081. கடவுள் இல்லை

கடவுள் இல்லை

மனித இயல்பை மட்டும் உடைய ஒருவர் கடவுளின் ஆவிக்கு உரியவற்றை ஏற்றுக்கொள்வதில்லை. அவை அவருக்கு மடமையாய்த் தோன்றும். அவற்றை அவரால் அறிந்துகொள்ளவும் முடியாது. ஏனெனில் அவற்றைத் தூய ஆவியின் துணைகொண்டே ஆய்ந்துணர முடியும் (1கொரி.2:14)
ஒருமுறை ஒரு நாத்திகரிடம், நீங்கள் ஏன் கடவுளை நம்புவதில்லை? என்று கேட்டேன். கடவுளை நான் இதுவரை கண்டதில்லை அதனால் எனக்கு கடவுள் நம்பிக்கையில்லை என்று பதிலளித்தார். ‘என் கண்ணால் கடவுளைக் கண்டால் மட்டும்தான் நம்புவேன்’ என்று கூறுவோர் நம்மிடையே பலருண்டு. நம் உடலுக்குள் குடல், நுரையீரல், இதயம், மூளை இவையெல்லாம் உண்டு என்று கண்களால் பார்க்காமலேயே நாம் எப்படி நம்புகிறோம்? நம் கண்களால் நம் மூளையை இதுவரை பார்க்கவில்லை என்பதால் நமக்கு மூளையே இல்லை என்று கூறமுடியுமா?
ஒருமுறை ஒரு நாத்திகர், “என் தாய், தந்தைதான் என் தெய்வம்” என்று கூறினார். உடனே நான், “உங்கள் அப்பா என்று ஓரு நபரை உங்கள் தாய் சுட்டிக்காட்டினார்கள் அதை நீங்கள் நம்பி ஏற்றுக்கொண்டீர்கள். ஆனால், நிஜமாகவே அவர்தான் உண்மையான தந்தை என்று எப்படி கண்டுபிடித்தீர்கள்? மரபணு பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தித்தான் தந்தையாக ஏற்றுக் கொண்டீர்களா? உங்கள் அம்மாதான் உண்மையான தாய் என்று எப்படி நம்புகிறீர்கள்? நீங்கள் உங்கள் தாயின் வயிற்றினின்று வெளியே வரும்போது பார்த்தீர்களா? கண் திறக்கவே பலமணி நேரமாகி விடுகிறதே” என்றேன். அந்த நாத்திகரால் ஒரு பதிலையும் சொல்ல முடியவில்லை. பெரியார் என்று ஒரு நபர் உயிரோடு இருந்ததாக வரலாறு கூறுவதை நாத்திகர்களும், ஆத்திகர்களும் நம்புகிறார்கள். பெரியாரை நான் பார்க்கவில்லை என்பதற்காக, ‘பெரியார் என்று ஒருவர் பிறக்கவோ வாழவோ இல்லை’ என்று நான் கூறினால் வரலாற்று அறிஞர்கள் என்னைப் பார்த்து என்ன கூறுவார்கள்?
நான் கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தாலும், தனிப்பட்ட முறையில் தெய்வ நம்பிக்கை இல்லாமல்தான் இருந்தேன். ஒரு நாள் என் தந்தை மரணத்துக்கு நெருக்கமான ஒரு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். பெரிய ஆஸ்பத்திரிகளுக்கு என் தந்தையாரை எடுத்துச் சென்றும் விடுதலை கிடைக்கவில்லை. மருத்துவர்களால் நோயை கண்டுபிடிக்கவே முடியவில்லை. அப்போது ஒரு ஆவிக்குரிய சபையின் போதகர் தன் மனைவியோடு வந்து என் அப்பாவுக்காக இறைவனிடம் கண்ணீரோடு ஜெபித்தார்கள். அவர்களுடைய ஜெபத்தைக் கேட்ட கடவுள் அந்நேரமே அப்பாவை முழுமையாகக் குணமாக்கினார். மருத்துவர்களால் கைவிடப்பட்டு, நம்பிக்கையிழந்த எங்கள் குடும்பத்துக்கு ஒரு புத்துயிர் கிடைத்தது. அந்த சந்தோஷத்தை எப்படி விளக்குவதென்றே தெரியவில்லை. கடவுளில்லை என்று அறைகுறை அறிவோடு பிதற்றிக்கொண்டிருந்த நான் வாயடைத்துப் போனேன். கடவுள் உயிரோடிருக்கிறார் அவர் மக்களுக்கு நன்மை செய்கிறார் என்னும் கொள்கையை சந்துகள் பொந்துகள் எல்லாம் நுழைந்து பேச ஆரம்பித்தேன். அநேகர் கடவுளை கண்டடைந்தார்கள். கடவுளைக் கண்களால் காணமுடியாமல் இருந்தாலும் அவருடைய வல்லமையை நாம் உணரமுடியும். மின்சாரம், காற்று இவைகளை கண்ணால் பார்க்க முடியவில்லை என்பதால் அவைகள் தேவையில்லை என்று ஒதுக்க முடியுமா?
சென்னை சகோதரர் தினகரன் என்ற இறைப்பணியாளரின் பிரார்த்தனைப் பெருவிழாவிற்கு லட்சக்கணக்கான மக்கள் கூடிவருவார்கள். பலர் அற்புதங்களைப் பெற்றுக்கொண்டு தங்கள் சொந்த பந்தங்களிடமும் நண்பர்களிடமும் சென்று தங்கள் புதுவாழ்வைப் பற்றி சாட்சியம் சொல்லும்போது ஆயிரக்கணக்கான புதிய மக்களும் அக்கூட்டங்களில் பங்கெடுத்து அற்புதங்களை பெற்று இன்றும் ஆண்டவரைப் புகழ்கிறார்கள். அற்புதங்களை கண்கூடாக கண்ட மக்களிடம் போய் ‘கடவுள் இல்லை’ என்று கூறமுடியுமா? சகோதரர் மூலமாக அற்புதங்களை பெற்றுக்கொண்டவர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் உயர்ந்ததைப் பார்த்த தமிழக அரசு, அவர் செய்த சமுதாய சேவையை பாராட்டி, அவரது மறைவுக்குப்பின் சென்னை அடையாரில் உள்ள ‘கிரீன்வேஸ் சாலை’ யின் பெயரை Dr. DGS தினகரன் சாலை’ என்று மாற்றியது. ஒரு மனிதனால் மக்களுக்கு எந்த லாபமுமில்லாமல் அவருடைய பெயரை அரசு மேன்மைப் படுத்துமா?
‘பெரியார்திடல்’ என்று சென்னை எழும்பூரில் ஒரு அரங்கமுண்டு. அங்கு நாத்திகர்கள் கூட்டம் நடத்துகிறார்கள். கிறிஸ்தவர்களும் கூட்டம் நடத்த அனுமதி அளித்துள்ளார் பெரியார். மற்றவர்களுக்கு பெரியார் அனுமதிக்கவில்லை. ஏன்? பெரியார் தனிப்பட்ட முறையில் மதவாதிகளுடைய சுயநலப்போக்கையும் கடவுளின் பெயரால் நடக்கும் அராஜகங்களையும், மூடநம்பிக்கைகளையும் சமுதாய ஏற்றத்தாழ்வுகளையும் எதிர்த்துப்பேச நாத்திகத்தை ஒரு கருவியாக பயன்படுத்தினாரே தவிர, கிறிஸ்துவின் அன்புக்கொள்கையை ஒருபோதும் குறை கூறியதில்லை. கண்ணைமூடிக் கொண்டு ‘உலகமே இருட்டாக இருக்கிறது’ என்று கூறுவது புத்திசாலித்தனமா? கடவுளில்லை என்று மூடன் கூறுகிறான்; (தி.பா. 14:1) என்று புனித வேதம் கூறுகிறது.

கடவுள் இருந்தால் இவ்வுலகில் மக்கள் ஏன் துன்பப்படுகிறார்கள் ?