க விரும்புகிறவர்களுக்கு முகம் கோணாதீர்கள் (மத்.5:39-42). உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும். உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர் உங்களுக்குப் பணியாளராக இருக்கட்டும். இவ்வாறே மானிடமகனும் தொண்டு ஏற்பதற்கல்ல, தொண்டாற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம்முயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்” (மத். 20:26-28) என்று இயேசு அறிவுரை கூறினார்.
‘தீமை செய்தவர்களுக்குத் திரும்ப நன்மை செய்ய வேண்டும்’ என்னும் சாத்வீகக் கொள்கைதான் கிறிஸ்தவத்தின் அபார வளர்ச்சிக்கு காரணம் என்றால் மிகையாகாது. நீதிமன்றத்தில் கொலையாளி யாரென்று நிரூபிக்கப்பட்டதும் அவரை மனதார மன்னித்த அந்த தாயார் போல இந்தியக் குடிமக்கள் எல்லோருமே மாறவேண்டுமென்று ஆசைப்படுகிறேன். ஆயுதங்களால் யாரையும் திருத்தமுடியாது. ஆனால், அன்பால் முடியுமென்று இயேசுவின் போதனைகள் கற்பிக்கின்றன. மற்ற மதத்தினர் ஆயுதம் தாங்கிப் போராடுவதுபோல இயேசுவின் விசுவாசிகள் போராடினால் உலகு தாங்குமா ?