நீங்கள் கூறுவதுபோல் இயேசு இந்தியாவுக்கு வந்து, இங்குள்ள இந்துமத குருக்களிடம் கற்றுத்தான் தனது பணியைச் செய்ய ஆரம்பித்தார் என்றால் அவரது கொள்கை, நோக்கம், கலாச்சாரமெல்லாம் இந்துமதத்தை சார்ந்தல்லவா இருக்கவேண்டும்! கிறிஸ்துவின் கொள்கைக்கும், இந்துமதக் கொள்கைக்கும் சம்பந்தமே இல்லையே. இயேசு, “கடவுள் ஒருவரே, அவரே வணக்கத்துக்கு தகுதியானவர்” (லூக். 4:8, மாற். 12:29) என்று மக்களுக்கு போதித்தார் என்று பரிசுத்த வேதம் கூறுகிறது. ஆனால் இந்துமதம், ‘எல்லாமே தெய்வம்தான்’ என்றல்லவா கற்பிக்கிறது. இயேசு வாசித்து, போதித்த பழைய ஏற்பாட்டில், பொய் தெய்வங்களை வணங்கக்கூடாது என்று கூறப்பட்டிருக்கிறது. ஆக, பொய்தெய்வம் என்றும் மெய்தெய்வம் என்றும் வேறுபடுத்திக் கூறுவது தெளிவாக தெரிகிறது. இந்த தத்துவத்தை இந்து மதத்தில் பார்க்கவே முடியவில்லையே.
இயேசு, இந்துமத வேதங்களான ரிக், யஜூர், சாம, அதர்வ வேதங்களிலிருந்தோ, இராமாயணம், மகாபாரதம் என்னும் இதிகாசங்களிலிருந்தோ, பகவத்கீதையிலிருந்தோ, எதையும் மேற்கோள்காட்டவோ, இவற்றை புனித புத்தகங்கள் என்று சுட்டிக்காட்டவோ இல்லையே! மாறாக, கிறிஸ்தவர்களின் பரிசுத்த வேதாகமத்தின் பழைய ஏற்பாட்டில் தன்னைக் குறித்து எழுதப்பட்ட தீர்க்கதரிசனங்கள் எப்படி தன்வாழ்வில் நிறைவேறியது என்பதை அல்லவா கூறினார்!
இந்துமத குருக்களிடம் கற்றதை இயேசு போதித்திருந்தால், இந்துக்கள் கடைபிடிக்கும் இந்துமத அடிப்படைத் தத்துவமாகிய ‘வருணாசிரமதர்மம்’ என்னும் சமூக விரோத ஜாதி ஏற்றத்தாழ்வுக் கொள்கையை தானும் பின்பற்றி பிறருக்கு பரப்பவும் செய்திருக்க வேண்டுமே! ஆனால், மனிதருக்குள் பிறப்பு அடிப்படையில் ஏற்றத்தாழ்வு இருக்கக்கூடாது என்றல்லவா பிரசங்கித்தார். “பிறர் உனக்கு என்ன செய்யவேண்டுமென்று நீ விரும்புகிறாயோ, அதையே நீயும் பிறருக்கு செய்” (மத்.7:12), “உங்களை நீங்கள் நேசிப்பதுபோல பிறரையும் நேசியுங்கள்” (லூக்.10:27) என்னும் உன்னதக் கொள்கைகளை அல்லவா இயேசு நமக்கு கற்றுத் தந்திருக்கிறார்! “யூதன் என்றும் கிரேக்கன் என்றும் இல்லை, அடிமை என்றும் உரிமைக்குடிமகன் என்றும் இல்லை, எல்லோரும் கருணையின் வடிவம்; கிறிஸ்துவுக்குள் ஒரே மனிதகுலமாக இருக்கிறார்கள்” (கொலோ.3:11) என்றல்லவா கிறிஸ்தவம் நம்மை படிப்பிக்கிறது! ஒரு பிராமணன் தன்னை நேசிப்பதுபோல, தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்களை நேசித்தால் இந்தியாவின் வடிவம் எப்படியிருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்!
இந்துமதம் நம்பும் பலபிறவிக் கொள்கையை இயேசு நம்பியிருந்தால், மனிதர் ஒருமுறை சாவுக்கு உட்படுகின்றனர். பின்னர் இறுதித்தீர்ப்பு வருகிறது. இதுவே அவர்களுக்கென உள்ள நியதி (எபி.9:29) என்று திருத்தூதர் பவுல் எழுதியிருக்கமாட்டாரே!
தன் சிறுபருவத்திலிருந்து முப்பது வயதுவரை இயேசு தன் தாய்க்கும் தன் வளர்ப்புத் தந்தைக்கும் கீழ்படிந்திருந்தார் என்றும் ஞானத்திலும் இறைஅருளிலும், மனித தயவிலும் வளர்ந்தார் என்றும் வேதம் தெளிவாக்குகிறது (லூக்.2:51,52). இயேசு தன் வாலிப நாட்களில் ஒரு தச்சு வேலையாளராக பணியாற்றினார் (மாற்.6:3) என்று வேதம் பதிவு செய்கிறது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய இயேசு எப்படி உலகத்தைப் படைத்திருக்க முடியும் ?