கடவுள் எங்கும் நிறைந்தவர்தான் (எரே. 23:24 மத். 18:20). அவர் மனிதனுடைய கைகளினால் கட்டப்பட்ட திருக்கோயில்களில் குடியிருப்பதில்லை. மனிதர்களின் கைகளால் வனையப்பட்டு, வடிவமைக்கப்பட்ட சிலைகளுக்குள் அவர் வசிப்பவருமல்ல. உலகையும் அதிலுள்ள அனைத்தையும் படைத்த கடவுள் விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவர். மனிதர் கையால் கட்டிய திருக்கோயில்களில் அவர் குடியிருப்பதில்லை (தி.பணி. 17:24) என்று வேதம் தெளிவாக கூறுகிறது. கடவுளுக்கு ஒரு சிலையைச் செய்து அது இருக்குமிடத்தை ஒரு புண்ணியத் தலமாக அறிவிக்க கடவுள் கட்டளையிடவில்லை. கடவுளை வீட்டிலிருந்தே ஆராதிக்கலாம். ஆனால், ஒருவர் தனியாக பிரார்த்தனை செய்வதைவிட பலர் சேர்ந்து ஒற்றுமையாக கடவுளிடம் விண்ணப்பித்தால் நிச்சயமாக பதில் கிடைக்கும். இயேசு தன் சீடர்களிடம் கூறினார், “உங்களுக்குள் இருவர் மண்ணுலகில் தாங்கள் வேண்டும் எதைக்குறித்தும் மனமொத்திருந்தால் விண்ணுலகிலிருக்கும் என் தந்தை அதை அவர்களுக்கு அருள்வார். ஏனெனில் இரண்டு அல்லது மூன்றுபேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன்” (மத். 18:19-20). மனிதர்கள் கடவுளை நினைப்பது மட்டுமல்ல. சகமனிதர்களோடும் நல்லுறவோடிருக்கும்படிக்கே இப்படிப்பட்ட ஒரு ஒப்பந்தத்தை கடவுள் செய்திருக்கவேண்டும். ‘நோய்வாய்ப்பட்டால் நேரடியாக இறைவனை நோக்கி மன்றாடு’ என்று கூறாமல், திருச்சபையின் மூப்பர்களை வரவழைத்து, அவர்கள் உங்களுக்கு எண்ணெய்பூசி இறைவேண்டல் செய்ய யாக்கோபு ஆலோசனை கூறுகிறார் (யாக். 5:14).
ஊழியருக்கும் விசுவாசிக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தத்தான் கடவுள் அப்படி செய்திருப்பார் என்று முழுமையாக நம்புகிறேன். தனியாக வீட்டில் அமர்ந்து பிரார்த்தனை செய்தால் உங்கள் பிரார்த்தனையைக் கடவுள் கேட்கமாட்டார் என்று கூறமுடியாது. ஆனால், உங்கள் வாழ்வு சகவிசுவாசிகள் பலரோடு இணைந்துள்ளது. அவர்களோடு இணைந்து ஒருதாய் பிள்ளைகளாய் வாழ வேண்டியது முக்கியமென்று கருதியே தனியாக பிரார்த்தனை செய்வதைப் பற்றி பெரிதுபடுத்தி பேசாமல் கூட்டுப்பிரார்த்தனையை முக்கியப்படுத்திப் பேசுகிறார் ஆண்டவர்.
நீங்கள் தனியாக அமர்ந்து உங்களது தேவைக்காக நீங்கள் மட்டுமே ஜெபித்து ஒரு அற்புதம் நடந்துவிட்டால் நான் என்னும் தற்பெருமை மேலோங்கி அழிந்துவிடுவீர்கள் என்னும் தெய்வீக ஞானத்தால்தான் பலராக இணைந்து பிரார்த்தனை செய்யக் கூறினார். எல்லாருக்காகவும் பிரார்த்தனை செய்யும் பவுல், தனக்காக ஜெபிக்க சபை மக்களை வேண்டுகிறார் (எபி. 13:18, 2தெச. 5:25). ஆக, ஊழியக்காரர்களும், விசுவாசிகளும் ஒருவர் பாரத்தை ஒருவருக்குப் பகிர்ந்து, கிறிஸ்துவின் அன்பால் வளர்ந்து, ஒருவரையொருவர் சார்ந்து வாழ வேண்டுமென்றால் நாம் சபையாகக் கூட வேண்டும். இருவர் திருமணம் செய்ய, சாட்சி கையெழுத்துப் போடும் மற்றிருவர் மட்டும் போதுமே! எதற்காக திருமண மண்டபம் நிரம்ப ஆட்களைக் கூப்பிட்டு, சாப்பாடு போட்டுப் பணத்தை செலவு செய்ய வேண்டும்? சிந்தியுங்கள். பல நாட்களாக, மாதங்களாக, வருடங்களாக, யுகங்களாக அகன்றுபோயிருந்த பழமைப்பட்ட உறவுகளை புதுப்பிக்க, ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து தங்கள் சங்கடங்களையும், சந்தோஷங்களையும் பகிர்ந்துகொள்ள, எல்லாரும் சேர்ந்து திருமணத் தம்பதியரை ஆசீர்வாதம் பண்ண அத்தருணம் பயனுள்ளதாக இருக்கும்.
பல நாட்களாக தொலைபேசியின் மூலம் தொடரும் உறவுகள் நேருக்குநேர் சந்திப்பதால் வளருமல்லவா! பள்ளிக்கு வராமலேயே ஒரு மாணவன் வீட்டிலிருந்தவாறே படிக்க முடியாதா? முடியும். ஆனால், பள்ளி மாணவரிடம் இருக்கும் பொதுஅறிவும், புத்திக்கூர்மையும் வீட்டு மாணவனிடம் எதிர்பார்க்க முடியாது. சபைக்கூடுகையில் மற்றுமொரு முக்கியத்துவமுண்டு. நாம் வாசிக்க நம்மிடம் கொடுக்கப்பட்டிருக்கும் வேதாகமத்தை நாம் வாசிக்கும்போது அதன் விளக்கங்களைப் புரிந்துகொள்ள, சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள, வேத போதகர்களிடம் அணுகி வேதஅறிவை வளர்த்துக் கொள்ள, நாம் சபைக்கு செல்லவேண்டும். எத்தியோப்பிய மந்திரி ஒருவர், தான் வாசித்துக் கொண்டிருந்த வேதபகுதியின் விளக்கத்தை உணராமலேயே வாசித்துக் கொண்டிருந்தார். திருத்தூதர் பிலிப்பு அவரை சந்தித்து அவரிடம் “நீர் வாசிப்பதன் கருத்து உமக்கு தெரியுமா?” என்று கேட்டவுடன், “யாராவது விளக்கிக் காட்டாவிட்டால் எவ்வாறு என்னால் தெரிந்துகொள்ள முடியும்?” என்று மந்திரி பதிலளித்தார். உடனே பிலிப்பு மந்திரிக்கு அந்த வேதபகுதியின் விளக்கத்தை கூற, மந்திரியார் திருமுழுக்கு பெற்றுக்கொண்டார் (தி.பணி. 8:30,31). பிலிப்பு போன்ற ஊழியக்காரர்களுடைய உதவி சபையாருக்குத் தேவை. இதை மனதில் கொண்டுதான் திருத்தூதர் பவுலடிகளார், “சிலர் வழக்கமாகவே நம் சபைக்கூட்டங்களில் கலந்துகொள்வதில்லை, நாம் அவ்வாறு செய்யலாகாது. ஒன்றுகூடி ஒருவருக்கொருவர் ஊக்கம் ஊட்டுவோமாக” (எபி.10:25) என்கிறார். சபை கூடிவரும்போது, உங்கள் பார்வையில் தவறு செய்யும் ஒருவரை நீங்கள் கண்டித்து புத்திமதி சொல்லமுடியும். சபையிலுள்ள ஏழைகளுக்கு அவர்களது தேவை தெரிந்து உதவி செய்யமுடியும் (கலா.6:1-10). காயப்பட்ட மனதோடு வரும் மற்றோரை சந்தித்து அவர்களுக்கு ஆறுதலான வார்த்தைகளைப் பேசமுடியும்.
பணம் இருந்தால் நம் பிள்ளைகளை அமெரிக்காவுக்கானாலும் அனுப்பிப் படிக்கவைக்கிறோம். ஆனால், கடவுளை வணங்க, அவரைப்பற்றி கற்றுக்கொள்ள சக ஆன்மீக நண்பர்களோடு ஆவிக்குரிய நட்புறவு வைத்துக்கொள்ள ஜெபவீட்டுக்கு வர நாம் ஏன் சோம்பல்பட வேண்டும்? சபைக்கூடிவருதலின் நன்மைகளை எழுதினால் ஒரு புத்தகமே எழுதலாம்.