2. இயேசு தெய்வம் என்று பைபிளில் எழுதப்பட்டுள்ளதா ?

     நீங்கள் பைபிளைத் தெளிவாக படித்தால் நிச்சயமாகக் காணலாம்.

     நம் பெருமைமிக்க கடவுளும், மீட்பருமாகிய இயேசுகிறிஸ்துவின் மாட்சி வெளிப்படப் போகிறது. அவர் நம்மை எல்லா நெறி கேடுகளிலிருந்தும் மீட்டு, நற்செயல்களில் ஆர்வமுள்ள தனக்குரிய மக்களாகத் தூய்மைப்படுத்த தம்மையே ஒப்படைத்தார் (தீத்.2:13,14).

     ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார். ஒர் ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார். ஆட்சிப்பொறுப்பு அவர் தோள்மேல் இருக்கும், அவர் திருப்பெயரோ வியத்தகு ஆலோசகர், வலிமைமிகு இறைவன், நித்தியத் தந்தை, அமைதியின் அரசர் என்று அழைக்கப்படும் (எசா.9:6).

     மனிதர் என்னும் முறையில் கிறிஸ்துவும் அவர்களிடமிருந்தே தோன்றினார். இவரே எல்லாவற்றுக்கும் மேலான கடவுள். என்றென்றும் போற்றுதற்குரியவர் (உரோ.9:5).

     நம் கடவுளும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவினால் விளைந்த ஏற்புடைமையின் அடிப்படையில் எங்களைப் போன்ற மதிப்புயர்ந்த நம்பிக்கையைப் பெற்றுள்ளோருக்கு, இயேசு கிறிஸ்துவின் பணியாளனும் திருத்தூதனுமான சீமோன் பேதுரு எழுதுவது (2பேது.1:1).

     இறைமகன் வந்து உண்மையான இறைவனை அறிந்து கொள்ளும் ஆற்றலை நமக்குத் தந்துள்ளார். இது நமக்குத் தெரியும். நாம் உண்மையான இறைவனோடும், அவர் மகன் கிறிஸ்துவோடும் இணைந்து வாழ்கிறோம். இவரே உண்மைக் கடவுள். இவரே நிலை வாழ்வு (1யோவா.5:20).

     இயேசுவின் நேரடிச் சீடரான தோமா இயேசுவை நோக்கி, “என் ஆண்டவரே, என் கடவுளே” (யோவா.20:28) என்று அழைத்தார்.

     இறைத்தன்மையின் முழுநிறைவும் உடலுருவில் கிறிஸ்துவுக்குள் குடிகொண்டிருக்கிறது (கொலோ. 2:9).

     கடவுள் வடிவில் விளங்கிய இயேசு கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை கொள்ளையாடின பொருளாகக் கருதாமல், தம்மையே வெறுமையாக்கி, அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார் (பிலி.2:6,7) என்று பவுல் இயேசுவின் தெய்வத் தன்மையைத் தெளிவுபடுத்துகிறார்.

     கடவுளுடைய மாட்சிமையின் சுடரொளியாகவும், அவருடைய இயல்பின் அச்சுப்பதிவாகவும் விளங்கும் இவர், தம் வல்லமைமிக்க சொல்லால் எல்லாவற்றையும் தாங்கி நடத்துகிறார். மக்களை பாவங்களினின்று தூய்மைப்படுத்திய பின், விண்ணகத்தில் இவர் பெருமைமிக்க கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார் (எபி.1:3).

     தமது சொந்த இரத்தத்தால் தமதாக்கிக் கொண்ட கடவுளின் திருச்சபையை மேய்ப்பதற்கு தூயஆவியார் உங்களைக் கண்காணிப்பாளராக ஏற்படுத்தியுள்ளதால், உங்களையும் மந்தை முழுவதையும் கவனமுடன் காத்துக்கொள்ளுங்கள் (தி.பணி.20:28). இயேசுவாகிய கடவுள் தன் சுய இரத்தத்தால் சபையை சம்பாதித்தார் என்று மேற்கண்ட வசனம் தெளிவுபடுத்துகிறது. மேற்கண்ட வசனங்களிலிருந்து இயேசுவே மெய்யான தெய்வம் என்று அறிகிறோம்.

இயேசு தன்னைத்தான் தெய்வமென்று கூறினாரா ?