044. நான் சுயக்கட்டுப்பாட்டோடு வாழ்கிறேன். எனக்கு கடவுள் தேவையில்லையே !

     வெறும் கண்ணால் ஒரு குறிப்பிட்ட தூரம் வரைதான் தெளிவாக பார்க்கமுடியும். ஆனால், அதிக தூரம் பார்க்க வேண்டுமானால் தொலைநோக்கியைப் பயன்படுத்த வேண்டும். அதேபோல, கடவுளின் துணையில்லாமல் ஒரு குறிப்பிட்ட அளவுக்குத்தான் தூய்மையாக வாழமுடியும். கடவுளின் உதவி இல்லாமல் நாம் பரிசுத்தமாக வாழ ஆசைப்பட்டாலும் முழுமையாக வாழமுடியாது. நம்மை சுற்றிலுமுள்ள மக்களுக்கு நம்மை ஒரு மகான்போல காட்டலாம். ஆனால், நம் உண்மை நிலை என்னவென்று நமக்குத்தானே தெரியும். தன் சுயவலிமையால் மனத்தூய்மையோடு வாழநினைக்கும் மக்களைப்பார்த்து ஆண்டவர் கீழ்க்காணும் வசனங்களால் அறிவுரை கூறுகிறார். எத்தியோப்பியன் தன் தோலையும், சிவிங்கி தன் புள்ளிகளையும் மாற்ற முடியுமா? முடியுமானால் தீமைசெய்யப் பழகின நீங்களும் நன்மை செய்ய முடியும் (எரே. 13:23). ஆப்பிரிக்காவின் எத்தியோப்பிய மக்கள் சாதாரணமாக கறுப்பாக இருப்பார்கள். அந்த கறுத்த உடலை வெள்ளை நிறமாக மாற்ற அவர்களால் முடியாது. அதுபோல பாவத்தோடு வாழும் மனிதனும் பரிசுத்தமாக வாழ இயேசு இல்லாமல் முடியாது.

     இந்தியாவின் தேசப்பிதா எனப்படும் காந்தியடிகள் உலகத்தின் பெரிய தலைவர்களின் பட்டியலில் இருக்கிறார். ஆனால், அவருடைய தனிப்பட்ட வாழ்வில் பாவத்தோடு எவ்வளவு போராடியும் வெற்றிபெற முடியாமல், ஒழுக்கமில்லாமல், கட்டுப்பாடற்று வாழ்ந்த சூழ்நிலைகளை அப்பட்டமாக அவருடைய நூல்களிலே எழுதியிருக்கிறார். தான் செய்த தவறுகளை வெளிப்படையாக எழுதிய காந்தியின் அந்த மனப்பான்மையைப் பாராட்டுகிறேன். உள்ளத்தில் முடைநாற்றமெடுக்கும் கேவலமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தாலும் வெளியே யோக்கியன் போல வாழ்ந்துகொண்டிருந்த மக்களைப் பார்த்து, வெள்ளையடிக்கப்பட்ட கல்லறையே என்று இயேசு கூறினார். நீங்கள் உங்களை மக்களுக்கு முன் நேர்மையாளராக காட்டிக்கொள்கிறீர்கள். கடவுள் உங்கள் உள்ளங்களை அறிவார். நீங்கள் உங்களை மக்களுக்கு முன் உயர்ந்தவர்களாக காட்டிக் கொள்வது கடவுள் பார்வையில் அருவருப்பாகும் (லூக். 16:15) என்று இயேசு எச்சரிக்கிறார்.

     கடவுள் இல்லையென்றும், கடவுளின் உதவி தேவையில்லை என்றும் வாழும் அதிமேதாவிகள் அநேகரை எனக்குத் தெரியும். ஆனால், அவர்களுடைய தனிப்பட்ட வாழ்வில் சுயநலவாதிகளாக, கட்டுப்படுத்த முடியாத இரகசிய பாவங்களை செய்பவர்களாகவும் வாழ்கிறார்கள். இன்று உலகத்தில் பல நட்சத்திர தலைவர்கள் குடிகாரராகவும், விபச்சாரம் செய்கிறவர்களாகவும், பொறாமையினால் எதிரிகளை கொலை செய்கிறவர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால், இயேசுவின் சத்திய வழியை அறிந்து பின்பற்றினால் தூய்மையாக வாழலாம். நான் தூய்மையாக வாழ்வது போல நீங்களும் தூய்மையாக வாழுங்கள் (1பேது. 1:17) என்று கடவுள் கூறியிருக்கிறார். கடவுள் நம் வாழ்க்கையை ஒரு கண்டிப்பான தகப்பனைப்போல கண்காணிக்கிறார் என்னும் ஓர் உணர்வு நமக்குள் இருந்தால் தான் நம்மால் தூய்மையாக வாழமுடியும் என்பது தான் நிதர்சனமான உண்மை. தன் தகப்பன் தன்முன் உட்கார்ந்திருக்கிறார் என்னும் உணர்வு ஒரு மகனுக்கு இருந்தால்தான் குற்றம் செய்யாமல் இருப்பான்.

     அதேபோலத்தான் ‘ஆணுறையை பயன்படுத்துங்கள்’ என்று விளம்பரப்படுத்தும் அரசாங்கம், ‘விபச்சார தடுப்புச் சட்டம்’ என்ற ஒரு சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாதது ஏன்? அவ்வளவு புனிதமான ஒரு தூய வாழ்க்கையை அரசாங்கத்தால் உருவாக்க முடியாது. கடவுளால்தான் முடியும். இயேசுதான் இந்த உலகில் ஒரு குற்றம்கூட செய்யாமல் வாழ்ந்த ஒரே மனிதன். அவர் இன்றும் தூய்மையாக உயிரோடு இருக்கிறார். அவர் மட்டும்தான் பாவிக்கு உதவி செய்யமுடியும். குற்றம்புரிவோரைப் பார்த்து ‘குற்றம் செய்யாதே!’ என்று கூறத் தகுதியுடையவரும் அவர் தான். இயேசுவாகிய குமாரசுவாமி உங்களை விடுதலை செய்தால், அது மெய்யான விடுதலையாக இருக்கும் (யோவா. 8:32-36). தூய்மையின் ஆவியானவர் மட்டும்தான் நம்மை பவித்திரமாக பாதுகாக்க முடியும். முழு மனத்தோடு ஆண்டவரை நம்பு உன் சொந்த அறிவாற்றலைச் சார்ந்து நில்லாதே. நீ எதைச் செய்தாலும் ஆண்டவரை மனத்தில் வைத்துச் செய் அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செம்மையாக்குவார் (நீதி.3:5,6).

நான் எனது தெய்வத்தை வணங்குகிறேன். அதில் சந்தோஷமாய் இருக்கிறேன். அது போதாதா ?