இயேசுவால் என் நோய்களை குணப்படுத்த முடியுமா ?
நிச்சயமாக முடியும். நம்மை குணப்படுத்த வைத்தீஷ்வரன் இயேசுஅருளிய உறுதி மொழிகளைப் பார்ப்போம்.
நீ உன் கடவுளாகிய ஆண்டவரை வழிபட வேண்டும். அவர் உன் உணவு, தண்ணீர் இவற்றின் மேல் ஆசிவழங்குவார். அவர் உன் நடுவிலிருந்து நோயை அகற்றுவார் (வி.ப. 23:25).
உன் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்கு நீ அக்கரையுடன் செவிசாய்த்து, அவர் பார்வையில் நலமாகத் தோன்றுவதை செய்து அவர் கட்டளைகளைப் பின்பற்றி அவர் சட்டங்கள் அனைத்தையும் கைக்கொண்டால். நான் எகிப்துக்கு வரசெய்த கொள்ளை நோய்களை உன் மேல் வரவிடமாட்டேன். ஏனெனில், நானே உன்னை குணமாக்கும் ஆண்டவர் (வி.ப. 15:26) என்று ஆண்டவரே கூறுகிறார்.
கடவுள் தன் வார்த்தையை அனுப்பி நோய்களை குணப்படுத்துவார் (தி.பா.107:20). நம்பிக்கையோடு இறைவனிடம் வேண்டும்போது நோயுற்றவர் குணமாவார். ஆண்டவர் அவரை எழுப்பிவிடுவார் (யாக். 5:15) என்று புனித யாக்கோபு அறிவுறுத்துகிறார்.
துன்ப வேளையில் என்னை கூப்பிடுங்கள் உங்களை காத்திடுவேன் அப்பொழுது நீங்கள் என்னை மேன்மைப்படுத்துவீர்கள் (தி.பா. 50:15) என்று கர்த்தர் கூறுகிறார். நாம் கடவுளின்மீது அன்புகூர்ந்தால் கடவுள் நம்மை விடுவிப்பார் (தி.பா. 91:14). நமக்கு வாக்களித்தவர் நம்பிக்கைக்கு உரியவர் (எபி. 10:23). ஆண்டவர் சொன்னசொல் தவறாத நம்பகமானவர் (2தெச. 3:3). இயேசுவின் நாமத்தில் தேவன் கோடிக்கணக்கானவர்களை குணப்படுத்தியிருக்கிறார். இயேசு உங்களை குணமாக்க நீங்கள் செய்யவேண்டியது என்னவென்று கேட்கிறீர்களா? இயேசுவால் குணப்படுத்த முடியுமென்று முழுமையாக நம்பவேண்டும். நம்பிக்கையில்லாமல் எவரும் கடவுளை பிரியப்படுத்த முடியாது (எபி. 11:6).
சந்தேகத்தோடு நின்ற மார்த்தாவை பார்த்து “நீ நம்பினால் கடவுளின் மாட்சியை காணமுடியும்” (யோவா. 11:40). நம்புகிறவனுக்கு எல்லாம் முடியும் (மாற். 9:23). நாம் எந்த நன்மையைக் கேட்டாலும் நம்பிக்கையோடு ஐயப்பாடின்றி கேட்க வேண்டும். ஐயப்பாடு கொள்பவர்கள் காற்றினால் அலைக்கழிக்கப்படும் கடல் அலையைப் போன்றவர்கள் (யாக்.1:6). மொத்தத்தில் உங்கள் நம்பிக்கை உங்களை வாழவைக்கும். கடவுளிடமிருந்து நீங்கள் அற்புதத்தை பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால் உங்களுக்கு தவறு செய்தவர்களை நீங்கள் மனதார மன்னிக்கவேண்டும் (யாக். 5:16).
பல கடவுள்களில் ஒரு கடவுளாக பார்க்காமல், இயேசுவை மட்டுமே நமது இரட்சகரென்று நம்பினால், நிச்சயமாக அவர் உங்களை விடுவிப்பார். வாய்திறந்து எதிர்மறையான வார்த்தைகளைப் பேசாமல் நேர்மறையான வார்த்தைகளை பேசுங்கள்.