054. நான் கடவுளை நம்புகிறேன். ஆனால், எந்த கடவுளையும் பின்பற்றவில்லை.

நான் கடவுளை நம்புகிறேன். ஆனால், எந்த கடவுளையும் பின்பற்றவில்லை.

கடவுளை அறியாமலிருக்கும் நிலையில் அவரை பின்பற்றாமல் இருப்பது தவறல்ல. ஆனால், கடவுள் என்று ஒருவருண்டு, இயேசுதான் அந்த உலக இரட்சகரென்று மனதார அறிந்தபின், தான் பாவியாக இருப்பது தெரிந்தும், அந்த பாவ நிலைமையிலிருந்து விடுதலையடைய வேண்டுமென்னும் உணர்வில்லாமல் அவரைப் பின்பற்றாமல் இருப்பது தவறு. எந்த கடவுளையும் என்று கூறுகிறீர்கள். ஆனால், பல கடவுள்கள் இல்லையே, ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்னும் திருமூலருடைய திருவாக்கை வேதாகமம் முழுமையாக ஒத்துக்கொள்கிறது. கடவுளை பின்பற்றும்போது, இந்த உலகில் எந்த பிரச்சனைகள் வந்தாலும், நிம்மதியாக வாழலாம். இயேசு தன் சீடர்களைப் பார்த்து, “அமைதியை (சாந்தி) உங்களுக்கு விட்டுச் செல்லுகிறேன். என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன். நான் உங்களுக்கு தரும் அமைதி, உலகம் தரும் அமைதி போன்றதல்ல. நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம்” (யோவா.14:27) என்று கூறினார். இதனால்தான் இயேசுவை சாந்தீஷ்வரன் (சமாதானத்தின் தேவன்) என்று கூறுகிறோம். பிறந்தது முதல், இறப்பது வரை பலவிதமான வேதனைகள், ஏமாற்றங்கள், எதிர்ப்புக்கள், வெறுப்புக்கள், மிரட்டல்கள், வெறுமைகள் பதட்டங்கள் வழியாகத்தான் மனிதன் கடந்து செல்கிறான். ஆனால், எந்த நிலைமையிலும், இயேசு நம்மோடிருந்தால் ஒரு மனஅமைதி (சாந்தி) நம் உள்ளத்தை எப்போதும் பற்றிக்கொண்டிருக்கும். இதுதான் பரமானந்தம், நித்யானந்தம், பேரானந்தம்.
ஜாதி, மதம், இனம், கட்சி, மொழி எதையும் பார்க்காமல் இயேசுவை இன்றே பின்பற்ற ஆரம்பியுங்கள். உங்களால் இதுவரை விடமுடியாதிருக்கும் பாவ பழக்கவழக்கங்களிலிருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கும். முறிந்து போன உறவுகள் ஒன்றாகும். பழைய பாவ வாழ்க்கையால் உருவான குற்ற மனசாட்சி மறையும். ஒரே ஒரு வாழ்க்கைதான் ஒரு மனிதனுக்கு உண்டு. அதை ஏன் அர்த்தம் இல்லாமல் வீணடிக்க வேண்டும்? மனிதன் எப்படி முழுமையாக வாழ வேண்டும் என்று கற்றுக்கொடுத்த சத்குருவே இயேசு தானே! இராமர் கோயிலை முஸ்லீம்கள் இடிப்பதும், பாபர் மசூதியை இந்துக்கள் இடிப்பதும் ஆன்மீகமாகாது. அது மதத்தீவிரவாதம். சன்மார்க்க, சமரச, சுத்த, சுவிசேஷ, தெய்வீக ஞானஒளி மார்க்கத்தை தெரிந்தெடுங்கள். பரமாத்மா உங்களை ஆசீர்வதிப்பார்.

நீங்கள் எங்களுடைய கோயிலுக்கு வந்தால் நாங்களும் உங்கள் கோயிலுக்கு வருகிறோம்!