082. கடவுள் இருந்தால் இவ்வுலகில் மக்கள் ஏன் துன்பப்படுகிறார்கள் ?

கடவுள் இருந்தால் இவ்வுலகில் மக்கள் ஏன் துன்பப்படுகிறார்கள் ?

முடிவெட்டும் அழகு நிலையங்கள் ஆயிரக்கணக்கில் இருந்தாலும், நாட்டில் பலர் பறட்டைத் தலையோடு அலங்கோலமாய் சுற்றுவதன் காரணம் என்னவென்று கேட்டால் நீங்கள் என்ன பதில் சொல்வீர்களோ, அதுதான் இந்த கேள்விக்கும் பதில். வாழ்வையும் சாவையும், நன்மையையும், தீமையையும் இன்று நான் உனக்கு முன்பாக வைத்துள்ளேன் (இ.ச.30:15) என்கிறார் கடவுள். இதில் வாழ்வையும் நன்மையையும் தெரிந்து கொள்ள வேண்டியது நம் பொறுப்பு. இன்று உங்கள் முன்பாக ஆசியையும் சாபத்தையும் வைக்கிறேன். நான் இன்று உங்களுக்கு விதித்த உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளைகளை நீங்கள் கடைபிடித்தால் ஆசீர்வாதமும், உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளைகளைக் கடைபிடிக்காமல், நான் இன்று உங்களுக்கு விதித்த வழிகளிலிருந்து விலகி நடந்து, நீங்கள் அறியாத வேற்றுதெய்வத்தை பின்பற்றினால் சாபமும் உண்டாகும் (இ.ச.11:26-28).
சந்தைக்குப்போனால் உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் ஊட்டச்சத்துமிக்க உணவு வகைகளும், உயிர்காக்கும் மருந்துகளும் கிடைக்கும். ஆனால் இதே சந்தையின் ஓரமாக சாராயக்கடையும் இருக்கிறது. இதில் எதை தெரிந்துகொள்ள வேண்டும் என்பது சந்தைக்கு செல்லும் நம்மைச் சார்ந்தது. ஒரு கடைக்கு ஒரு பொருள் வாங்கப் போனால் அது நல்ல பொருளா, நமது தேவையைப் பூர்த்தி செய்யுமா என அறிந்து, ஆராய்ந்து வாங்குவது நம் கையில்தான் இருக்கிறது. நாம் நலமோடு வாழ்வதும் வளம்குன்றி அழிவதும் நம்மைப் பொறுத்திருக்கிறது. ஊதாரியாக வாழ்ந்துவிட்டு கடவுளைக் குறை கூறுவதில் என்ன நியாயமிருக்கிறது? ஒரு பாதை ஒருவருக்கு நல்வழிபோலத் தோன்றலாம். ஆனால், முடிவிலோ அது சாவுக்கு நடத்தும் பாதையாகி விடும் (நீதி.14:12) என்று வேதம் நம்மை எச்சரிக்கின்றது. கடவுளில்லை என்னும் கொள்கை நம் பார்வைக்கு பகுத்தறிவுப் பாதைபோல் தெரியும். ஆனால், அதைப்போன்ற ஆபத்தான பாதை வேறு எதுவுமே இல்லை. பாவம் செய்ய சாத்தான் ஒருவனைத் தூண்டும்போதுதான் அவன் சாத்தான் வசப்பட்டு அந்த பாவத்தைச் செய்துவிடுகிறான். திருடுபவர்கள், திருட்டு ஆவிக்கு அடிமைப்பட்டிருக்கிறார்கள். விபச்சார ஆவிக்கு அடிமைப்பட்டவர்கள், தாங்கள் முயற்சி செய்தாலும் விபச்சார பாவத்திலிருந்து வெளியே வரமுடியாமல் கஷ்டப்படுகிறார்கள். பொதுவாக மனிதன் குற்றம் செய்தால் அதன் மொத்த பொறுப்பும் மனிதன்தான் என்று நாம் நினைக்கத்தோன்றும். ஒரு மனிதன் மற்றொருவனை கொலை செய்துவிட்டால் அந்த கொலைகாரனுக்கு தூக்குத்தண்டனை கொடுத்து அவனைக் கொன்றுவிடுகிறது அரசாங்கம். ஆனால், பாவத்தை கட்டுப்படுத்தும் வலிமை இயேசுவின் அன்புக்கு மட்டுமேயுண்டு என்னும் சத்தியத்தை அரசினர் அறிந்தால் எவ்வளவு நலமாயிருக்கும்.
ஒருவன் தன் மனைவியோடு மட்டும்தான் வாழவேண்டும். “தன் மனைவியை விலக்கிவிட்டு வேறொரு பெண்ணை மணப்பவன் எவனும் விபச்சாரம் செய்கிறான்” (லூக்.16:18) என்று பைபிள் எச்சரிக்கிறது. ஆனால், என் கடவுளுக்கு இரண்டு மனைவிகள், ஆதலால் நானும் இரண்டு மனைவிகளை வைத்திருக்கிறேன் என்று கூறுவோரும் நம் பாரத மண்ணிலுண்டு. என் கடவுளுக்கு ஆறாயிரம் கோபியர்கள் உண்டு எனவே நான் எத்தனை பேரிடம் வேண்டுமென்றாலும் சேர்ந்து வாழலாம் என்று மனம் போன போக்கில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் பலருக்கு எயிட்ஸ் என்னும் நோய் இலவச இணைப்பாக தொற்றிக்கொள்ளும். ஒருத்தியை வைத்துக்கொண்டு வாழ்வை சமாளிப்பதே கடினமாக இருக்கும் குழப்படியான இவ்வுலகில், பலரோடு எப்படி நிம்மதியாக வாழமுடியும்? இப்படித்தான் வாழவேண்டும் என்னும் ஒரு வரைமுறையோடு வாழ்வோருக்கு அதிகம் துன்பமில்லை. எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்னும் முரண்பாடான வாழ்க்கை வேதனை மிகுந்தது அல்லவா! எயிட்ஸ் நோய் பெரும்பாலும் பாலியல் முறைகேடுகளால் உருவாகிறது. இந்த கொடிய நோய்க்கு எத்தனை பேர் பலியாகிவிட்டார்கள். உலகிலேயே எயிட்ஸ் நோயாளிகள் அதிகமாக இருப்பது இந்தியாவில்தான் என்னும் கசப்பான உண்மையை அண்மையில் ஒரு பத்திரிக்கையில் வாசித்தேன். கடவுள் காட்டிய வரைமுறையை மிஞ்சி வாழ்ந்துவிட்டு கடவுளை குறைசொல்வதில் என்ன நியாயமிருக்கிறது? மெகா சீரியல்களில் வரும் காட்சிகளைப் பார்த்து, நம் தாய்மார்கள் தொலைக்காட்சி பெட்டியின் முன் உட்கார்ந்து கதறிக்கதறி அழுகிறார்களே! இவர்கள் அழுவதற்கு காரணம் கடவுளா?
பணஆசை, புகழ்ஆசை, பெண்ஆசை எல்லாவற்றினின்றும் விடுபட ஆசை வேண்டும். அப்போது துன்பமின்றி வாழலாம். ஒரு பிராமணருடைய வீட்டிற்குள் காய்கறி கொண்டு சென்ற ஒரு வியாபாரியை வீட்டிற்குள் அனுமதிக்காமல் வெளியே போகச் சொன்னார்கள் அவ்வாள். ஏனென்றால், அவர் பிராமணர் அல்லாதவராம். வெளியேறிய அந்த வியாபாரி, ‘சீ..! என்னை இவ்வளவு கேவலப்படுத்திவிட்டார்களே’ என்று ஆதங்கப்படுகிறார். இவர் இவ்வாறு புறக்கணிக்கப்படுவதன் காரணம் கடவுளா? உண்மையாகவே கடவுள் மேல்ஜாதி, கீழ்ஜாதி என்று மக்களைப் பிரித்திருப்பாரா? யோசிக்க வேண்டாமா? கடவுளின் பெயரில் மனிதன் செய்த சதிவேலை அல்லவா! உண்மையான சாந்தீஸ்வரனை தேடினால் நிம்மதி உண்டு. ஒரு குறிப்பிட்ட வேகத்திற்கு மேல் வண்டியை ஓட்டக்கூடாது என்று தெரிந்தும் அதிக வேகத்தில் ஓட்டி, விபத்திற்குள்ளாகி, ஒருவர் இறந்துவிட்டால் பழியை கடவுள் மீது போட முடியுமா ?

எல்லோரும் கடவுளின் பிள்ளைகள் தானே. இரக்கமுள்ள இறைவன் எப்படி தன் மக்களை நரகத்தில் போடுவார் ?