012) கடவுள் இஸ்ரயேல் மக்களை சிறப்பாக நேசித்தாரே! சாதி இல்லை என்று எப்படி சொல்கிறீர்கள்?

பைபிளை நாம் வாசிக்கும்போது, பல இடங்களில் கடவுள் இஸ்ரயேலர்களை தன்னுடைய சிறப்பான மக்களாக குறிப்பிடுவதை காணமுடியும்.
ஆண்டவர் யாக்கோபைத் தமக்கென்று தேர்ந்துகொண்டார்; இஸ்ரயேலைத் தமக்குரிய தனிச்சொத்தாகத் தெரிந்தெடுத்தார் (திருப்பாடல்கள் 135:4).
நீங்கள் உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் தூய மக்களினம். மண்ணுலகின்மீது உள்ள எல்லா மக்களினங்களிலும் உங்களையே தம் தனிச்சொத்தாக ஆண்டவர் தேர்ந்துகொண்டார் (இணைச்சட்டம் 14:2).
ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார், “இஸ்ரயேல் என் மகன்; என் தலைப்பிள்ளை” (விடுதலைப்பயணம் 4:22).
நீயோ, இஸ்ரயேலே! என் அடியவனே! நான் தெரிந்தெடுத்த யாக்கோபே! என் அன்பன் ஆபிரகாமின் வழிமரபே! (எசாயா 41:8),
என் ஊழியன் யாக்கோபே, நான் தேர்ந்துகொண்ட இஸ்ரயேலே, இப்பொழுது செவிகொடு (எசாயா 44:1)
“யாக்கோபே, இஸ்ரயேலே, இவற்றை நீ நினைவிற்கொள்வாய்; நீ என் ஊழியன்; நான் உன்னை உருவாக்கினேன்; நீதான் என் அடியான்; இஸ்ரயேலே, நான் உன்னை மறக்கமாட்டேன்” (எசாயா 44:21) என்று கடவுள் குறிப்பிடுகிறார்.
இப்படி முழு உலகத்துக்கும் பொதுவான தெய்வம் ஓர் இனக் குழுவிடம் மட்டும் ஏன் இப்படித் தனி அன்பு காட்டவேண்டும்?
“உங்கள் கடவுளாகிய ஆண்டவரே, தெய்வங்களுக்கெல்லாம் கடவுள், இறைவர்க்கெல்லாம் இறைவன். மாட்சியும் ஆற்றலும் உள்ள அஞ்சுததற்குரிய கடவுள் அவரே. அவர் ஓரவஞ்சனை செய்வதில்லை; கையூட்டு வாங்குவதும் இல்லை” (இணைச்சட்டம் 10:17) என்று இறைத்தூதர் மோசே சொல்கிறாரே!
“கடவுள் யூதருக்கு மட்டுமா கடவுள்? பிற இனத்தாருக்கும் அவர் கடவுள் அல்லவா? ஆம், பிற இனத்தாருக்கும் அவரே கடவுள்” (உரோமையர் 3:29) என்று பவுல் தெளிவுபடுத்துகிறாரே!
“தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்” (யோவான் 3:16) என்று இயேசு கிறிஸ்து கூறினாரே!
கடவுள் ஆள் பார்த்துச் செயல்படுவதில்லை (உரோமையர் 2:11) என்றெல்லாம் வேதம் கூறுகிறதே!
இஸ்ரவேல் மக்களை கடவுள் சிறப்பாக நேசித்த காரணம் என்ன என்பதை ஆண்டவரே சொல்வதை கவனியுங்கள்.
உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் தூய மக்களினம் நீங்கள். மண்ணிலுள்ள எல்லா மக்களினங்களிலும் உங்களையே தம் சொந்த மக்களாக கடவுளாகிய ஆண்டவர் தேர்ந்து கொண்டார். எல்லா மக்களிலும் நீங்கள் திரளானவர்கள் என்பதற்காக ஆண்டவர் உங்கள்மீது அன்பு கொண்டு உங்களைத் தேர்ந்துகொள்ளவில்லை. உண்மையில், எல்லா மக்களிலும் நீங்கள் சொற்பமானவர்களே. மாறாக, உங்களிடம் அன்புகூர்ந்ததனாலும், உங்கள் மூதாதையருக்கு ஆணையிட்டுக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் பொருட்டும், ஆண்டவர் தமது வலிமைமிகு கரத்தால் உங்களைப் புறப்படச் செய்து, அடிமைத்தன வீட்டினின்றும் எகிப்து மன்னனாகிய பார்வோனின் கையினின்றும் உங்களை விடுவித்தார் (இணைச்சட்டம் 7:6-8) என கடவுள் தெளிவாக்குகிறார். அதாவது இஸ்ரயேலர்களுடைய மூதாதையருக்குக் கடவுள் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவதற்காக அப்படி நேசித்தார் என்று அறிகிறோம்.
யார் மூதாதையர்கள்? என்ன வாக்குறுதி? என்பவற்றை நாம் ஆராய்வோம்.
முதன்முதலில் இஸ்ரயேலர்கள் என்பவர்கள் யார் என்று நாம் அறியவேண்டும். மெசொப்பொத்தாமியா என்னும் நாட்டிலே ஆபிராம் என்று ஒருவர் வாழ்ந்துவந்தார். ஆபிராமும் அவரோடு இருந்தவர்களும் எபிரேய மொழியைப் பேசியதால் அவர்கள் ‘எபிரேயர்கள்’ என்று அழைக்கப்பட்டனர்.
ஒருநாள் கடவுள் ஆபிராமுக்கு தரிசனமாகி, “உன் நாட்டிலிருந்தும் உன் இனத்தவரிடமிருந்தும் உன் தந்தை வீட்டிலிருந்தும் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் நாட்டிற்குச் செல். உன்னை நான் பெரிய இனமாக்குவேன்; உனக்கு ஆசி வழங்குவேன். உன் பெயரை நான் சிறப்புறச் செய்வேன்; நீயே ஆசியாக விளங்குவாய். உனக்கு ஆசி கூறுவோர்க்கு நான் ஆசி வழங்குவேன்; உன்னைச் சபிப்போரை நானும் சபிப்பேன்; உன் வழியாக மண்ணுலகின் மக்களினங்கள் அனைத்தும் ஆசி பெறும்” என்றார். ஆண்டவர் ஆபிராமுக்குக் கூறியபடியே அவர் புறப்பட்டுச் சென்றார் (தொடக்கநூல் 12:2-4). அப்போது ஆபிராமுக்கு குழந்தை இல்லாமல் இருந்தது. அவர் சிலைவழிபாடு செய்து கொண்டிருந்தார்.
கடவுளைப்பற்றி கொஞ்சம்கூட தெரியாத குடும்பத்தில் பிறந்த ஆபிராம், தன்னிடம் பேசிய கடவுள் நம்பகமானவரா என்று அவரை சோதிப்பதற்காக கடவுள் ஒரு அற்புதத்தை செய்துகாட்ட இவர் கேட்கவில்லை. கடவுள் சொன்ன வாக்குறுதிகளை அப்படியே நம்பி, அவர் சொன்ன தேசத்துக்கு போனார். எனவே, பெருங்கூட்ட மக்களுக்கு தந்தை என்னும் பொருள்படும் ‘ஆபிரகாம்’ என்ற பெயரை கடவுள் ஆபிராமுக்கு சூட்டினார் (தொடக்கநூல் 17:5).
ஆபிரகாம் கடவுளின் வழிகாட்டுதலுக்குக் கீழ்படிந்ததால், சொன்ன சொல் தவறாத கடவுள் தான் உறுதிமொழி சொன்னதுபோலவே ஆபிரகாமுக்கு ஆசி வழங்கினார். குழந்தை இல்லாதிருந்த ஆபிரகாம் சாராள் தம்பதியர் ஈசாக்கு என்னும் மகனைப் பெற்றெடுக்கக் கடவுள் அருள் பாலித்தார். ஈசாக்குக்கு யாக்கோபு, ஏசா என்னும் மகன்களை கடவுள் கொடுத்தார். ஏசா தவறான ஆன்மீகத்தைப் பின்பற்றி மெய்க்கடவுள் வணக்கத்திலிருந்து விலகினார். அவருடைய சந்ததியினருக்கு ‘ஏதோமியர்கள்’ என்று பெயர். யாக்கோபு கடவுள்மீது வைத்திருந்த முரட்டு நம்பிக்கையின் பொருட்டு கடவுள் அவருக்கு ‘இஸ்ரயேல்’ என்னும் பெயரை சூட்டினார் (தொடக்கநூல் 32:28). இஸ்ரயேலுக்கு 12 பிள்ளைகள் பிறந்தனர். அவர்களும் அவர்களுடைய சந்ததிகளும் ‘இஸ்ரயேலர்கள்’ என்று அழைக்கப்பட்டனர். ஆக, ஆபிரகாம் கடவுளுக்கு முழுமனதோடு கீழ்படிந்ததால்தான் அவருடைய சந்ததிகளைக் கடவுள் சிறப்பாக நேசித்தார் என்று அறிகிறோம். ஒரு தகப்பன் தன் வார்த்தைக்குக் கீழ்படியாத பிள்ளையிடம் காட்டும் அன்பைவிட, தன் வார்த்தைக்குக் கீழ்படியும் பிள்ளைக்கு அதிக அன்புகாட்டுவது இயல்புதானே! அதுதானே நீதி.
ஆபிராமைத் தேர்ந்தெடுத்து, ஊர் என்ற கல்தேயர்களின் நகரினின்று வெளிக்கொணர்ந்து அவர் பெயரை ‘ஆபிரகாம்’ என்று மாற்றியமைத்த கடவுளாகிய ஆண்டவர் நீரே! உம்மீது பற்றுக் கொண்ட அவருடைய இதயத்தைக் கண்டீர்! கானானியர், இத்தியர், எமோரியர், பெரிசியர், எபூசியர், கிர்காசியர் ஆகியோரின் நாட்டை அவருடைய வழிமரபினருக்குத் தருவதாக அவரோடு உடன்படிக்கை செய்தீர்! நீர் நீதி உள்ளவர்! எனவே உமது வார்த்தையை நிறைவு செய்தீர்! (நெகேமியா 9:7-8) என்று பக்தன் கூறுகிறான்.
அதனால்தான் நீங்கள் என் வார்த்தைக்குச் செவிசாய்த்து என் உடன்படிக்கையைக் கடைபிடித்தால் அனைத்துலகும் என் உடைமையேயெனினும், நீங்களே எல்லா மக்களினங்களிலும் என் தனிச் சொத்தாவீர்கள் (விடுதலைப்பயணம் 19:5) என்கிறார் கடவுள்.
கடவுள் ஆபிரகாமின் வழிமரபினராகிய இஸ்ரயேலர்களை தன் சொந்த, சிறப்பான மக்கள் கூட்டமாக ஆசி வழங்கியதன் மற்றுமொரு காரணத்தையும் பார்ப்போம்.
கடவுள் ஆபிரகாமைச் சோதிக்க அவரை நோக்கி, “ஆபிரகாம்!” என அழைக்க, அவரும் “இதோ! அடியேன்” என்றார். அவர், “உன் மகனை, நீ அன்புகூரும் உன் ஒரே மகனான ஈசாக்கை அழைத்துக்கொண்டு மோரியா நிலப்பகுதிக்குச் செல். அங்கு நான் உனக்குக் காட்டும் மலைகளில் ஒன்றின் மேல் எரிபலியாக அவனை நீ பலியிடவேண்டும்” என்றார். அவ்வாறே ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து தமது கழுதைக்குச் சேணமிட்டு, தம் வேலைக்காரருள் இருவரையும் தம் மகன் ஈசாக்கையும் அழைத்துக் கொண்டு எரி பலிக்கு வேண்டிய விறகுக் கட்டைகளை வெட்டியபின், கடவுள் தமக்குக் குறிப்பிட்டிருந்த இடத்தை நோக்கிப் புறப்பட்டுச் சென்றார். மூன்றாம் நாள் ஆபிரகாம் கண்களை உயர்த்தி அந்த இடத்தைத் தூரத்திலிருந்து பார்த்தார். உடனே ஆபிரகாம் தம் வேலைக்காரர்களை நோக்கி, “நீங்கள் கழுதையோடு இங்கேயே காத்திருங்கள். நானும், பையனும் அவ்விடம் சென்று வழிபாடு செய்தபின் உங்களிடம் திரும்பி வருவோம்” என்றார். பின் ஆபிரகாம் எரிபலிக்கு வேண்டிய விறகுக் கட்டைகளை எடுத்துத் தம் மகன் ஈசாக்கின் மீது வைத்தார். நெருப்பையும் கத்தியையும் தம் கையில் எடுத்துக்கொண்டார். இவ்வாறு இருவரும் சேர்ந்து சென்றனர். அப்பொழுது ஈசாக்கு தன் தந்தையாகிய ஆபிரகாமை நோக்கி, “அப்பா!” என அழைக்க, அவர், “என்ன மகனே!” என்று கேட்டார். அதற்கு அவன், “இதோ நெருப்பும் விறகுக் கட்டைகளும் இருக்கின்றன. எரிபலிக்கான ஆட்டுக்குட்டி எங்கே?” என்று வினவினான். அதற்கு ஆபிரகாம், “எரிபலிக்கான ஆட்டுக் குட்டியைப் பொறுத்தமட்டில், கடவுளே பார்த்துக்கொள்வார் மகனே” என்றார். இருவரும் சேர்ந்து தொடர்ந்து நடந்தனர்.
ஆபிரகாமுக்குக் கடவுள் குறிப்பிட்டுச் சொல்லிய இடத்தை அவர்கள் அடைந்தனர். அங்கே ஆபிரகாம் ஒரு பலிபீடம் அமைத்து அதன்மேல் விறகுக் கட்டைகளை அடுக்கி வைத்தார். பின் தம் மகன் ஈசாக்கைக் கட்டி, பீடத்தின் மீதிருந்த விறகுக் கட்டைகளின் மேல் கிடத்தினார். ஆபிரகாம் தம் மகனை வெட்டுமாறு தம் கையை நீட்டிக் கத்தியைக் கையிலெடுத்தார். அப்பொழுது ஆண்டவரின் தூதர் வானத்தினின்று “ஆபிரகாம்! ஆபிரகாம்!” என்று கூப்பிட, அவர் “இதோ அடியேன்!” என்றார். அவர், “பையன்மேல் கை வைக்காதே; அவனுக்கு எதுவும் செய்யாதே; உன் ஒரே மகனையும் எனக்குப் பலியிட நீ தயங்கவில்லை என்பதிலிருந்து நீ கடவுளுக்கு அஞ்சுபவன் என்று இப்போது நான் அறிந்து கொண்டேன். ஆண்டவர் கூறுவது இதுவே! நான் என்மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். உன் ஒரே மகனை எனக்குப் பலியிடத் தயங்காமல் நீ இவ்வாறு செய்தாய். ஆதலால் நான் உன்மீது உண்மையாகவே ஆசி பொழிந்து, விண்மீன்களைப் போலவும் கடற்கரை மணலைப் போலவும் உன் வழிமரபைப் பலுகிப் பெருகச் செய்வேன். உன் வழிமரபினர் தம் பகைவர்களின் வாயிலை உரிமையாக்கிக் கொள்வர். மேலும், நீ என் குரலுக்குச் செவிகொடுத்ததனால் உலகின் அனைத்து இனத்தவரும் உன் வழிமரபின் மூலம் தங்களுக்கு ஆசி கூறிக்கொள்வர்” என்றார் (தொடக்கநூல் 22:1-18).
ஆபிரகாமின் இறைநம்பிக்கையை மதித்து அவருக்கு மட்டும்தானே கடவுள் ஆசி வழங்கவேண்டும்; அவருடைய சந்ததிகளை கடவுள் ஏன் ஆசீர்வதிக்கவேண்டும்? என கேள்வி கேட்போர் உண்டு.
உங்கள் மூதாதையர்க்கு அவர் அன்பு காட்டியதால், அவர்களுக்குப் பின் அவர்களுடைய வழிமரபினரைத் தேர்ந்து கொண்டார். எனவே அவரே முன்நின்று தமது பேராற்றலுடன் உங்களை எகிப்திலிருந்து கூட்டி வந்தார் (இணைச்சட்டம் 4:37) என்று கடவுள் கூறுகிறார்.
நாம் இறக்கும்போது விட்டுச்செல்லும் செல்வங்களை நம் பிள்ளைகளுக்குத்தானே கொடுத்துச் செல்கிறோம். அதை அரசாங்கத்திடம் ஒப்படைப்பதில்லையே! அதன் காரணம் என்ன? நாம் நம் பிள்ளைகள்மேல் வைத்திருக்கும் அன்புதானே அப்படி கொடுக்கவைக்கிறது! இவ்வுலகில் பிள்ளைகளை பெற்ற எல்லாருமே பொதுவாக தங்களைவிட தங்கள் பிள்ளைகளைத்தானே அதிகமாக நேசிக்கிறார்கள்! அதேபோலத்தான் நன்மை செய்பவர்களின் 1000 தலைமுறைகளுக்கு கடவுள் அருள் பாலிக்கிறார். அதேபோல, தீமை செய்பவர்களை மூன்றிலிருந்து நான்கு தலைமுறைவரை தண்டிக்கிறார்.
என்னைப் புறக்கணிக்கும் மூதாதையரின் பாவங்களைப் பிள்ளைகள்மேல் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் தண்டித்துத் தீர்ப்பேன். மாறாக, என்மீது அன்புகூர்ந்து என் விதிமுறைகளைக் கடைப்பிடிப்போருக்கு ஆயிரம் தலைமுறைக்கும் பேரன்பு காட்டுவேன் (விடுதலைப்பயணம் 20:5-6) என்கிறார் கடவுள். ஆக, ஆபிரகாம் கடவுளுக்கு கீழ்படிந்ததால், அவருடைய தலைமுறைகளை கடவுள் ஆசீர்வதித்தார்.
ஒருமுறை ஈசாக்கின் நாட்களில் பஞ்சம் வந்தபோது கடவுள், “நான் உன்னோடு இருந்து உனக்கு ஆசி வழங்குவேன். இந்த நிலங்கள் அனைத்தையும் உனக்கும் உன் வழிமரபினர்க்கும் தருவேன். உன் தந்தை ஆபிரகாமுக்கு நான் ஆணையிட்டுக் கூறிய வாக்கை உறுதிப்படுத்துவேன். உன் வழிமரபை விண்மீன்களைப்போல் பெருகச் செய்வேன். உன் வழிமரபினர்க்கு இந்த நிலங்கள் அனைத்தையும் தருவேன். உலகின் அனைத்து இனத்தாரும் உன் வழிமரபினர்மூலம் தங்களுக்கு ஆசி கூறிக்கொள்வர். ஏனெனில், ஆபிரகாம் என் குரலுக்குச் செவிசாய்த்து என் நியமங்களையும் கட்டளைகளையும் விதிமுறைகளையும் சட்டங்களையும் கடைப்பிடித்தான்” என்றார் (தொடக்கநூல் 26:3-5)
அன்றிரவு ஆண்டவர் ஈசாக்குக்கு தோன்றி, “உன் தந்தை ஆபிரகாமின் கடவுள் நானே, அஞ்சாதே. ஏனெனில், நான் உன்னோடு இருக்கிறேன். உனக்கு ஆசி வழங்கி, என் ஊழியன் ஆபிரகாமின் பொருட்டு உனது வழிமரபைப் பெருகச் செய்வேன்” என்றார் (தொடக்கநூல் 26:24).
“இளைஞனாய் இருந்திருக்கிறேன்; இதோ! முதியவன் ஆகிவிட்டேன்; ஆனால், நேர்மையாளர் கைவிடப்பட்டதை நான் கண்டதில்லை; அவர்களுடைய மரபினர் பிச்சை எடுப்பதை நான் பார்த்ததில்லை” (திருப்பாடல்கள் 37:25) என்று தாவீது கூறுகிறார்.
“உன் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவிக்கொடு. நான் இன்று உனக்கு விதிக்கும் அவருடைய கட்டளைகள் அனைத்தையும் கடைப்பிடிப்பதில் கருத்தாயிரு. அப்போது, உலகிலுள்ள மக்களினங்கள் அனைத்திற்கும் மேலாக, உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னை உயர்த்துவார்” (இணைச்சட்டம் 28:1) என்று கடவுள் சொல்கிறார்.
ஆனால், கடவுளுடைய ஆசிபெற்ற அதே இஸ்ரயேலர் பாவம் செய்யும்போது, கடவுள் அவர்களுக்குத் தண்டனை கொடுப்பதிலும் முக்கியத்துவம் கொடுத்தார் என்பதையும் நாம் நுட்பமாகப் புரிந்து கொள்ளவேண்டும். “உன் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவிகொடாமலும், இன்று நான் உனக்கு விதிக்கும் இந்தக் கட்டளைகளையும், நியமங்களையும் கடைப்பிடிப்பதில் கருத்தின்றியும் இருந்தால், இந்தச் சாபங்கள் எல்லாம் உன்மேல் வந்து உன்னில் நிலைக்கும்” (இணைச்சட்டம் 28:15) என்றும் கடவுள் கூறுகிறார்.
“உலகத்திலுள்ள எல்லா மக்களினங்களுக்குள்ளும் உங்களைத் தான் நான் சிறப்பாக அறிந்துகொண்டேன்; ஆதலால், உங்கள் தீச்செயல் அனைத்திற்காகவும் நான் உங்களைத் தண்டிப்பேன்” (ஆமோஸ் 3:2) என்று எச்சரித்த கடவுள், இஸ்ரயேலர் தவறு செய்தபோது தண்டிக்கவும் செய்தார். எடுத்துக்காட்டாக, இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப் பட்டதைச் செய்தனர். அவர்களை ஆண்டவர் மிதியானியரிடம் ஏழு ஆண்டுகள் ஒப்படைத்தார். மிதியானியரின் ஆட்சியில் இஸ்ரயேலர் கொடுமைப்படுத்தப்பட்டனர். எனவே மிதியானியரிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்வதற்காக மலைப்பிளவுகளையும், குகைகளையும், கோட்டைகளையும் தங்கள் பதுங்கிடமாக அமைத்துக் கொண்டனர் (நீதித்தலைவர்கள் 6:1-2)

One thought on “012) கடவுள் இஸ்ரயேல் மக்களை சிறப்பாக நேசித்தாரே! சாதி இல்லை என்று எப்படி சொல்கிறீர்கள்?

  1. Vasanth Kumar

    ✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️🔥🔥🔥🔥🔥🔥👌👌👌👌👌👌👌🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
    ஐயா, உங்களுடைய இந்த விளக்கமானது மிக மிக தனித்துவமானதாக இருக்கிறது. எங்களை போன்ற வளர்ந்து வரும் வாலிபர்களுக்கு மிகவும் பிரயோஜனமாக உள்ளது. வேதத்தை தேடித் தேடி படிக்க மிகவும் ஆர்வத்தை தூண்டும் வகையில் உள்ளது இந்த கேள்வி பதில் தொடர். இன்னும் அநேக மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு சிறப்பாக பதில் அளிக்க தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. உங்களை எங்களுக்கு கொடுத்ததற்காக தேவனை மிகவும் ஆழமான இருதயத்தோடு ஸ்தோத்தரிக்கிறேன். 🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *