052. அன்னையும் பிதாவும் தெய்வங்கள் தானே. அவர்களை வணங்கினால் போதாதா ?

அன்னையும் பிதாவும் தெய்வங்கள் தானே. அவர்களை வணங்கினால் போதாதா ?
ஒரு ஆதரவற்ற குழந்தைக்கு ஒவ்வொரு மாதமும் எவ்வளவு செலவாகுமோ, அவ்வளவு பணத்தையும் வெளிநாட்டிலுள்ள தயாள குணமுள்ள ஒருவர் மாதம்தோறும் அனுப்புகிறார் என்று வைத்துக் கொள்ளுவோம். அந்த பணத்தை வாங்கி, காப்பக முதல்வர் இந்த குழந்தைக்கு உணவு, உடை, உறைவிடம் கொடுத்து பாராமரிக்கிறார். அந்த குழந்தையின் பார்வையில் ஆசிரம முதல்வர்தான் முக்கியம். அந்த குழந்தைக்கு அவர்தான் ஏறத்தாழ தாயும் தந்தையும். தன்னுடைய உயர்வுக்கு அடிப்படையில் காரணமாயிருந்தவர் யாரென்று தெரியாமல் அந்த குழந்தை வளர்ந்து, வாலிபனாகி, தகப்பனாகி, தாத்தாவாகி விட்டது. தன்னை நேசித்து பணம் அனுப்பும் நபருடைய சத்தத்தை கேட்காமல், அவருடைய முகத்தை பார்க்காமலேயே 90 வருடங்கள் வாழ்ந்தபின், இந்த ஆசிரம முதல்வர்தான் என் முழு அன்புக்கும் தகுதியான தெய்வம் என்று இவர் கூறினால் நீங்கள் எப்படி உணர்வீர்கள்? கடைசிவரை தன்மீது அக்கரை வைத்திருந்த அந்த அன்பு நெஞ்சத்தை பார்க்கவேயில்லை. அவரை வாழவைத்த வெளிநாட்டுக்காரனுடைய பாசம் மறக்கப்படலாமா? நம் பார்வையில் நம் தாயும் தந்தையும் முக்கியமானவர்கள் தான். ஆனால், நம் தாயையும் தந்தையையும் படைத்த அனைத்தையும் அறிந்த அகிலாண்டேஸ்வரன் பார்வையில் யார் முக்கியமானவரோ அவரே ஆராதனைக்கு தகுதியானவர்.
உடலில் நம் கண்களுக்கு தெரியும் நிலையிலிருக்கும் உடல் உறுப்புகள் நம் பார்வைக்கு முக்கியமானவையாக தெரியலாம். காலில் அடிபட்டு இரத்தம் வடிந்தால் ஆபத்து என்று உடனேயே காயத்தில் மருந்து வைத்து கட்டு போடுகிறோம். ஆனால், இதயகோளாறு, இரத்தப் புற்றுநோய் வந்தால் அதை கண்டுபிடிப்பது நமக்கு அவ்வளவு சுலபமல்ல. அதை கண்டு கொள்ளாமலேயே வாழ்வோம். ஏனென்றால், எந்த பிரச்சனை எங்கே வந்திருக்கிறது என்று கண்டுபிடிக்கும் திறன் நமக்கில்லை.திடீரென்று வயிற்றுவலி வந்தால் சிறுநீரகக் கோளாறு என்றோ, குடல்புண் என்றோ நாம் யூகித்தாலும் அதன் உண்மையான நிலையை அறிய மருத்துவமனைக்கு செல்கிறோம். அங்கு மருத்துவர் கூறுவதை கருத்தாய் கவனித்து மருத்துவத்திற்கு நம் உடலை ஒப்படைக்கிறோம். அதுபோல தாயும் தந்தையும் நம் கண்ணுக்கும் உணர்வுகளுக்கும் முக்கியமானவர்களாக இருந்தாலும், நம்மைப் படைத்து பராமரிக்கும் தெய்வத்தை, நம் கண்களுக்கு தெரியாத அந்த அன்பு ஆவியானவரை நாம் மறக்கமுடியாது.
நாம் நம் தாயின் வயிற்றில் இருக்கும்போது நம்மை பெயர் சொல்லி அழைத்தவர் தெய்வம். தனது தன்மையும், வடிவமும் உடையவனாக மனிதனை உருவாக்கினவர் கடவுள். நமது தலையில் எத்தனை முடியிருக்கின்றதோ அந்த எண்ணிக்கையை கடவுள் தன் ஞாபகத்தில் வைத்திருக்கிறார். நம் பாதம் கல்லில் இடறாதபடிக்கு ஈஸ்வரன் தன் தூதர்களை அனுப்பி பாதுகாக்கிறார். நாம் ஒரு தவறு செய்யும்போது அதைத் தவறென்று சுட்டிக்காட்டுவது தாயுள்ளம் கொண்ட அந்த பரமேஸ்வரன்தான். நாம் பெற்ற பிள்ளைகளை அன்புடன் பராமரிக்கவேண்டும் என்னும் அன்புள்ளத்தை தந்தவர் கடவுள்தான். நம்மைப் பற்றி நமக்கு இருக்கும் அக்கரையைவிட அதிகமாக அக்கரைப்படும் ஓருயிர்தான் தெய்வம். நாம் நம் கண்களால் பார்க்காவிட்டாலும் நம்மை கண்காணிக்கும் ஆன்மீக சக்தியே தெய்வம்.
சிறுவயது முதலே உங்கள் பெற்றோர் உங்களுக்கு அன்புகாட்டி உணவூட்டி, உடையுடுத்தி, சீராட்டி, பாராட்டி, பராமரித்து வளர்த்ததால் உங்களுக்கு தெரிந்தவரையில் அவர்களது அன்பே பிரதானமாக தெரியலாம். ஆனால், அவர்களுடைய மரணத்திற்கு பிறகும் உங்களை பாதுகாக்கும் உறவே நிரந்தர உறவு. ஒருவரிடம் மிகவும் பாசமாயிருப்பவர் திடீரென்று அவரை வெறுத்துவிட்டால், மன வேதனையடைந்து கடைசியாக தற்கொலையே செய்துவிடுகிறார். ஆனால், உலகிலுள்ள எல்லா உறவுகளையும்விட அதிகமாக அன்புக்காட்டும் கடவுளின் நிதர்சனமான அன்பை நீங்கள் கண்டுபிடித்துவிட்டால், தைரியமான மனதோடு எத்தனை பெரிய எதிர்காற்றையும் சமாளிக்கும் ஆற்றலை பெற்றுவிடுவீர்கள். ஒரு மனிதனுடைய எதிர்காலத்தை தைரியமாக இரும்பு இதயத்தோடு சந்திக்கத் தேவையானது அவனை சூழுந்திருக்கும் மக்களிடமிருந்து கிடைக்கும் அன்புதான். ஆனால், யார் என்னை வெறுத்தாலும் என் தாய் என்னை மறக்கமாட்டார் என்னும் உணர்வோடு நம்பி வாழ்ந்து கொண்டிருந்த அநேகர் இன்று தாயின் அன்பையே ஒரு மாயை என்று வாழ்வின் ஒரு காலக்கட்டத்தில் உணர்ந்துவிட்டார்கள். ஆனால், அவர்களுக்கும் ஒரு நற்செய்தியாக இயேசு காட்சி தருகிறார்.
உன் தகப்பனும், தாயும் உன்னைக் கைவிட்டாலும் கர்த்தர் உன்னை கைவிடமாட்டார் (தி.பா. 27:10) என்று பரிசுத்த வேதம் நம்மை உற்சாகப்படுத்துகிறது. பால் குடிக்கும் மகனைத் தாய் மறப்பாளோ? கருத்தாங்கினவள் தன் பிள்ளைமீது இரக்கம் காட்டாதிருப்பாளோ? இவர்கள் மறந்திடினும் நான் உன்னை மறக்கவே மாட்டேன் (எசா. 49:15) என்று கடவுள் வாக்குறுதி கூறுகிறார். தன் குழந்தையைப் பற்றி தாய்க்கு தெரிவதைவிட கடவுள் அதிகமாக தெரிந்திருக்கிறார்.

எனக்கு கிறிஸ்துவைப்பற்றி சிந்திக்க நேரமில்லை. படிக்க வேண்டும்