080. எனது விரோதிகளை மன்னிக்க முடியாது.

எனது விரோதிகளை மன்னிக்க முடியாது.

உங்களால் முடியாததுதான். ஆனால், கடவுளால் முடியும். நீங்கள் கடவுளோடு இணையும்போது முடியும் (மத். 19:26) என்று இறைவன் சொல்கிறார். மனிதனால் எல்லாம் முடியுமானால் கடவுளே தேவையில்லையே. என்னை விட்டு பிரிந்து உங்களால் எதுவும் செய்யமுடியாது (யோவா. 15:5) என்றும் நம்புகிறவனுக்கு எல்லாம் முடியும் (மாற். 9:23) என்றும் இயேசு தெம்பூட்டுகிறார். நம்மை வலுவூட்டும் தூயஆவியார் நம்மோடு இருந்தால் நம்மால் எதையும் சாதிக்க முடியும் (பிலி. 4:13). பிறரை மன்னிக்கும் அன்பை இயேசு நமக்குத் தருவார் (உரோ. 5:5). அந்த அன்பின் ஆவியானவர் நமக்குள் வரும்போது மன்னிக்கும் வல்லமையைப் பெற்றுக்கொள்வோம் (தி.பணி. 1:8).
மத். 18:23-35 வரையுள்ள வசனங்களை வேதத்தில் வாசித்துப் பாருங்கள். நாம் பிறரை மன்னிக்காவிட்டால் ஆண்டவரும் நம்மை மன்னிக்க முடியாது என்று வேதம் கூறுகிறது. எங்களுக்கு எதிராக குற்றம் புரிந்துள்ளோரை நாங்கள் மன்னித்துள்ளதுபோல எங்கள் குற்றங்களை மன்னியும் (மத். 6:12) என்று நாம் கடவுளிடம் ஜெபிக்க வேண்டுமென்று இயேசு கற்றுக்கொடுத்தார். ஒருவரைப்பற்றி ஒருவருக்கு ஏதாவது முறையீடு இருந்தால் மன்னியுங்கள். கடவுள் உங்களை மன்னித்ததுபோல நீங்களும் மன்னிக்கவேண்டும் (கொலோ. 3:13). ஒருவருக்கொருவர் நன்மைசெய்து பரிவுகாட்டுங்கள். கடவுள் உங்களை கிறிஸ்து வழியாக மன்னித்ததுபோல நீங்களும் ஒருவரை ஒருவர் மன்னியுங்கள் (எபே. 4:32) என்று திருத்தூதர் பவுலடிகள் அறிவுறுத்துகிறார். விவேகமுடையோர் எளிதில் சினமடையார். குற்றம் பாராதிருத்தல் நன்மதிப்பைத் தரும் (நீதி. 19:11) என்று சாலமோன் ஞானி கூறுகிறார். நாம் ஒரு தவறு செய்யும்போது பிறர் நம்மை மன்னிக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறோம். இப்படியிருக்க பிறரை நாம் மன்னிக்க முடியாமல் இருப்பது தவறல்லவா? இயேசு கூறினார், பிறர் உங்களுக்கு செய்ய வேண்டுமென நீங்கள் விரும்புகிறவற்றை எல்லாம், நீங்களும் அவர்களுக்கு செய்யுங்கள் (மத். 7:12). உங்கள் சுயபெலத்தால் மன்னிக்க முடியாது. ஆனால், நீங்கள் ஆண்டவரோடு இணையும்போது அது எளிதாகிவிடும்.

கடவுள் இல்லை