கிறிஸ்தவத்தை கடைபிடிப்பது கடினம். என்னால் நிலைத்து நிற்க முடியாது.
“பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே, என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும். ஆம், என் நுகம் அழுத்தாது, என் சுமை எளிதாயுள்ளது” (மத். 11:28-30) என்று இயேசு கூறினார். எனவே, கிறிஸ்துவை பின்பற்றுவது கடினம்போல் இருந்தாலும் உண்மையிலேயே அது கஷ்டமல்ல.
10-வது வகுப்பு படிக்கும் ஒரு மாணவனிடம் ஒரு அறுவை சிகிட்சை கத்தியைக் கொடுத்து ஒரு நோயாளியைக் காட்டி அறுவை சிகிட்சை செய்ய கூறினால், அவனால் முடியாது. ஆனால், அதே மாணவன் சில ஆண்டுகள் படித்து, மருத்துவத்தில் தேர்ந்து அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட அறுவை சிகிட்சை நிபுணர் ஆகிறான். அன்று முடியாதென்று பிரமித்தவன், இன்று சாதாரணமாக அந்த காரியத்தை சாதித்து விடுகிறான். ஓட்டுநர் பள்ளியில் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர் கூட ஒருநாள் மாணவராய் இருந்தவர் தானே! ஓட்டுநருடைய இருக்கையில் ஏறி அமர்ந்தவுடன், ‘இது என்னால் முடியாது’ என்று கூறுவது வாழ்க்கையில் தோல்விக்கு வழிவகுக்கும். செயற்கரிய செய்வார் பெரியார். சாதாரண மனிதர்களால் முடியாத காரியங்களை கடவுளோடு இணைந்த மனிதர்கள் சாதிப்பார்கள். உயர்ந்த உள்ளம் வேண்டும் என்னும் ஏக்கம் கொண்டவர்கள் கஷ்டத்தைப்பற்றி கவலைப்படமுடியாது. உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது. நமக்கு பெரிய விஷயமாகத் தெரிவது கடவுளுக்கு மிகச்சிறிய விஷயமாகத் தெரியும். நம்முன் மலைபோல் நிற்பது கடவுளுக்கு முன் தூசியாகத் தெரியும். லட்சியவாழ்வு என்பது ரோஜாமலர் படுக்கையாக இருக்காது. பாதைகள் முட்கள், மேடுகள், பள்ளங்கள் எல்லாம் வரலாம்.
கிறிஸ்துவின் அன்புக்கொள்கையை கடைபிடிக்க நீங்கள் ஆரம்பிக்கும் போது ஜாதி, மத, இனவெறிபிடித்த கொடியவர்களுக்கு பிடிக்காது. இருள் நிறைந்த மக்களுக்கு ஒளியின் பிள்ளைகளைப் பிடிக்காது. திருடர்களுக்கு நல்லவர்களை பிடிக்காது. நல்ல விஷயத்தில் ஈடுபடப்போகும் உங்களை சிலர் கிண்டல் பண்ணுவார்கள் எதிர்ப்பார்கள், திட்டுவார்கள். ஆனால், எல்லாவற்றையும் தாங்கும் சக்தியை கடவுள் உங்களுக்கு தருவார். மன உறுதியோடு கடவுள் மீது நம்பிக்கை வைப்போரை கடவுள் மனஅமைதியால் உறுதிப்படுத்துகின்றார் (எசா. 26:3). கடவுள் மீது நம்பிக்கை கொண்டோர் வெட்கத்துக்கு உள்ளாகமாட்டார் (உரோ.10:11).
உங்கள் சுயசக்தியாலும், அறிவாலும் இதை சாதிக்க முடியாமலிருக்கலாம். ஆனால், கடவுள் உங்களோடு இருந்தால் எல்லா தொல்லைகளையும் எளிதில் சமாளிக்கலாம். இன்று கடினம் என்று நினைக்கும் காரியங்கள் நாளடைவில் எளிதாக மாறிவிடும். நம்பினோர் கைவிடப்படுவதில்லை. ஆண்டவர் மேல் உன் கவலையைப் போட்டுவிடு. அவர் உனக்கு ஆதரவளிப்பார். அவர் நேர்மையாளரை ஒருபோதும் வீழ்ச்சியுற விடமாட்டார் (தி.பா. 55:22) என்னும் உறுதிமொழியை நம்புங்கள். இயேசு தாமே சோதனைக்கு உள்ளாகி, துன்பப்பட்டதால், சோதிக்கப்படுவோருக்கு உதவிசெய்ய அவர் வல்லவராய் இருக்கிறார் (எபி. 2:18) என்று வேதம் தெளிவாக்குகிறது. கிறிஸ்துவின் நிமித்தம் நாம் பாடுபடும்போது அந்த காட்சியைப் பார்த்து வேடிக்கை பார்க்கும் ஈவு இரக்கமற்ற தெய்வமல்ல இயேசு. உங்களுக்கு ஏற்படுகின்ற சோதனை பொதுவாக மனிதருக்கு ஏற்படும் சோதனையே அன்றி வேறல்ல. கடவுள் நம்பிக்கைக்குரியவர். அவர் உங்களுடைய சக்திக்குமேல் நீங்கள் சோதனைக்குள்ளாக விடமாட்டார் சோதனை வரும்போது அதைத் தாங்கிக்கொள்ளும் வலிமையை உங்களுக்கு அருள்வார் அதிலிருந்து விடுபட வழிசெய்வார் (1கொரி. 10:13) என்று பவுல் திருச்சபையை திடப்படுத்துகிறார்.
இயேசுவை ஏற்றுக்கொண்டால் எங்கள் தெய்வங்களிடமிருந்து தொந்தரவு வராதா ?