நான் பின்வாங்கி விட்டேன்.
நீங்கள் பின்வாங்கி விட்டீர்களென்று சோர்ந்து போக வேண்டாம். இஸ்ரயேல் மக்கள் பாவம் செய்தபின் திரும்பவும் அவர்களை ஆண்டவர் மன்னித்து மறுவாழ்வு கொடுத்தார். “என் பிள்ளைகளே, உங்களில் கிறிஸ்து உருவாகும்வரை, உங்களுக்காக நான் மீண்டும் பேறுகால வேதனையுறுகிறேன்” (கலா.4:19). “சகோதர சகோதரிகளே, ஒருவர் ஏதேனும் குற்றத்தில் அகப்பட்டால் தூயஆவியைப் பெற்றிருக்கும் நீங்கள் கனிந்த உள்ளத்தோடு அவரைத் திருத்துங்கள்” (கலா.6:1) என்று கலாத்திய சபையாருக்கு பவுல் கடிதம் எழுதினார். மேற்கண்ட வசனங்களிலிருந்து, பின்வாங்கியவர்கள் திரும்பவும் மறுவாழ்வடைய முடியுமென்று அறிகிறோம். கிறிஸ்துவோடு மூன்றரை ஆண்டுகள் பணிசெய்த பேதுரு தன் உயிருக்கு பயந்து இயேசுவை எனக்கு தெரியாதென்று மதவாதக் கொலைகாரர்களிடம் பொய் சொன்னார். ஆனால், இயேசு அவனை மன்னித்து மறுவாழ்வு கொடுத்தார். தாவீது உரியாவின் மனைவியிடம் விபச்சாரம் செய்து, உரியாவைக் கொன்றான். ஆனால், அவன் மனம்வருந்தி மன்னிப்புக் கோரியவுடன் தேவன் மன்னித்தார். இவர்களெல்லாரும் ஆண்டவரைத் தெரியாதவர்களல்ல மிகப்பெரிய ஆன்மீகத் தலைவர்கள் என்று வேதம் கூறுகிறது. நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் மீண்டும் எழுந்து விடுவான் (நீதி. 24:16). கவலைப்பட வேண்டாம். பரமேஸ்வரன் உங்களுக்கு கருணை காட்டுவார். நீங்கள் செய்த எல்லா குற்றங்களையும் தேவனிடம் அறிக்கையிட்டு விட்டுவிட்டால் அவர் திரும்பவும் உங்களை புதுப்படைப்பாய் மாற்றுவார் (1யோவா. 1:8,9).
“நீ எந்நிலையிலிருந்து தவறி விழுந்துவிட்டாய் என்பதை நினைத்துப்பார். மனம்மாறு. முதலில் நீ செய்துவந்த செயல்களை இப்பொழுதும் செய். நீ மனம்மாறத் தவறினால், நான் உன்னிடம் வந்து, உனது விளக்குத்தண்டை அது இருக்கும் இடத்திலிருந்து அகற்றிவிடுவேன்” (தி.வெ. 2:5) என்று இறைவன் எச்சரிக்கிறார். “இறுதி வரை மனஉறுதியுடன் இருப்போரே மீட்கப்படுவர்” (மத். 10:22). கடந்ததை ஒரு கெட்ட கனவாக நினைத்து மனம்திரும்புங்கள். மேலும் ஆலோசனைகள் தேவையானால் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.