ஆதித்திருச்சபையின் நாட்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவிகளை உடைய பல யூதர்கள் இயேசுவை ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் அந்த காலகட்டத்தில் அவர்கள் விவாகரத்து பண்ணவில்லை. இரட்சிக்கப்பட்ட பிறகும் அந்த மனைவிகளுடனேயே வாழ்ந்தார்கள். திருத்தூதர் பவுல் கொரிந்து சபைக்கு கடிதம் எழுதும்போது, ‘உங்களிடையே விபச்சாரம் உண்டெனக் கேள்விப்படுகிறேன். ஒருவன் தன் தந்தையின் மறுமனைவியை வைத்துக் கொண்டிருக்கிறான்| (1கொரி. 5:1) என்று கண்டிக்கிறார். அவனுடைய தந்தைக்கு பல மனைவிகள் இருந்ததால்தான் அது சாத்தியமானது. தந்தைக்கு ஒரே மனைவி இருந்தால் தன் தந்தையின் மறுமனைவி என்று எழுதாமல் தன் தாய் என்று எழுதியிருப்பார், ‘தகப்பனுடைய முன்னாள் மனைவி’ என்று கூறாமல் மறுமனைவி என்று கூறினமையால், ஆரம்பசபையில் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளை உடைய கணவர்கள் இருந்தார்கள் என்று தெளிவாக அறிகிறோம். மகன் தந்தையின் மறுமனைவியை வைத்துக் கொண்டிருப்பதை கண்டித்த பவுல், அவனுடைய தந்தை மறுமனைவியை வைத்துக்கொண்டிருப்பதை தவறு என்று சுட்டிக்காட்டவில்லையே!
மணமான பெண் ஒருவர் கணவன் உயிரோடு இருக்கும் வரையில்தான் திருமண சட்டத்திற்கு கட்டுப்பட்டிருக்கிறார். கணவன் இறந்துவிட்டால் கணவனோடு வாழவேண்டும் என்கிற சட்டத்திலிருந்து விடுதலை பெறுகிறார். ஆகையால், கணவன் உயிரோடிருக்கும்போது, ஒரு பெண் வேறொருவரோடு வாழ்ந்தால், விபசாரி என்னும் பெயர் கிடைக்கும். ஆனால், கணவன் இறந்துபோனால், அவள் திருமண சட்டத்தினின்று விடுதலை பெற்றவராகிறார். ஆகவே, பின்பு அவர் வேறோருவருக்கு மனைவியானால் விபச்சாரியல்ல (உரோ. 7:2,3). தன்னை மணந்த கணவன் உயிரோடிருக்கும்வரை, மனைவி கணவனை விட்டு விலகத் தேவையில்லை. அப்படி அவன் துரத்தினால், அவள் விபச்சாரியாவதற்கு அவனே பொறுப்பு. “எவரும் தம் மனைவியை விலக்கிவிடக்கூடாது. அப்படி செய்வோர் எவரும் அவரை விபச்சாரத்தில் ஈடுபடச் செய்கின்றனர்” (மத். 5:32).
“வேசித்தனம் இராதபடிக்கு அவனவன் தன்தன் சொந்த மனைவியையும், அவளவள் தன்தன் சொந்த கணவனையும் உடையவர்களாக இருக்க வேண்டும். கணவனுடைய உடலியல் தேவைகளை மனைவியும், மனைவியுடைய உடலியல் தேவைகளை கணவனும் நிறைவேற்ற வேண்டும். கணவனுக்கு ஒரு பெண் மனைவியாயிருப்பதுவரை கணவன் தன் மனைவிக்கு செய்ய வேண்டிய கடமையை செய்யவேண்டும். மனைவிக்கு தம் உடலின்மேல் அதிகாரமில்லை. கணவனுக்கே அந்த அதிகாரமுண்டு. அப்படியே கணவனுக்கு தம் உடலின்மேல் அதிகாரமில்லை. மனைவிக்கே அந்த அதிகாரமுண்டு. மணவாழ்க்கைக்குரிய உரிமைகளை ஒருவருக்கு ஒருவர் மறுக்காதீர்கள். இருவரும் ஒத்துக்கொண்டால் இறைவேண்டலில் ஈடுபடுவதற்காக சிறிதுகாலம் பிரிந்து வாழலாம். ஆனால், உணர்ச்சிகளை அடக்கமுடியாத நிலையில் சாத்தான் உங்களை சோதிக்காதபடி, பிரிந்த நீங்கள் மீண்டும் கூடிவாழுங்கள்” (1கொரி. 7:1-5) என்று பவுல் அறிவுறுத்துகிறார்.
நீங்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும் முன்பே மூன்று மனைவிகளை திருமணம் செய்துவிட்டீர்கள். எனவே, மனைவி கணவனிடமிருந்து பிரிந்து வாழக்கூடாது. கணவனும் மனைவியை விலக்கிவிடக்கூடாது (1கொரி. 7:10,11) என்ற ஆலோசனைக்கு கீழ்ப்படியுங்கள். கடவுள் விவாகரத்து கலாச்சாரத்தை வெறுக்கிறார் (மத். 19:8). கடவுள் இணைத்ததை மனிதன் பிரிக்கக்கூடாது (மத். 19:6). ஆனால், உங்களுடைய மனைவிகள் உங்களது கிறிஸ்தவ விசுவாசத்தை மதிக்காமல், வெறுத்து உங்களை விட்டுவிட தீர்மானித்தால் அவர்கள் போகட்டும் (1கொரி. 7:15). உம்மோடு வாழ விரும்பினால் வாழட்டும் (1கொரி. 7:12). எனவே, இப்போதைய உங்கள் சூழ்நிலையில் உங்கள் மூன்று மனைவிகளையும் நீங்கள் கடைசி வரை மனைவிகளாக வைத்து கொள்வதுதான் நியாயம். ஆனால், பணம் உள்ளவன் எத்தனை மனைவிகளையும் வைத்துக் கொள்ளலாம் என்பது சுத்தமான ஆன்மீகமல்ல. இந்தியாவில் ஏற்கனவே பெண்கள் பற்றாக்குறை என்று மக்கள்தொகை புள்ளியியல் அறிஞர்கள் கூறுகிறார்கள். இந்நிலையில் காசில்லாத ஏழைகள் எப்படி திருமணம் செய்வார்கள்?
சபையின் பொறுப்பான தலைவர்கள் ஒரே மனைவியை உடையவர்களாக வாழ எதிர்பார்க்கப்படுகிறார்கள். “சபை கண்காணிப்பாளராக இருப்பவர், குறைசொல்லுக்கு ஆளாகாதவராயும், ஒரு மனைவி கொண்டவராயும், அறிவுத்தெளிவு, கட்டுப்பாடு, விருந்தோம்பல், கற்பிக்கும் ஆற்றல் ஆகியவற்றை உடையவர்களாயும் இருக்கவேண்டும். திருத்தொண்டர்கள் ஒரு மனைவி கொண்டவர் களாயும், பிள்ளைகளையும் சொந்த குடும்பத்தையும் நல்ல முறையில் நடத்துகிறவர்களாகவும் இருக்க வேண்டும் (1திமொ. 3:2-12) என்று திருத்தூதர் பவுல் சபைத்தலைவர்களுக்கு அறிவுரை கூறுகிறார்.
ஒரு கணவன் ஒரு மனைவியோடு வாழ்வதே தலைசிறந்த இல்வாழ்க்கை என்பது மறுக்கமுடியாத உண்மை. ஆதாமுக்கு ஒரே மனைவியாக ஏவாளை மட்டும்தான் கடவுள் கொடுத்தார். அதனால், எல்லாருமே அந்த கொள்கையை கடைபிடிக்க வேண்டுமென்று ஆண்டவர் சபைத் தலைவர்களை முன்மாதிரியாக வாழக் கட்டளையிடுகிறார். ‘நாமிருவர் நமக்கொருவர்’ என்னும் தற்போதைய தமிழ்கொள்கைக்கு நான் ஆதரவாளன்தான். ‘நாம் நால்வர் நமக்கு இருபத்து நால்வர்’ என்பது குழப்பமல்லவா! ஆனாலும், நீங்கள் இயேசுவை அறிவதற்கு முன்பே திருமணம் செய்து விட்டீர்கள். சமாதானமாய் வாழும் குடும்பத்தை சட்டம் பேசி பிரித்துவிடுவது கிறிஸ்தவ உபதேசமல்ல. இயேசு பாவத்தை பயங்கரமாக கடிந்து கொண்டார் ஏனெனில், மக்கள்மீது அவ்வளவு அன்பு வைத்திருந்தார். இன்று கண்டிக்க ஆட்களுண்டு. அன்பு செய்ய ஆட்கள் இல்லையே! சட்டம்பேச போதகர்களுண்டு. இயேசு பாவிகளை ஏற்றுக்கொள்வதுபோல் ஏற்றுக்கொள்ள மனிதநேயர்கள் இல்லையே! ஒருவர் தன் மூன்று மனைவிகளோடு பல்லாண்டு சேர்ந்து வாழ்ந்தபின், அதில் இருவரை விவாகரத்து செய்துவிட்டாரென்று வைத்துக்கொள்வோம். அப்படி தள்ளிவிடப்பட்டவர்களில் ஒருத்தியை திருமணம் செய்ய, இதுவரை திருமணமே செய்யாத ஒரு கிறிஸ்தவர் முன்வருவாரா? மனம்திரும்பிய விபச்சாரியை தன் மகளாக இயேசு ஏற்றுக்கொண்டார். இன்று மனம் திரும்பிய முன்னாள் விபச்சாரியை மனைவியாக ஏற்றுக்கொள்ள எத்தனை கிறிஸ்தவர்களால் முடியும்?
கடவுள் சபிக்காதவனை நான் எப்படி சபிக்க முடியும்? கர்த்தர் வெறுக்காதவனை நான் எப்படி வெறுக்க முடியும்? (எண். 23:8). கணவனுடைய சரீரத்தின்மேல் அதிகாரமுடைய உங்கள் மனைவிகள் உங்களைவிட்டு போகவேண்டிய தேவையில்லை. இறையரசின் பொருட்டு, முழுமனதோடு தங்களை இறையருளால் அண்ணகர்களாக்கிக் கொள்வது மேன்மையானது. ஆனால், கணவன் இயேசுவை பின்பற்றும் ஒரே காரணத்தால், மனைவி கட்டாயமாக பிரம்மச்சாரியாக்கப்படுவதோ சந்நியாசியாக்கப்படுவதோ இயேசுவின் கொள்கையல்ல. அது கடுமையான பழைய ஏற்பாட்டு மதச்சட்டங்களின் புதுவடிவம். ஆண்டவர் யாரையும் கட்டாயப்படுத்தாத அன்புக் கடவுள். கட்டாயப்படுத்தி நாம் எதையும் செய்யக்கூடாது. கடவுளுக்கு காணிக்கை கொடுப்பதுகூட மனவருத்தத்தோடோ கட்டாயத்தினாலோ கொடுக்க வேண்டாம். முகமலர்ச்சியோடு கொடுப்பவரே கடவுளின் அன்புக்கு உரியவர் (2கொரி. 9:7) என்று புனித பவுல் கூறுகிறார். இன்று சிலர் ஏதோ ஒரு வசனத்தை எடுத்துக்கொண்டு அதன் உள்அர்த்தத்தை அறியாமல் மக்களைக் குழப்புகிறார்கள். வேதாகமத்தின் சாராம்சமே அன்புதானே.
பலதாரமணத்தை தங்கள் மதச்சட்டதின் அடிப்படைத் தத்துவமாக வைத்திருக்கும் பல லட்சம் இஸ்லாமியர்கள் மனம் மாறும்போது அவர்களை இன்முகத்தோடு வரவேற்க வேண்டிய கிறிஸ்தவர்கள், அவர்களை வாசலிலேயே வைத்து துரத்தலாமா? காயமடைந்து வரும் புதியவர்களுக்கு மருந்தாய் இருக்க வேண்டிய திருச்சபை, அவர்களை இன்னும் அதிகம் காயப்படுத்தலாமா ?