இந்தியாவின் வீதிகளில் கிடக்கும் தொழுநோயாளிகளை, ஆதரவற்ற அநாதைகளை தூக்கி எடுத்து உணவு, உறைவிடம், உடை, மருந்து இவற்றை இலவசமாக கொடுத்து மறுவாழ்வளிக்க யாருக்கு பயப்படவேண்டும்?
அரசாங்கத்தாரின் கண்களுக்கு புலப்படாத குக்கிராமங்களில் எங்கள் செலவில் மருத்துவமனைகளை, பள்ளிக்கூடங்களை கட்டி சேவை செய்ய யாருக்கு பயப்படவேண்டும்?
தற்கொலை செய்யப்போகும் இளைஞர்களுக்கு எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையை இயேசுவின் நற்செய்தியின் மூலம் கொடுக்க யாருக்குக் கணக்கு கொடுக்கவேண்டும்?
‘நிம்மதி தரும் ஆலோசனை மையங்களை’ நிறுவி விவாகரத்து பண்ணும் நிலையில் மனமுடைந்திருக்கும் மக்களுக்கு ஆலோசனை கொடுத்து, இறைவேண்டலால் இணைத்து வைப்பதை தவறென்று எந்த மதவாதியால் குற்றம் சாட்டமுடியும்?
கடன் பளுவை தாங்க முடியாமல் தவிக்கும் மக்களுக்காக கண்ணீரோடு இறைவனிடம் மன்றாடி கடனைத் தீர்த்தது தவறு என்று யார் கூறமுடியும்?
குடிவெறியில் மனைவியை மிதித்து, வீட்டுப் பொருட்களை உடைத்த காட்டுமிராண்டிகளுக்காக கடவுளிடம் மன்றாடி அவர்களை மனிதர்களாக மாற்ற யாருக்கு பயப்படவேண்டும்?
லட்சியமற்ற வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த இளைஞர்களின் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை கற்றுக்கொடுத்த கிறிஸ்தவ இறைப்பணியாளர்களை எப்படி குறை கூறமுடியும்?
வேலையில்லாமல் கஷ்டப்பட்ட மக்களுக்காக உருக்கமாக மன்றாடி வேலை வாங்கித் தந்தது பாதகமா?
ரோகிணிதோஷம், சனிதோஷம், நாகதோஷம், செவ்வாய்தோஷம், மூலநட்சத்திரம் என்று வாழ்க்கையே பாலைவனமாகிவிட்ட விரக்தியில் மூழ்கிப்போன மக்களுக்கு இலவசமாக ஒளிமயமான எதிர்காலத்தை இயேசு கொடுக்கிறார்.
குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்பதை தவறு என்று சுட்டிக்காட்ட யாருக்கு பயப்பட வேண்டும்?
திருமண தடைகளால் திருமணமே ஆகாமலிருந்த மக்களுக்கு இயேசுவின் அருளால் திருமணம் நடந்ததை கொடுமை எனக் கூறமுடியுமா? திருமணமாகி குழந்தையில்லாமல் பல வருடங்கள் மனஉளைச்சலால் அவதிப்பட்ட தம்பதியருக்காக ஜெபித்து, இறைவன் குழந்தைப் பாக்கியத்தை கொடுத்தது அநியாயமா?
பிசாசுத் தொல்லையால் அவதிப்படும் கோடிக்கணக்கான மக்களுக்காக இறைவனை வேண்டி விடுதலை வாங்கித் தந்தது பாவமா?
இந்தியாவில் விபச்சாரத்தை விதியாக கொண்டிருந்த அபலைகளுக்கு ஆண்டவரின் அன்பை எடுத்துச் சொல்லி புதுவாழ்வு கொடுத்தது குற்றமா?
இந்துக்களாயிருக்கும்போது ‘ஜாதி’ என்னும் பேய்க்காக உயிரையே விட துணிந்தவர்கள், இன்று இயேசுவை ஏற்றுக்கொண்டபின், ஜாதிபார்க்காமல் திருமணத்தையே செய்ய முடிகிறதே. இந்த சீர்திருத்தக் கொள்கைகளைப் பரப்புவதற்கு யாருக்கு பயப்படவேண்டும்?
வரதட்சணையை கேட்டு வாங்குவது பாவம் என்னும் சமுதாய விழிப்புணர்வை உருவாக்க யாருக்கு பயப்பட வேண்டும்?
லஞ்ச சாக்கடையில் ஊறிய அரசு அலுவலர்களுக்கு நேர்மையைப் கற்பிக்க யாருக்கு பயப்படவேண்டும்? கொள்ளைக் கூட்டத்தலைவருக்கு தெய்வீக அன்பை எடுத்து சொல்லி அவர்களை நாட்டின் நற்குடிமக்களாக மாற்ற யாருக்கு பயப்பட வேண்டும்?
கங்காதேவியின் கோபத்தை தணிப்பதாக தங்கள் குழந்தைகளை கங்கையாற்றில் எறியும் கொடூர கலாச்சாரத்தை தவறென்று சுட்டிக்காட்ட யாருக்கு பயப்படவேண்டும்?
தீபாவளிக்குக் கோடிக்கணக்கான பணச்செலவில் பட்டாசு வெடித்து, எத்தனை குடிசைகள் தீக்கிரையாகிப் போகின்றன? இதைத் தவறென்று சுட்டிக்காட்ட யாருக்கு பயப்படவேண்டும்?
சுனாமி, நிலநடுக்கம் வந்து லட்சக்கணக்கான வீடுகள் இடிந்து தரைமட்டமானபோது, அவர்களுக்கு ஜாதிமத பேதமின்றி மனதுருக்கத்தோடு ஓடிச்சென்று வண்டி வண்டியாக உணவுப் பொருட்களை, துணிமணிகளைக் கொடுக்க யாருக்கு பயப்பட வேண்டும்?
இயேசுவின் அன்போடு கிறிஸ்தவ அமைப்புகள் செயலாற்றியதை கண்டு, கிராமம் கிராமமாக மக்கள் இயேசுவின் அன்பை ஏற்றுக்கொண்டதை யார் தடைப்பண்ண முடிந்தது?
கிறிஸ்தவர்கள் செய்வது அனைத்துமே சமுதாய முன்னேற்றப்பணிகள் தானே தவிர, சமூக விரோதப்பணிகளல்ல.